Published:Updated:

மகா சிவராத்திரி சிறப்பு சங்கல்ப வழிபாடு!

கீழ்ப்பசார் சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்ப்பசார் சிவபெருமான்

கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் தரிசனம்

`ஏனவெண் கொம்பினொடும்
இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையும்
குளிர்மத்தமும் சூடிநல்ல மானன
மென்விழியாளொடும்
வக்கரை மேவியவன் தானவர்
முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே!”

- திருஞானசம்பந்தர்.

சிவபெருமான் சந்திரமெளலீஸ்வராக அருளும் தலங்கள் மகிமை மிக்கவை. சந்திரனுக்குச் சிவனார் அருளிய தலங்கள் - சந்திரன் வழிபட்டு பேறுபெற்ற க்ஷேத்திரங் களில் எம்பெருமான் சந்திரமெளலீஸ்வர் எனும் திருப்பெயரை ஏற்றிருப்பார்.

`மாசில் வீணையும் மாலை மதியமும்’ என்ற பதிக வரிகளுக்கு ஏற்ப வாழ்க்கையில் சூழும் துன்பங்கள், தோஷங்கள் ஆகிய வெம்மையால் வாடும் அன்பர்களுக்கு, அவர்களின் மனம் குளிர தண்ணருளைப் பொலியும் பிரான் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர். சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்குப் பிள்ளையாக சந்திர மௌலீஸ்வரர் அருளால் அவதரித்தவரே ஜகத்குரு ஆதிசங்கரர் என்பார் கள். காஞ்சி ஶ்ரீசங்கர மடத்தில் நிகழும் ஶ்ரீசந்திர மௌலீஸ்வரர் வழிபாடு விசேஷம் என்பது அடியார்கள் அறிந்ததே. இந்தப் பூஜையை தரிசிப்போர் பேறுபெற்றவர்கள்!


மட்டுமன்றி, சந்திரன் மனோ காரகன். முன்வினையால் பிறப் பெடுத்த நமக்கு சந்திர பலம் அவசியம். ஜாதகத்தில் சந்திரனின் நிலை பாதகமானால், மனவலிமை குன்றும். இப்படியான அன்பர்கள், மனத்தளவில் திடமாக ஶ்ரீசந்திரமெளலீஸ்வரராக ஈசன் அருளும் தலங்களுக்குச் சென்று வழிபடுவது அவசியம். ஈசன் இந்தத் திருப்பெயரில் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் ஒன்று கீழப்பசார். திண்டிவனத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர்.

மகா சிவராத்திரி 
சிறப்பு சங்கல்ப வழிபாடு!

மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்...
கீழ்ப்பசாரில் அருளும் ஶ்ரீசந்திரமெளலீஸ் வரர் கேட்டதை கேட்டபடி அருள்பவர்; இவ்வூர் அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதாம்பிகை. சுமார் 1500 ஆண்டுகளைத் தாண்டிய பெருமைகள் கொண்டது இந்த ஆலயம்.

தேவர்களும், திசைவேந்தர்களும், திருவண்ணாமலைச் சித்தர்களும் கொண்டாடிய ஊர் இது. சுக்கிரன் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் இது. ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், செல்வ சம்பத்துக்கள் தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்; கடன் பிரச்னைகளும் வறுமையும் நீங்கும் என்கிறார்கள் ஊர் மக்கள்.

அதுமட்டுமா? ஶ்ரீசந்திரமௌலீஸ்வரர் என்பதாலேயே, இவர் மழலை வரமருளும் மகேசனாகவும், திருமண வரம் அளிக்கும் கௌரீசனாகவும் அருள்பாலித்து வருகிறார்.

ஒரு காலத்தில் சோழர்களும், நடுநாட்டு அரசர் களும், விஜயநகர மன்னர்களும் கொண்டாடிய தலம் இது. ஆனால் காலச் சுழற்சியில் பல காரணங்களால் வழிபாடுகள் அற்றுப்போய், கோயிலும் சிதிலமுற்றுப் போனது. மண் மூடி, மரத்தின் விழுதுகள் மூடி, சுற்றிலும் புதர்மண்டிப்போக அற்புதமான கற்றளி காணாமல் போனது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறைவனே விரும்பி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இறைவனின் லிங்கத் திருமேனி வெளிப்பட, அடியார்களின் பெருமுயற்சியால் திருப்பணிகள் தொடங்கின; எழிலுற எழும்பியது ஆலயம். இதுபற்றிய விரிவான தகவலை சக்திவிகடன் 2.1.18 தேதியிட்ட இதழில் ஆலயம் தேடுவோம் பகுதியில் வெளியிட்டிருந்தோம். திருப்பணிக்கு வாசகர்களும் பெரிதும் பங்களித்தார்கள். தற்போது திருப்பணிகள் முழுமை அடையும் நிலையில் உள்ளன.

மகா சிவராத்திரி 
சிறப்பு சங்கல்ப வழிபாடு!

`புண்ணியம் நிறைந்த மகா சிவராத்திரி திருநாளை, வாசகர்களின் நலன் வேண்டியும் அவர்களின் குடும்ப நன்மைக்காகவும் சிறப்புப் பிரார்த்தனைச் சங்கல்பத்துடன் இந்தக் கோயிலில் கொண்டாடலாமே' என்று வாசகர்கள் பலரும் அடியார்களும் கேட்டுக் கொண்டார்கள். அதற்கேற்ப 11.3.2021 (மாசி - 27) வியாழக்கிழமை அன்று, கீழ்ப்பசார் அருள்மிகு சந்திரமெளலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காலத்துக்கும் உரிய பூக்கள், பூஜா பொருள்கள், அபிஷேகம், வஸ்திரம், தூப-தீப திரவியங்கள் மற்றும் நைவேத்தியங்களைச் சமர்ப்பித்து, அந்தந்த காலத்துக்கு உரிய பதிக பாராயணத்துடன் நடைபெறவுள்ளது மகா சிவராத்திரி வழிபாடு.

வைபவத்தின் சிறப்பம்சமாக... வழிபாட்டை நடத்தித் தரவுள்ள அடியார்கள், அன்று 6 சிவாலயங்களுக்குச் சிறப்பு சங்கல்ப யாத்திரை யாகச் சென்று வந்து, நிறைவில் 7-வது தலமாக கீழ்ப்பசார் சிவாலயத்தில் வழிபாடு செய்துதர உள்ளார்கள்.

மகா சிவராத்திரி 
சிறப்பு சங்கல்ப வழிபாடு!

அன்று காலையில் புதுச்சேரி ஶ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் முதல் தரிசனம் செய்யவுள்ளனர். தொடர்ந்து ஆட்சிப்பாக்கம் - ஶ்ரீஅட்சய புரீஸ்வரர், அண்டப்பட்டு - ஶ்ரீசுந்தரேஸ்வரர், நொளம்பூர் - ஶ்ரீகாளத்தீஸ்வரர், பங்காளத்தூர் - ஶ்ரீகயிலாசநாதர், திண்டிவனம் - ஶ்ரீதிந்தீனிஸ்வரர், சேவூர் - ஶ்ரீஜம்புலிங்கேஸ்வரர் ஆகிய தலங்களைத் தரிசித்து வழிபட்டுவிட்டு, கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தை அடைவார்கள்.

`உறக்கமற்ற விழிப்பு நிலையே ஆணடவனை அடையும் வழி’ என்பர்கள். அதற்கேற்ப, மகா சிவராத்திரி அன்று கீழ்ப்பசார் ஆலயத்தில் முறையே... முதல் காலம் - இரவு 10:00 மணி; 2-ம் காலம் - நள்ளிரவு 12 மணி; மூன்றாம் காலம் பின்னிரவு 2 மணி; நான்காம் காலம் - மறுநாள் அதிகாலை 4 மணி என்றவாறு நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளன. பூஜைகளுக்கு இடையே அருளுரைகளும், முற்றோதுதல் வைபவமும் நடைபெறும்.

கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் சேவா டிரஸ்ட் மற்றும் அடியார் பெருமக்களுடன் இணைந்து சக்திவிகடன் நிகழ்த்தும் மகாசிவராத்திரி வழிபாட்டு வைபவத்தில், நீங்களும் முன்பதிவு செய்து சங்கல்பித்துக்கொள்ளலாம்.

சுக்கிரனுக்குச் சாப நிவர்த்தி தந்த கீழ்ப்பசார் அருள்மிகு சந்திரமெளலீஸ்வரரின் திருவருளால், சகல சம்பத்து களையும் வரமாகப் பெற்று மகிழலாம்.

மகா சிவராத்திரி 
சிறப்பு சங்கல்ப வழிபாடு!

வாசகர்கள் கவனத்துக்கு...

மகா சிவராத்திரி அன்று கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜை - வழிபாடுகளுக்கு வாசகர் களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், நான்கு கால வழிபாடுகளுக்காக சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் நான்கு கால வழிபாடுகளிலும் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு மகா சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுப் பிரசாதங்களாக விபூதி, வில்வம், ருத்ராட்சம், காப்பு ரட்சை ஆகியவை (30.3.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மகா சிவராத்திரி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வழிபாட்டு வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன் பதிவு விவரங்களுக்கு: 89390 30246

மகா சிவராத்திரி வழிபாடுசங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு, ஓர் ஆண்டுக்கான சக்திவிகடன் டிஜிட்டல் சந்தா பரிசு!