Published:Updated:

காலக்ஞானி மகா யோகி ஶ்ரீவீர பிரம்மேந்திரர்-15

ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

மகான் சரிதம்: `பாபா மாமி' ரமா சுப்ரமணியன் ஓவியங்கள்: ஜீவா

பெத்தகொமார்லு கிராமத்தவர் அனைவரும் ஶ்ரீவீரபிரம்மேந்திரரைத் தங்களைக் காக்க வந்த குலதெய்வமாகவே கருதி போற்றினார்கள். ஆனால், சிவகோட்டய்யா மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவருக்கு ஸ்வாமியின் மேல் கோபமும் வெறுப்பும் இருந்தன!

காலக்ஞானி மகா யோகி
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்-15

ன் ஒரே செல்வ மகள் ஸ்வாமியையே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் செய்ததால் சிவகோட்டய்யாவுக்கு ஸ்வாமியின் மீது வெறுப்பு ஏற்பட்டது. ஸ்வாமி ஏதோ சித்து வேலை செய்து தன் மகளின் மனதை மாற்றிவிட்டார் என்று நினைத்தார் சிவகோட்டய்யா. அதனால் அவரும் அவரின் துணைவியாரும் ஸ்வாமியைக் குறித்து தவறான சிந்தனைகளைக் கொண்டிருந்தனர். இந்த நிலையும் முடிவுக்கு வரும் தருணம் நெருங்கியது.

இல்லற வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் தடையாக அமையுமா, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் இல்லற வாழ்க்கையை ஏற்கலாமா?

இதுபோன்ற சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு, நாம் ரிஷிகளின் வரலாற்றை சற்றுக் கவனிப்போம்.

எல்லா யுகங்களிலும் வாழ்ந்த ரிஷிகள் பலரும் இல்லற தர்மத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர். உலக வாழ்விலிருந்து முக்தியடைய விரும்பும் ஒருவன், முதலில் பிரம்மசார்யம் எனப்படும் பால்ய பருவத்தைக் கழிக்க வேண்டும். பின்னர் கிரகஸ்தாஸ்ரமம் ஆகிய இல்லற தர்மத்தை ஏற்று நல்ல கணவராக, குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக தன் கடமையை ஆற்றவேண்டும். நிறைவில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு, இறையுணர்வில் ஐக்கியமாகும் சந்நியாச நிலையை அடையவேண்டும். ரிஷிகள் பலரும் கடைப்பிடித்த நியதி இது.

`இந்த முறைப்படியே இவர் வாழ்வு அமையவேண்டும்' என்று இறை சித்தம் கொண்டுவிட்டால் அதை எவரால் மறுக்க இயலும்? ஆகவே, ஶ்ரீவீரபிரம்மேந்திரர் தமக்காகவே பூமியில் அவதரித்த புனிதவதியான கோவிந்தம்மாவை மணக்க சித்தமாக இருந்தார்.

அதேநேரம், பெண்ணைப் பெற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவளை மணக்க அவர் விரும்பவில்லை. இதன் பொருட்டு ஒரு காலைப் பொழுதில் அந்த அருளாடல் நிகழ்ந்தது!

குறிவாக்கு சொல்லும் மூதாட்டியின் உருவில் சிவகோட்டய்யா வசிக்கும் தெருவில் தோன்றினார் ஸ்வாமி. முதுகில் ஒரு சிறிய குழந்தையைச் சுமந்து கொண்டிருந்தார். `சிவகோட்டய்யா தம்பதியின் கர்மாவைப் போக்கி அவர்களுக்கு நற்பலன்களை அளிக்க, அவர்களின் கர்மாவை ஒரு குழந்தை வடிவில் தனது முதுகில் சுமந்து வந்தார் ஸ்வாமி' என்பார்கள் பெரியோர்கள்.

தெருவில் உள்ளோர் அந்த மூதாட்டியிடம் குறி கேட்டதுடன், அவரை சிவகோட்டய்யாவின் வீட்டிற்கும் அழைத்து வந்தனர்.

கோவிந்தம்மாவின் தாயாரிடம் ``அம்மையே உன் பெண்ணின் திருமணம் தடைப்படுகிறதே... அதுபற்றி இவரிடம் குறிகேட்கலாமே. இவர் மூலம் நல்ல சேதி கிடைக்கலாம் அல்லவா?'' என்றனர்.

அதேநேரம் மூதாட்டியின் உருவில் இருந்த ஸ்வாமி, முதலில் சுமக்கும் குழந்தையைக் காட்டி, ``முதலில் இந்தப் பிள்ளையின் பசியை போக்குங்கள். அதன் பிறகே குறி சொல்வேன்!'' என்றார்.

அவருடைய உத்தரவை ஏற்று சிவகோட்டய்யாவின் மனைவி அந்தக் குழந்தைக்கு உணவளித்தார். அதன் பலனால் அவர்களின் கர்மாக்கள் விலகின. பிறகு, பெண்ணின் பெற்றோரை அழைத்து அமர வைத்தவர், “நீங்கள் உங்கள் மகளின் விருப்பத்துக்கு விரோதமாக செயல்படுகிறீர்கள். உங்கள் செல்வ புதல்வி மகா லட்சுமியின் அம்சம். அவளை மணமுடிக்க ஶ்ரீமன் நாராயணரே ஒரு சாதுவாக இவ்வூருக்கு வந்துள்ளார். ஒருவேளை நீங்கள் வேறு எவருக்காவது உங்கள் மகளைக் கல்யாணம் செய்துவைக்க முற்பட்டால், உங்கள் செல்வப் புதல்வியை நீங்கள் இழக்க நேரிடும். என் வாக்கு ஒருநாளும் பொய்க்காது!” என்றார்.

இங்ஙனம் தாம் வந்த நோக்கம் நிறைவேறிய தும் அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டார் ஸ்வாமி. அனைவரும் திடுக்கிட்டனர். `இது இறைவனின் ஆணை' என்பதை கோவிந்தம் மாளின் பெற்றோர் உணர்ந்தனர்.

காலக்ஞானி மகா யோகி
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்-15

இறை ஆணையை மீறுவது தெய்வக் குற்றம் என்று புரிந்துகொண்டனர். ஆகவே, தன் மகளை ஸ்வாமிக்குத் திருமணம் செய்து கொடுக்க பரிபூரணமாக தங்களது சம்மதத்தைத் தெரிவித்தனர்.

விரைவில் ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி மற்றும் கோவிந்தம்மாவின் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கூட்டம் கலந்து கொண்டு தெய்விக தம்பதியை தரிசித்து மகிழ்ந்தனர்.

இல்லற தர்மத்தை ஏற்றுக்கொண்ட தம்பதியினருக்குக் குழந்தைகளும் பிறந்தன. அவர்கள் அனைவருக்கும் உரிய பருவத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டு, தங்களின் இல்லற வாழ்க்கையைக் கடந்து, தீர்த்த யாத்திரைக்குத் தயார் ஆனார்கள். அவ்வகையில் வீரபிரம்மேந்திரர் தேசத்தின் மிக முக்கியமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இங்ஙனம் தீர்த்த யாத்திரையை முடித்து வந்த ஸ்வாமி, சீடர் ஒருவருக்காக மடத்தில் காத்திருந்தார்.

மடத்தில் குருகுலக் கல்வி பயில்வோரிடம், ``எனக்குச் சீடனாகும் தகுதியுடைய ஒருவன் இவ்வுலகில் தோன்றியுள்ளான். அவன் இன்னும் சில நாட்களில் என்னைத் தேடி ஓடி வருவான். அவனும் நானும் ஒன்றுதான். அவன் எனக்குச் சீடன் மட்டுமல்ல; எனக்கு இணையானவன்'' என்று கூறியிருந்தார்.

இதைக் கேட்டு அவரின் புத்திரர்களும் மற்ற மாணவர்களும் வியந்தனர். அதேநேரம் வரப் போகும் புதியவனிடம் பொறாமையும் கொண்டனர். `இத்தனை வருடங்களாக வேதங்களையும், யோக வித்தைகளையும் பயின்று வரும் நம்மைக் காட்டிலும் புதிதாக வரும் ஒருவரிடம் அப்படி என்ன மகத்துவம் இருக்க முடியும்... அப்படிப்பட்ட சீடர் யார்...' என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஸ்வாமி கூறியபடியே அந்தச் சீடன் வரும் வேளையும் நெருங்கியது. அப்போது வீர பிரம்மேந்திரர் இருந்த கண்டிமல்லய்யாபள்ளி என்ற கிராமத்திலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் முதுமூலா என்ற கிராமம் இருந்தது.

அந்தக் கிராமத்தில் இஸ்லாமிய குடும்பத் தினர் நிறையபேர் வாழ்ந்துவந்தனர். அவர்களில் பீர்சாஹிப் மற்றும் ஆதம்பீ தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் இறைடைவிடாமல் இறைவனைத் தொழுது வந்தனர். இந்தச் சமூகத்துக்கு நல் வழி காட்டும் ஒரு தெய்விகப் புத்திரன் வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

அதன் பலனாக அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அந்தக் குழந்தைக்கு சையது என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். சையதுவின் குழந்தைப் பருவம் மிகவும் விசித்திரமாக இருந்தது. அவன் மற்ற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாட வில்லை. எப்போதும் தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் மாமிச உணவைக் கையாலும் தொட விரும்பவில்லை.

காலக்ஞானி மகா யோகி
ஶ்ரீவீர பிரம்மேந்திரர்-15

மட்டுமன்றி, ``மிருகங்களைக் கொன்று உண்ணும் வழக்கம் தவறானது'' என்று எல்லோருக்கும் உபதேசிக்கவும் ஆரம்பித்தான். அவன் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

குழந்தைப் பருவத்திலேயே எல்லா உயிர்க ளிடமும் அன்பும் கருணையும் கொண்டிருந்த சையதுவை அந்தக் கிராமத்தினர் மகானாகவே நினைத்தனர். அவனிடம் இறைவன் குறித்த தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவும் பெற்றனர். உரிய பருவத்தில் சையது பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவனுடைய உயர்ந்த குணங்களைக் கண்டு அவ்வூரே அவனை `சித்தா' என்றே அழைத்தது. இந்தப் பெயரே பின்னாளில் சித்தய்யாவாக மாறியது. பள்ளியில் சித்தய்யாவின் ஞானத்தைக் கண்டு ஆசிரியர்கள் அனைவரும் வியந்தனர்.

அவர்கள் சித்தய்யாவின் பெற்றோரிடம், “உங்கள் செல்வ மகன் சித்தய்யாவுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு ஞானம் இல்லை. அவன் பிறவி ஞானி அவனிடமிருந்து நாங்கள்தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றனர். இதைக்கேட்டு ஆச்சர்யம் அடைந்த சித்தையாவின் பெற்றோர், `இறைவனுடைய கருணையே இதற்குக் காரணம்' என்று இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

காலம் நகர்ந்தது. சித்தய்யாவுக்கு ஏற்ற குணவதி யைத் தேர்ந்தெடுத்தனர். அந்த காலத்தில் பால்ய விவாகம் (குழந்தை திருமணம்) நடைமுறையில் இருந்தது. அப்போது சித்தய்யாவுக்குப் பன்னிரண்டு வயதே ஆகியிருந்தது. இந்த நிலையில் பெற்றோர் விருப்பத்தை அறிந்து, சித்தய்யாவின் மனதில் கவலை குடிகொண்டது.

இறை உணர்வில் திளைத்திருந்த சித்தய்யா, திருமணம் என்ற வலைக்குள் சிக்க விரும்பவில்லை. நாளுக்கு நாள் அவருடைய உள்ளத்தில் ஆன்மிகம் குறித்த சிந்தனைகளும், இன்னும் நிறைய கற்கவேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

ஒருநாள் சித்தய்யாவின் உள்ளத்தில், தமக்கு வழிகாட்ட மிகச் சிறந்த குரு ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற எண்ணம் தோன்றியது. அவர் யார், எங்கு இருக்கிறார், அவரிடம் எவ்வாறு செல்ல இயலும் என்று சிந்தித்தவண்ணம் இருந்தார். இந்த நிலையில் ஒருநாள், சித்தய்யாவின் இல்லத்தின் அருகில் சில சாதுக்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் ஞானம் குறித்தும், யோக ஆற்றல் குறித்தும், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்தும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் உரையாடலை மறைந்து நின்று கவனித்துக்கொண்டிருந்த சித்தய்யாவின் மனம் பரவசம் அடைந்தது.

`இந்த சாதுக்குள் குறிப்பிடும் மகான்தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் குருநாதர் ஆவார். அவரிடம் சென்றால், எனக்குள் இருக்கும் அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். ஆன்மிகத்தில் எனக்கு ஓர் உயர்ந்த நிலையை அவரால் மட்டுமே தர முடியும்' என்று உறுதியாக நம்பினார்.

அவரை தரிசிக்க விருப்பம் கொண்டார். அதற்கான இறைவனின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்!

- தரிசிப்போம்...