திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

மகா யோகி காலக்ஞானி ஶ்ரீவீர பிரம்மேந்திரர் - 16

ஶ்ரீவீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவீரபிரம்மேந்திரர்

மகான் சரிதம் `பாபா மாமி' ரமா சுப்ரமணியன்

சாதுக்களின் உரையாடலில் இருந்து, அவர்கள் குறிப்பிடும் மகான்தான் நாம் தேடும் குருநாதர் என்று முடிவு செய்தார் சித்தய்யா. சுவாமி வீரபிரம்மேந்திரரை தரிசிக்க, இறை ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

மகா யோகி காலக்ஞானி 
ஶ்ரீவீர பிரம்மேந்திரர் - 16

றை ஆணைக்கேற்ப ஒருநாள் சித்தய்யா வீட்டைவிட்டு வெளியேறினார். தனது கிராமத்திலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவிலிருந்த கண்டி மல்லய்யாபள்ளிக்கு நடந்தே சென்றார். அன்று பகல் முழுவதும், சித்தய்யாவைக் காணாத பெற்றோர், மாலையில் இல்லம் திரும்புவார் என்று நம்பினர். ஆனால், சித்தய்யா இல்லம் திரும்பவில்லை.

நீண்ட காலமாக குழந்தை இல்லாத தங்களுக்கு இறைவன் அளித்த பொக்கிஷம் சித்தய்யா என்பதால், அவரின் பெற்றோர் அவர் மீது அதீத அன்பு வைத்திருந்தனர். ஆகவே, பொழுது சாய்ந்தும் அவர் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்தனர். கிராமம் முழுக்க தேட ஆரம்பித்தனர். ஆனால் சித்தய்யா கிடைக்கவில்லை. அவரின் பெற்றோர் பயந்தனர். `ஏதேனும் பாழுங்கிணற்றில் தவறி விழுந்திருப்பானோ... காட்டு மிருகங்கள் ஏதேனும் இழுத்துப் போயிருக்குமோ...' என்றெல்லாம் எண்ணிக் கலங்கினர்.

மகா யோகி காலக்ஞானி 
ஶ்ரீவீர பிரம்மேந்திரர் - 16

சித்தய்யாவின் அன்னை, வருவோர் போவோரிடம் எல்லாம் மகனைக் குறித்து புலம்பியபடியே இருந்தார். அவரின் நிலை குறித்து வருந்துவதா அல்லது காணாமல் போன மகனை நினைத்துக் கவலைப்படுவதா என்று தெரியாமல் திகைத்துப் போனார் பீர்சாஹிப்.

இந்த நிலையில் முதுமூலா கிராமத்திலிருந்து வெளியேறிய சித்தய்யா, தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக மிக விரைவாக கண்டிமல்லய்யாபள்ளியை அடைந்தார். அங்கே வீரபிரமேந்திர ஸ்வாமியின் மடத்தைக் குறித்து விசாரித்து, விரைவில் மடத்தை அடைந்தார். சீடர்களுக்கு நடுவில் கம்பீரமாக அமர்ந்திருந்த ஸ்வாமியைக் கண்டவுடன், சித்தய்யாவின் மனம் பரவசத்தில் துள்ளியது. `சத்குருவைக் கண்டுகொண்டேன்’ என்று உற்சாகத்துடன், ஸ்வாமியைப் பணிவதற்காக மடத்துக்குள் நுழைந்தார்.

ஆனால் ஸ்வாமியுடன் இருந்த சீடர்களும் அவரின் மகன்களும் சித்தய்யாவின் தலையில் இருந்த குல்லாவைப் பார்த்ததும், அவரை மடத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

அவர்கள் ஸ்வாமியிடம், “தந்தையே! இவரைப் பார்த்தால் வேறு மதத்தைச் சார்ந்தவர் போல தோன்றுகிறார். ஒருவேளை தாங்கள் இவரை அனுமதித்தால், ஊர்க்காரர்கள் நம்மையும் மடத்தையும் தாக்குவார்கள். இவரால் மிகப்பெரிய மதக்கலவரம் நிகழும். ஆதலால் தயவுசெய்து இவரைத் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிடுங்கள்'' என்றனர்.

இதைக்கேட்ட சித்தய்யா விரைந்து ஓடி வந்து ஸ்வாமியின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டார். அத்துடன், “ஸ்வாமி! நான் வால்மீகி என்ற மிகப்பெரிய ரிஷியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ராமாயணக் காவியத்தை இயற்றுமுன் அவர் கொள்ளையராக இருந்து பலரையும் துன்புறுத்தியிருக்கிறார். ஆனால் இறைவனின் கருணையால் அவரின் விதி மாற்றி அமைக்கப்படவில்லையா?

நான் மாற்று மதத்தவன் ஆனாலும் எவரையும் துன்புறுத்தியது இல்லை. ஸ்வாமி! தங்களின் முன் எதையும் எடுத்துரைக்கும் தகுதி எனக்கில்லை. ஆனாலும் தங்களின் புத்திரர்கள் என் மதம் குறித்துச் சலனப்படுகிறார்கள். ஆகவே, சில விளக்கங்களை எடுத்துச்சொல்ல அனுமதிக்க வேண்டும்'' என்றவர் தொடர்ந்து பேசினார்.

``நிராலம்ப உபநிடதத்தில் தன்னைத் தானே அறிந்துகொள்ளும் மனிதன், ஆத்மாவை முழுவதும் உணர்ந்துகொண்டவன் ஆவான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடலுக்கு மட்டுமே மதம், குலம் என்ற வேறுபாடுகள் எல்லாம்; ஆத்மாவுக்கு வேறுபாடுகள் எதுவும் இல்லை. மனிதர்களின் பக்குவமற்ற நிலையே பிரிவினைகளுக்குக் காரணம். இந்த உண்மையை அடியேன் நன்றாக அறிவேன். ஆகவே, தயவுகூர்ந்து என்னை தங்களின் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் உயிரைத் தியாகம் செய்வேன்'' என்றார் உறுதியுடன்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ஸ்வாமி மகன்களையும் சீடர்களையும் அருகில் அழைத்தார். ``நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள். நான், நீ என்பதெல்லாம் ஞானத்தைத் தேடிச் செல்பவர்களுக்கு இல்லை. இந்த உடல் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. அது எப்போது வெடித்துச் சூனியமாகும் என்று எவருக்குமே தெரியாது. மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட வேறுபாடுகள் எவ்வாறு உண்மையாகும்? இதை நீங்கள் ஏன் உணரவில்லை?

இவ்வுலகில் பிறக்கும் அனைவரும் அன்னை யின் கருவில்தான் உற்பத்தியாகிறார்கள். இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் எங்கிருந்து வந்தன? ஆகையால் இனிமேல் சித்தய்யாவும் நம்மில் ஒருவர். இந்த மடத்தில் அவனுக்கும் சரிசமமான மதிப்பும் மரியாதையும் வழங்கவேண்டும் என்று நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன்!'' என்றார்.

சித்தய்யா அகமகிழ்ந்தார். குரு தன்னை ஏற்றுக்கொண்டுவிட்டார். வேறு எவர் என்ன தூற்றினாலும் அதுபற்றிக் கவலையில்லை. குருநாதரின் திருவடிகளை சிக்கென பற்றிக் கொள்வேன் என்று தீர்மானித்தார்.

இதற்கிடையில் முதுமூலா கிராமத்தில் சித்தய்யாவின் பெற்றோர் பெரும் கவலையில் மூழ்கியிருந்தனர். அவரின் அன்னை சதா சர்வ காலமும் “இறைவா! என் மகனுக்கு எந்தத் தீங்கும் நேரக்கூடாது'' என்று இறைவனிடம் தொழுகை செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் காலை வேளையில் அந்தக் கிராமத் துக்கு வந்த சாதுக்கள் சிலர், பீர்சாஹிபைச் சந்தித்தனர். அவரிடம், ``உன் புதல்வனைக் குறித்து கவலைப்படாதே. அவன் ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமியின் மடத்தில் பத்திரமாக இருக்கிறான்'' என்று கூறினார்கள்.

பீர்சாஹிபு ஓடோடி வந்து மனைவியிடம் தகவல் சொன்னார். அந்த அன்னை மிகவும் மகிழ்ந்தார். இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். உடனடியாக தன் மகனை அழைத்து வருமாறு கணவரை வற்புறுத்தினார்.

பீர்சாஹிபும் சித்தய்யாவை அழைத்துவர கண்டிமல்லய்யாபள்ளி கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். மடத்தில் சித்தய்யாவைக் கண்டதும், ஓடிச்சென்று அணைத்துக் கொண்டார்.

``உடனே புறப்படு. உனக்காக அன்னை காத்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.

- தரிசிப்போம்...