Published:Updated:

மகாராஷ்டிரத்தின் கபாலீஸ்வரர்!

கபாலீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
கபாலீஸ்வரர்

படங்கள்: கோவிந்தன் சேவன்

மகாராஷ்டிரத்தின் கபாலீஸ்வரர்!

படங்கள்: கோவிந்தன் சேவன்

Published:Updated:
கபாலீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
கபாலீஸ்வரர்

புனிதமிகு பூமி நாசிக் பஞ்ச்வாடி. ராமன் வனவாசக் காலத்தில் பெரும்பாலான நாட்களைக் கழித்த இடம். கோதாவரியுடன் அருணா, வருணா ஆகிய நதிகளும் இணையும் திரிவேணி சங்கமமாகவும் திகழ்கிறது இந்தத் தலம்.

அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம், கோதாவரி மாதா கோயில், பிரமாண்ட அனுமன் சிலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு திகழும் இந்தத் தலத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.

கோதாவரி நதியை நோக்கிவாறு, தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது இந்தச் சிவாலயம்.

50-க்கும் மேற்பட்ட படிகளில் ஏறி ஆலயத்துக்குச் செல்லவேண்டும். சில படிகளில் ஏறியதுமே இடது புறத்தில் அனுமன் தரிசனம் தருகிறார்.

அவரை வணங்கிவிட்டு மேலும் படிகளில் ஏறிச் சென்றால், கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே தத்தா மந்திர் மற்றும் காயத்ரீ மந்திரை தரிசிக்கலாம்.

நாசிக் திரிவேணி சங்கமத்தை தரிசித்து வரும் பக்தர்கள் இங்கே இந்த இரண்டு ஆலயங்களையும் தரிசித்துவிட்டு, கபாலீஸ்வரரை வழிபடச் செல்கிறார்கள்.

அழகுற அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். மூன்று திசைகளிலிருந்து கோயிலுக்குள் நுழையும் வண்ணம் வாயில்களும் வழிகளும் அமைந்துள்ளன. பக்தர் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது ஆலயத்தில்.

ஆலயத்தின் புராணம் குறித்த திருக்கதை சிலிர்ப்பூட்டுகிறது. சிவபெருமானுக்குப் பிரம்மசிரகண்டீஸ்வரர் எனும் திருப்பெயர் உண்டு என்பதைப் புராணங்கள் மூலம் நாமறிவோம்.

ஆதியில் ஐந்து தலைகளோடு திகழ்ந்தார் பிரம்மதேவன். ஒருமுறை, ஆணவம் மிகுந்த பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கொய்து எறிந்தார் சிவபெருமான். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பிரம்ம கபாலம் அவரின் கரத்திலேயே ஒட்டிக்கொண்டது.

பிச்சாண்டியாக காடுகளில் சுற்றித் திரிந்த சிவனார், பஞ்ச்வாடி அருகில் சோமேஷ்வர் என்ற இடத்தை அடைந்தார்.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு
மகாராஷ்டிர  கபாலீஸ்வரர்
மகாராஷ்டிர கபாலீஸ்வரர்


அங்கு பசு ஒன்றின் மூலம் தோஷ நிவர்த்திக்கான வழியை அறிந்து, நாசிக் பஞ்ச்வாடி திரிவேணி சங்கமத்தில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார் என்கிறது தலபுராணம்.

கருவறையில் லிங்கத் திருமேனியராக அருள்கிறார் கபாலீஸ்வரர். பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அருகில் சென்று வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி என்பது கடும் தோஷம்; சகல செளபாக்கியங்களையும் இழக்கச் செய்துவிடும் என்பார்கள். இதுபோன்ற தொஷங்களால் அவதிப்படும் அன்பர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து கபாலீஸ்வரரை மனமுருகி வழிபட்டால், தோஷங்கள்-சாபங்கள் அனைத்தும் விலகும்; ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திங்கள் கிழமையை சோமவாரம் என்பார்கள். ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் கபாலீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று அபிஷேகம் நடக்கும்போது வெளியேறும் புனித நீரைப் பிடித்துச் சென்று பக்தர்கள் நீராடுகிறார்கள். இதன் மூலம் தேக உபாதைகள் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

அதேபோல், கோயிலுக்குள்ளும் தீர்த்தம் தேவைப்படுவோருக்கு, பாட்டில்களில் புனித அபிஷேகத் தீர்த்தம் நிரப்பி கொடுக்கப்படுகிறது; பக்தர்கள் பயபக்தியோடு பெற்றுச் செல்கிறார்கள்.

கபாலீஸ்வரரை தரிசித்து வழிபட்டு விட்டு வெளியே வரும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியில் கோபுரத்தை தரிசித்தபடி கையைத் தட்டி வழிபடுகிறார்கள். `இறைவனுக்குத் தங்களின் வருகையை அறிவிப்பதற்கான சம்பிரதாய வழிபாடு இது' என்கிறார்கள், உள்ளூர் மக்கள்.

நாசிக் செல்ல விரும்பும் அன்பர்கள் ரயில் மார்க்கமாகச் செல்லலாம். ரயில் நிலையத் திலிருந்து பஞ்சவடி திரிவேணி சங்கமம் செல்ல போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன.

கார்த்திக் சுவாமி
கார்த்திக் சுவாமி


முருகனுக்கு அபூர்வ வழிபாடுதேங்காய் பிரார்த்தனை!

பஞ்ச்வாடியில் கோதாவரி நதிக்கரையிலிருந்து சுமார் 5 நிமிட நடைபயண தூரத்தில் உள்ளது தண்டாயுதபாணி ஆலயம். வட மாநிலங்களில் முருகப்பெருமானை கார்த்திக் சுவாமி என்று அழைக்கின்றனர். இந்த ஆலயமும் கார்த்திக் சுவாமி ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.

பழைமையான இந்த முருகன் ஆலயம் 1867-ல் கட்டப்பட்டதாம். நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் சார்பாக இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின் அருகிலேயே சீதா குகையும், காலாராம் கோயிலும் அமைந்துள்ளன. கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் கரையில் உள்ள கட்டடங்களை மூழ்கடித்துவிடுமாம். ஆகவே இந்த ஆலயம் சற்று உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் பழநியாண்டவரும் அருகில் இடும்பனும் காட்சி தருகிறார்கள். எதிரில் மயில் வாகனம். தொடக்கக் காலத்தில் கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் ஆகிய விழாக்கள் கொண்டாடப் பட்டனவாம். தற்போது பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. தைப்பூசத்தையொட்டி பெரும் கூட்டம் திரள்கிறது இந்த ஆலயத்தில். அன்று மயில் இறகுகளுடன் வரும் பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்துச் செல்கிறார்கள்.

முருகப் பெருமானுக்கு காலையில் கோதாவரியின் தீர்த்தம் மற்றும் பால் அபிஷேகம் நிகழ்கிறது; மாலையில் பால் நைவேத்தியமும், தீபாராதனையும் நடைபெறுகின்றன. இங்கே `தேங்காய் பிரார்த்தனை' மிகவும் விசேஷம்.

பக்தர்கள் தங்களின் பிரர்த்தனையின் பொருட்டு கோயிலில் பதிவு செய்துகொள்கிறார்கள். இங்ஙனம் பதிவு செய்யும் பக்தர்களின் பெயரை ஒரு தேங்காயில் எழுதி, முருகனின் திருவடியில் சமர்ப்பிக்கிறார்கள். 24 மணி நேரத்துக்குப் பிறகு திருவடியில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் ஒருவார காலம் கோயிலில் வைக்கப்படும். பிறகு பிரார்த்தனை பதிவு செய்த பக்தர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

``இப்படிப் பிரார்த்தனை செய்து வழிபட்டால் 48 நாட்களில் முருகன் அருளால் நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. உள்ளூர் பக்தர்கள் மட்டுமன்றி, வெளியூர் பக்தர்களும் திரளாக வந்திருந்து தேங்காய் பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள்'' என்கிறார் கோயிலின் லட்சுமண் குருக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism