Published:Updated:

வீதியெங்கும் வீசப்பட்ட மாம்பழங்கள் - காரைக்காலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மாங்கனித் திருவிழா!

ஹரீஷ் ம
பா.பிரசன்ன வெங்கடேஷ்

`வீதிகளில் இறைந்த மாம்பழத்தைப் பெற்றால் குழந்தை வரம் கிடைக்கும்’ என்பது ஐதிகம். அப்படிப் பிள்ளை வரம் பெற்றவர்கள் அடுத்த வருடம் மாம்பழத்தை இறைப்பார்கள்...

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழா இன்று காலை அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. பிச்சாண்டவர் தேரில் வலம் வந்தார். பிச்சாண்டவர் வீதிகளைக் கடந்து சென்றவுடன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிச்சாண்டவரை வேண்டிக்கொண்டு மாம்பழங்களை வீதியில் இறைத்தனர்.

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

`வீதிகளில் இறைந்த மாம்பழத்தைப் பெற்றால் குழந்தை வரம் கிடைக்கும்’ என்பது ஐதிகம். அப்படிப் பிள்ளை வரம் பெற்றவர்கள் அடுத்த வருடம் மாம்பழத்தை இறைப்பார்கள். இப்படியாகக் கூட்டம் பெருகிப் பெருகி இன்று கோலாகலமாக நடைபெற்றது காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா.

காரைக்காலில் பிறந்து பரமதத்தரை மணந்துகொண்ட புனிதவதி, சிவனருளால் ஆட்கொள்ளப்பட்டார். கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழத்தை சிவனடியாருக்குப் படைத்துவிட்ட புனிதவதியார், மீண்டும் கணவர் கேட்டதும் சிவனை வேண்டி மீண்டும் மாங்கனி பெற்றார். இந்தத் திருவிளையாடல்தான் புனிதவதியைக் காரைக்கால் அம்மையாராக மாற்றியது. தெய்வப் பெண் இவர் என்று கணவர் விலகியதும், பேயுரு கொண்டு கயிலை வரை சென்று ஈசனை தரிசித்தார். 63 நாயன்மார்களில் தனிச்சிறப்பு கொண்ட தாயாக தனிக் கோயில் கொண்டு காரைக்காலில் அருள் செய்கிறார் காரைக்கால் அம்மையார். இதனால்தான் 63 நாயன்மார்களில் இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், அற்புதத் திருவந்தாதி போன்ற பதிகங்களைப் பாடிய அம்மையாரின் பெருமைகளை எல்லோருக்கும் தெரிவிக்க காரைக்கால் அருள்மிகு சோமநாதர் திருக்கோயிலின் சார்பில் ஒவ்வோராண்டும் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற்று வரும் மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாங்கனித் திருவிழா 13-ம் தேதியன்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிறன்று காலை 11 மணிக்கு பரமதத்தருக்கும் ஸ்ரீபுனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடும், இரவு ஸ்ரீபுனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச்சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மைக்கு மாங்கனித்திருவிழா நடத்துவது ஏன்?

நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடைபெற்றது. காலை 7 மணிக்குப் பரமசிவன், காரைக்கால் அம்மையிடம் மாங்கனி வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா சென்றார். அப்போது நகரெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெற்றனர். இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எனவேதான், பக்தர்கள் வாரி இறைத்த மாங்கனிகளைப் பிடித்து வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். இன்று மாலையில், ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.