Published:Updated:

காரைக்கால் அம்மைக்கு மாங்கனித்திருவிழா நடத்துவது ஏன்?

மாங்கனி திருவிழா
மாங்கனி திருவிழா

சைவம் தழைக்க அரும்பாடுபட்ட அம்மையின் பக்தியைப் போற்றும்வகையில் ஒவ்வோர் ஆண்டும் 'மாங்கனித் திருவிழா' சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நாளை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறஉள்ளது.

சைவ சமயத்தைப் போற்றி வளர்த்த பெருமை நாயன்மார்களையே சாரும். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார். மங்கையர்கரசியார். இசைஞானியார் ஆகிய மூவர் மட்டுமே பெண்கள். இம்மூவரிலும் இறைவனை அருந்தமிழ் கவியால் போற்றிப்பாடியவர் காரைக்கால் அம்மை மட்டுமே.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

கயிலாயம் சென்ற காரைக்காலம்மையை 'அம்மையே...' என்று ஆதியும் அந்தமும் இல்லாத அந்த ஆலவாயன் அழைத்ததாகச் சொல்வதுண்டு. ஈசனைத் 'தென்னாடுடைய சிவன்...' என்று அழைப்பதும் மரபு. ஆனால், காரைக்கால் அம்மை அவதரித்த காலத்தில் சைவம் புகழ் மங்கியிருந்தது. அம்மையின் காலம் கி.பி 5 - ம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். துறவை வலியுறுத்தும் பிற சமயங்கள் அரசியலையும் அதிகாரத்தையும் கைப்பற்றி மக்களை தங்கள் மதத்திற்கு மாற்றின. அப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவனைப் பாடி, அவன் மேல் பக்தி செய்து சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் காரைக்கால் அம்மையார்.

வணிக குலத்தில் செல்வந்தராக விளங்கிய தனதத்தரின் மகளாக அவதரித்தார் அம்மை. அவருக்கு தந்தை இட்ட பெயர் புனிதவதி. பெயருக்கேற்ப சிறுவயதுமுதலே புனிதனான ஈசனின் மீது பக்தி கொண்டு வளர்ந்தார். பருவம் எய்தியதும் அவள் தந்தை அவரைப் பரம தத்தனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார். இல்லறத்தில் இருந்தபோதும் அம்மை, சிவபக்தியில் குறைவின்றி நடந்துகொண்டாள். சிவனடியார்களைச் சிவனாக பாவிக்கும் தன்மை கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

ஒருமுறை, பரமதத்தனின் நண்பர் ஒருவர் இரு மாம்பழங்களைக் கொடுத்தார். அதைக்கொண்டுவந்து அவர் புனிதவதியிடம் கொடுத்துவிட்டு, கடைத்தெருவுக்குத் திரும்பினார். அந்தத் தருணம் அங்கு ஒரு சிவனடியார் வந்து, 'பசிக்கிறது' என்று கையேந்தி நின்றார். புனிதவதியும் சற்றும் சிந்திக்காமல் தன் கையில் இருந்த மாம்பழங்களில் ஒன்றை அவரிடம் சேர்ப்பித்தாள். அதைப் பெற்றுக்கொண்ட சிவனடியார் அவளுக்கு ஞானம் உண்டாகும்படி ஆசீர்வதித்துச் சென்றார்.

மதிய உணவுக்கு வீடு திரும்பிய பரமதத்தன் புனிதவதியிடம், 'அந்த மாம்பழங்களைக் கொண்டுவா' என்று சொன்னான். அம்மையும் ஒரு பழத்தைக் கொண்டுவந்து அவனுக்குப் பரிமாறினாள். அதை உண்ட பரமதத்தன் அதன் சுவையில் மனமகிழ்ந்தான். உடனே, 'மற்றொரு பழத்தையும் கொண்டுவா' என்று சொன்னான்.

காரைக்கால்
காரைக்கால்

புனிதவதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'ஒருவேளை சிவனடியார்க்குத் தந்துவிட்டேன் என்று சொன்னால், தன்னைக் கோபிப்பாரோ, என்ன செய்வது?' என்று வருந்திக் கண்மூடி சிவனைத் தியானித்தார். அதன்பலன் அவர் கைமேல் பழம். மெய்சிலிர்த்த அம்மை, அதையும் பரமதத்தனுக்கே தந்தார். அதையும் உண்ட அவர், பழத்தின் சுவையில் தன்னை மறந்து புகழ்ந்தான்.

அம்மை, 'இதற்குமேல் உண்மையை மறைத்தல் அழகல்ல' என்று நடந்தவற்றை பரமதத்தனிடம் சொன்னாள். 'பேயைக் கண்டேன் என்றால் கூட நம்புவார்கள். கடவுளைக் கண்டேன் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்' என்று சொல்வதுண்டு. அதேபோன்று புனிதவதி பொய் சொல்கிறாள் என்று நினைத்து, 'அப்படியென்றால் மற்றுமொரு பழத்தை உன் ஈசனிடம் கேட்டுப் பெற்றுவா' என்றான்.

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

கையில் பழம் வந்தபோதே அம்மைக்கு ஞானமும் பிறந்துவிட்டது. அதனால், 'சொல்லையும் செயலையும் நடத்துபவன் அவனே' என்ற தெளிவோடு, ஈசனை வேண்டிக் கைவிரித்து நின்றாள். மீண்டும் ஒரு பழம் அவள் கைவசமானது. அதைப் பரம தத்தனிடம் நீட்டினார். அவனோ, அந்தப் பழத்தைக் கண்டதும் அஞ்சி நடுங்கினான். அவளிடமிருந்து விலகி ஓடினான்.

அதன்பின் அவன் மறுமணம் செய்துகொண்டான். அவனைக் கண்டு இரங்கி அம்மையும் பிரிந்து சென்றாள். இந்த 'இளமையும் அழகும் மாயையைத் தருவன' என்பதை உணர்ந்து அவை தன்னை விட்டு நீங்குமாறு வேண்டிப் பேய் உருவம் கொண்டார். 'பேய் உருவம்' என்பது இந்த உலகின் இன்பங்களையெல்லாம் துறக்கும் நிலை. அம்மை அதை விரும்பிக் கேட்டுப் பெற்றார்.

மாங்கனித் திருவிழா
மாங்கனித் திருவிழா

சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று சிவனைப் பாடி ஆராதித்தார். அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டைமணி மாலை, மூத்தத் திருப்பதிகமும் என்னும் அற்புதப் பாடல் தொகுப்புகளைப் பாடி இறைவனை ஆராதித்தார். அம்மையின் அன்பையும் பக்தியையும் கண்ட ஈசனே, அவரைக் கயிலாயம் வரும்படி அழைத்தார். ஈசன் வாழும் மலையைக் காலால் மிதிக்க விரும்பாமல், தலையால் நடத்து சிவன் சந்நிதியை அடைந்தார் அம்மை. அப்போதுதான் ஈசன் அவரை, 'அம்மையே' என்றழைத்தார்.

பெண்கள், துறவு மேற்கொண்டாலும் முக்தி என்னும் பேற்றை அடையமுடியாது என்று சில சமயங்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அன்னை அதை உடைத்து பக்தி செய்து சிவபதத்தை அடைந்துகாட்டினார். காரைக்கால் அம்மையார் காலத்தில் சிதிலமடைந்திருந்த சிவத்தலங்கள் எல்லாம் சீர்பெற்றன. மக்கள் சிவன்பால் பற்றுகொள்ளத் தொடங்கினர். குறிப்பாக, காரைக்கால் அம்மையார் எழுதிய பதிகங்கள் பெருமளவில் மக்களிடையே புகழ்பெற்றன. சைவமும் பக்தி இலக்கியத் தமிழும் இணைந்து முகிழ்ந்தன.

சிவபெருமான்
சிவபெருமான்

சைவம் தழைக்க அரும்பாடுபட்ட அம்மையின் பக்தியைப் போற்றும்வகையில் ஒவ்வோர் ஆண்டும் 'மாங்கனித் திருவிழா' சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நாளை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறஉள்ளது. நாளை 13.7.19 அன்று மாப்பிள்ளை அழைப்பு உற்சவமும், 14.7.19 அன்று காரைக்கால் அம்மை திருக்கல்யாணமும், 15.7.19 பிக்ஷாடன மூர்த்திக்கு அபிஷேகமும், 16.7.19 அன்று, பரமசிவன் பிக்ஷாடனராய் வீதியுலா வர, மாங்கனி இறைத்தலும் நடைபெற உள்ளன. திருக்கல்யாண நிகழ்ச்சியினைக் காண விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். மாங்கனி இறைத்தலில் வீசப்படும் பிரசாதமான மாங்கனியை உண்ண நோய்கள் தீரும். அன்று மாலை படைக்கப்படும் தயிர் அமுது பிரசாதத்தை உண்ண குழந்தைபாக்கியம் கிட்டும் என்பது அடியவர்களின் நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு