Published:Updated:

குதிரை வாங்கப் போனவரை குருவாய் வந்து ஆட்கொண்ட பரமன்! - இன்று மாணிக்கவாசகர் குருபூஜை 

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் குருபூஜை தினம் இன்று.

குதிரைகள் அந்தக்காலத்தில் போர்ப்படைகளில் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்தன. அரேபியா கிரேக்கம் முதலான நாடுகளிலிருந்து நல்ல ஜாதிக்குதிரைகள் தமிழகத் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மன்னர்கள் அவற்றை விருப்பமுடன் வாங்கினர். அப்படி ஒருமுறை பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டிய மன்னன் குதிரைகள் கிழக்குத் துறைமுகத்தில் வந்திருப்பதை அறிந்து வேண்டிய பொருள் எடுத்துக்கொண்டு சென்று வாங்கிவருமாறு தன் மந்திரியான திருவாதவூரரை அனுப்பினார். குதிரைகள் வாங்கப் புறப்பட்டவரின் வாழ்வை குருவாய் வந்து மாற்றினார் பரமன்.

சிவபெருமான்
சிவபெருமான்

சைவம் வளர்த்த சமயக் குரவர்கள் நால்வர். அவர்களில் தேவார மூவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் இவர்களுக்கு ஒரு நூற்றாண்டு காலம் கழித்துப் பிறந்து பக்தியின் புதிய பாவத்தை வெளிப்படுத்தி அனைவரும் கடைத்தேறும் வண்ணம் திருவாசகத்தை அருளியவர் திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகர் தன் பயண வழியில் திருப்பெருந்துறையை அடைகிறார். அங்கு அவர் சிவநாமம் ஒலிக்கக் கேட்டு அதைச் சொல்பவர் யார் என்று தேடிச் சென்றார். சிவநாமத்தைப் பின் தொடர்ந்தால் சிவனைப் பற்றிக்கொள்ளலாம் என்பதை விளக்கும் விதமாக அவருக்கு அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

துறவி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் தோற்றமே வசீகரிக்கிறது. அவர் முகத்தில் காணப்படும் ஒளி அவர் மனிதர்தானா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உடனே அவரின் கால்களைப் பார்க்கிறார். காரணம் தேவர்கள் இந்த மண்ணுலகில் தம் திருவடிகளைப் பதிப்பதில்லை. ஆனால், அந்தக் குருவின் கால்கள் நிலத்தில் பதிந்திருந்தன.

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் தன் நிலை மறந்து நின்றார். பின்னர் ஓடிச் சென்று அவர் திருவடியைப் பற்றினார். திருவடியைப் பற்றிய கணத்தில் அவருக்குச் சகலமும் புரிந்துவிடுகிறது. அந்தக் கணத்தை ``சிவன் என யானும் தேறினேன் காண்க’ என்று மாணிக்கவாசகர் விவரிக்கிறார். தான் யார் என்பதை மறக்கிறார். `எனை நான் என்பது அறியேன்’ என்று தன் பணி மறந்து இறைப்பணியில் மூழ்கினார். சிவனின் கருணையை மட்டுமே எண்ணி அவன் தாள் பற்றிய அனுபவத்தைப் பாடுவதிலேயே செலவிடுகிறார்.

அதன்பின் சிவபெருமான், திருவாதவூரருக்காக, நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கிப் பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்தார். ஆனால், திருவாதவூரரோ எந்தக் கவலையும் இன்றி சிவானுபவத்தைப் பாடுவதிலேயே நோக்கமாயிருந்தார். அதனால்தான் அவர் எழுதிய திருவாசகம் மனதை உருக்கும் அற்புத நூலாக அமைந்தது.

தேவார மூவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவத்தில் சிவனைப் பாடினார்கள். சிவனின் அருளையும் அற்புதங்களையும் பாடினார்கள். ஆனால், மாணிக்கவாசகரோ கடையேனாய்த் தன்னை பாவித்துத் தன்னைக் கரைசேர்க்கும் திருவடிகளையே உருகி உருகிப் பாடினார். 

அதனால்தான் வள்ளல் பெருமானும்,

``வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால்...” என்று போற்றுகிறார். 

இத்தகைய சிறப்புகளை உடைய மாணிக்க வாசகப்பெருமான் தில்லை அம்பலத்தில் ஆனி மாத மக நட்சத்திர நாளில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அவரது குருபூஜை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

சிதம்பரம்
சிதம்பரம்

இன்று மக நட்சத்திரம் மதியம் 1.04 மணிக்குத் தொடங்கி நாளை பகல் 11.56 வரை இருக்கிறது. பல சிவாலயங்களில் இன்று மாணிக்க வாசகப்பெருமானின் குருபூஜை நடைபெறும். ஆலயங்கள் சென்று வழிபட முடியாத இந்த அசாதாரண சூழலில் நாம் நம் இல்லத்திலிருந்தே மாணிக்கவாசகரை வழிபடலாம். இறைவன் நமக்கு குருவாய் வந்து வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் பாடித் துதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் குருவருளும் திருவருள் ஸித்திக்கும்.

அடுத்த கட்டுரைக்கு