Published:Updated:

`தலையெழுத்தை மாற்ற பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு!’ - சக்தி யாத்திரையின் இரண்டாம் நாள்

ஆலயம் தேடுவோம், உழவாரப் பணி ஆகியவற்றோடு ஆன்மிக அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் எனும் நோக்கில் ஆன்மிகத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணத்தையும் `சக்தி யாத்திரை’ ஏற்பாடு செய்து வருகிறோம்.

சக்தி யாத்திரை
சக்தி யாத்திரை

வாசகர்களின் பேராதரவோடு இதழ்ப்பணி மட்டுமல்லாமல் ஆன்மிகப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது சக்தி விகடன். ஆலயம் தேடுவோம், உழவாரப் பணி ஆகியவற்றோடு ஆன்மிக அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் எனும் நோக்கில் ஆன்மிகத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணத்தையும் `சக்தி யாத்திரை’ ஏற்பாடு செய்து வருகிறோம்.

சென்ற ஆண்டில் தொடங்கிய சக்தி யாத்திரையானது மார்கழி மாலவன் தரிசனம், காஞ்சியிலிருந்து தென்காசி வரையிலான முருகன் தலங்கள், சிலிர்ப்பூட்டும் ஷீர்டி பயணம் என்று பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு வாசகர்களுக்கு இறையனுபவத்தை வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாக இந்த வருடம், மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் மாலவன் ஆலயங்களையும், நடராஜர் ஷேத்திரங்களுக்கும் செல்வதற்குப் பயணத்தை அறிவித்திருந்தோம். நேற்று (3.1.2020) காலை சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தொடங்கியது சக்தி யாத்திரை.

சக்தி யாத்திரை
சக்தி யாத்திரை

திருவல்லிக்கேணி பார்த்த சாரதியைத் தரிசித்த வாசகர்கள் திருவடிசூலத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களையும் மூலவராக அருள்பாலிக்கும் ஸ்ரீவாரு வேங்கடாசலபதியையும் தரிசித்து பேறு பெற்றனர். அங்கிருந்து பயணத்தைத் தொடங்கியவர்கள் ஊட்டத்தூர் - ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம் மற்றும் திருப்பட்டூர் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலைத் தரிசித்தனர்.

திருஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரைத் தரிசித்த பக்தர்கள் பஞ்சநதன நடராஜரை வணங்கி நோய் தீர்க்கும் வெட்டி வேர் மற்றும் மூலிகை தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர். திருப்பட்டூரில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டுவிட்டு தலையெழுத்தை மாற்றும் பிரம்மனுக்கு மஞ்சள் பூசியும் ஜாதகத்தை வைத்தும் சிறப்பு வழிபாடு செய்து மகிழ்ந்தனர்.

சக்தி யாத்திரை
சக்தி யாத்திரை

அதன் பிறகு, இரவு திருச்சியில் தங்கி இன்று (4.1.2020) காலை திருவரங்கம் அரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்தனர். அங்கிருந்து பயணத்தைத் தொடங்கியவர்கள் திருவெள்ளறை - ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாளைத் தரிசித்துவிட்டு தற்போது திருநெல்வேலியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாளை நம்பிமலை மற்றும் செப்பறை நடராஜரைத் தரிசிக்கவிருக்கிறார்கள்.