உலகின் மிகப்பெரிய வரம் - திருமணம்! ஆனால், அந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அப்பாவும் இல்லை; அம்மாவும் கிடையாது. அதுமட்டுமா? அந்த தேசத்தை ஆட்சி செய்த மன்னனின் மாணிக்கங்களான இவர்கள், இப்போது குடிசை வீட்டில் தங்கியிருந்தார்கள். ஆம், மூவேந்தர்களால் வீழ்த்தப்பட்ட பாரியின் மகள்களான அங்கவையும் சங்கவையும்தான் அந்தப் பெண்கள்.
இந்த நிலையில்தான் யாத்திரையாக அவ்வழியே வந்த ஒளவை அவர்களின் குடிலை அடைந்தாள். தாகத்துக்கு நீர் வாங்கிக் குடித்தார். பெண்களைப் பற்றி விசாரித்தவர் அதிர்ந்துபோனார். `இருவருக்கும் நானே திருமணம் செய்துவைக்கிறேன்’ என உறுதி கூறினார். தெய்வீகன் என்ற மலையரசன் இவர்களை மணக்க முன்வந்தான். ஒளவை மகிழ்ந்தார். நேராக விநாயகர் சந்நிதிக்குச் சென்றார்; மனம் உருகி வணங்கினார்.
அந்த நிமிடமே... விநாயகப்பெருமான் எழுந்தருளினார். ஓர் ஓலையில் தன் கைப்பட திருமணத் தகவலை எழுதி, ஒளவையிடம் கொடுத்தார். அந்தத் திருமண ஓலையை மூவேந்தர்களிடமும் காட்டினார் ஒளவை. நெகிழ்ந்து வியந்தவர்கள், ‘’நாங்களே நேரில் வந்து ஆசீர்வதிக்கிறோம்’’ என்றனர். கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இங்ஙனம் இவர்களின் கல்யாணம் நிகழ்ந்த இடம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் ஆலயம் என்கிறார்கள்.

சேலம் நகருக்கு அருகில் உள்ள அற்புதத் தலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில். திருமண ஓலை எழுதிக் கொடுத்த விநாயகர் அருள்பாலிப்பதும் இந்தக் கோயிலில்தான்!
சேலம் - சங்ககிரி மார்க்கத்தில், சேலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், அமைந்துள்ளது உத்தமசோழபுரம் அருள்மிகு கரபுரநாதர் ஆலயம். அர்ச்சகரின் மகனான பாலகன் ஒருவன் பூச்சூட ஏதுவாக, அவன் கரத்துக்கு தக்கபடி அவன் பக்கமாக சாய்ந்து கொடுத்ததால், இங்குள்ள ஈசனுக்கு கரபுரநாதர் என்று திருப்பெயர். இன்றைக்கும் சற்றே சாய்ந்தபடி காட்சி தருகிறது ஸ்வாமியின் லிங்கத் திருமேனி.
திருமணத் தடை உள்ள பக்தர்கள், தங்களது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு வந்து, பிரசாதமாகத் தரப்படும் ஸ்வாமி மாலையை கழுத்தில் அணிந்தபடி வலம் வந்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
விநாயகர் திருமண நிச்சயதார்த்த ஓலை எழுதிக் கொடுத்த திருத்தலம் என்பதால், இங்கே வந்து விநாயகர், கரபுரநாதர், பெரியநாயகி, ஒளவைபிராட்டி ஆகியோரை வழிபட்டால், களத்திர தோஷம் மற்றும் செவ்வாய் முதலான அனைத்து தோஷங்களும் விலகும்; புத்திர பாக்கியம் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
ஆலயத்தில், காலபைரவருக்கு சந்நிதி உள்ளது. இதில் விசேஷம்... சந்நிதியின் முகப்பில், அஷ்ட பைரவர்களின் சுதைச் சிற்பமும் உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவரை வணங்கி வழிபட்டால் சத்ரு பயம் மற்றும் தீவினைகள் நீங்கும்; ஆயுள் விருத்தி பெருகும்; அனைத்து நலனும் உண்டாகும் என்பது நம்பிக்கை!
- கே.ரமணி, சென்னை-44