சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜ மூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜ மூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
சித்திரை மாதம் திருவோணம், ஆனி மாதம் உத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி ஆகிய ஆறு தினங்களுமே நடராஜப் பெருமானுக்குரிய அபிஷேக தினங்களாகும்.

சைவத்தின் தலைமை ஆலயம் என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மாசி மாத சதுர்த்தசி மகாஅபிஷேகம் நாளை (25.2.21) மாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறவிருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட்டர் திரவியங்கள் பயன்படுத்தப்படும். மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.

சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் `திருச்சிற்றம்பலம்' 'எதிர் அம்பலம்' என்று ஓர் இடம் இருக்கிறது. இதை 'கனக சபை' என்று அழைப்பார்கள். அங்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் கனகசபையில் நடைபெறும், இந்த அபிஷேகத்தை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் நம் துன்பங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.
மாசி சதுர்த்தசியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.