Published:Updated:

திருத்தணியில் 11 மாதங்களுக்குப் பிறகு சுவாமி வீதி உலா... கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவம்!

மயில் வாகனத்தில் உற்சவர்
மயில் வாகனத்தில் உற்சவர்

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த திருத்தணி திருகோயிலில் முருகப்பெருமானின் மாடவீதி உலா 11 மாதங்களுக்கு பின் நேற்று நடைபெற்றது. முருகப்பெருமானைக் கண்ட பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5 - ம் படைவீடாகத் திகழும் திருத்தணி சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் மிக விமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக தினமும் ஒரு வாகனத்தில் காலை மாலை என இரு வேளைகளிலும் எழுந்தருளிக் காட்சியருள்வார்.

திருத்தணி மலைக்கோயில்
திருத்தணி மலைக்கோயில்

அந்த வகையில், இந்தாண்டு பிரமோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கியிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக திருத்தணி திருகோயிலில் 11 மாதங்களுக்கு பின் நேற்று உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியில் திருவீதி உலா புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரோகரா கோஷம் முழங்க, பக்தர்கள் கந்தனைக் கண்டு பரவசமடைந்தனர்.

திருக்கோயிலில் (17.2.21) நேற்றிரவு விநாயகர் திருவீதி உலாவுடன் மாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை 8.30 மணிக்குக் கொடியேற்றம் நடைபெற்றது. உற்சவர் முருகப்பெருமான் கொடிமரத்துக்கு எதிரே நின்று பக்தர்களுக்கு அழகுறக் காட்சியளித்து அருள்பாலித்தார். அவருக்கு தீபாராதனை நடைபெற்றது.

வள்ளி தெய்வாணையுடன் உற்சவர் முருகப்பெருமான்
வள்ளி தெய்வாணையுடன் உற்சவர் முருகப்பெருமான்

நேற்று முன்தினம் தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழா வரும் 27-ஆம் தேதி அன்று நிறைவு பெறும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக திருக்கோயிலில் வரும் 24 - ம் தேதி 'மரத் தேர்த் திருவிழா'வும் 25 - ம் தேதி வள்ளி திருக்கல்யாண வைபோகமும் 27 - ம் தேதி தீர்த்தவாரி நடைபெற்று கொடி இறக்கம் செய்யப்படும்.

அடுத்த கட்டுரைக்கு