Election bannerElection banner
Published:Updated:

சாபங்கள் தீர்க்கும் மேல்மலையனூர் மயானக்கொள்ளை மாசித் திருவிழா... எப்போது நடக்கிறது?

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்

ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் மாசி பெருந்திருவிழா மேல்மலையனூர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 13 நாள்கள் (12.3.2021 முதல் 24.3.2021) மாசித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஒன்று ‘அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்’. செஞ்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தப் புகழ் பெற்ற ஆலயம்.

பிரம்மனின் ஐந்தாவது சிரத்தைத் தன் கரங்களால் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அதோடு பிரம கபாலமும் சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. மேலும், பிரம்மதேவனின் மனைவியாகிய சரஸ்வதியின் சாபத்தினால், தற்போது மேல்மலையனூர் என அழைக்கப்படும் பகுதியில் புற்றில் பாம்பாக பார்வதிதேவியும் உணவு தேடி அலையும் கோலத்தில் சிவபெருமானும் சில காலம் வாழ நேர்ந்தது.

'பார்வதிதேவி சிவபெருமானை சந்திக்கும் நாளில் இருவரும் சாபவிமோசனம் பெறுவீர்கள்’ என கூறிய விஷ்ணுவின் ஆலோசனைப்படி, ஒரு தினம் சிவபெருமானின் வருகையை அறிந்தார் பார்வதிதேவி.

தீபம் காட்டும் பக்தர்கள்
தீபம் காட்டும் பக்தர்கள்

அன்னபூரணி மூலமாக சுவையான உணவினைச் சமைத்து அதை மூன்று கவளமாக பிரித்து, இரண்டு கவளங்களை சிவபெருமான் கரங்களில் இருந்த கபாலத்திற்கு ஊட்டினார். உணவின் சுவையில் மயங்கிபோனது அந்த கபாலம். மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே பார்வதிதேவி கீழே தவறவிட சுவையில் மயங்கிய கபாலம் உணவை உட்கொள்ளக் கீழே இறங்கியது.

அப்போது, அந்தக் கபாலத்தைத் தன் காலால் நசுக்கி அழித்தாராம் பார்வதிதேவி. இதனால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிட, இருவரும் சாபம் நீங்கி சுய உருவினை அடைந்தனர் எனக் கூறுகிறது தலவரலாறு. இதன் நினைவாகவே மயானக்கொள்ளை திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

கோபத்திலிருந்த அங்காளம்மனை சாந்தப்படுத்தும் நிகழ்வாகவே தேர்திருவிழா நடத்தப்படுவதாகவும், அமாவாசை தினங்களில் ஊஞ்சல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அம்மன், வலம் வந்து கோபம் தணிக்கத் தேரின் சக்கரமாகவும், அச்சாணியாகவும் தேவர்களும், முனிவர்களும் மாறிவந்தனராம். பின், தேரோட்டம் முடிந்ததும் அவர்கள் சுயரூபம் பெற்று மறைந்தனராம்.

இந்த ஐதிகத்தின் படியே இன்றளவும் ஒவ்வொரு வருடமும் தேரோட்டம் முடிந்ததும் தேரைப்பிடித்து வைத்துவிடுகிறார்கள். அதன்படி, மாசிமாதம் அமாவாசை அன்று மேல்மலையனூர் மயானத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. இங்கு வந்து அம்மனை வணங்கி வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், அன்றைய தினத்தில் காய் - கனிகள், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லரை ரூபாய்கள், தானியங்கள் என பலவகை பொருட்களை வீசி எறிந்து கொள்ளை விடுவார்கள். மேல்மலையனூர் மயானத்தில் திருவிழா முடிந்ததும், அந்த மயான சாம்பலை எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் துணியில் முடிந்துகட்டி வாசலில் தொங்கவிட தீய சக்திகள் விலகும் என்றும், அன்றைய தினத்தில் அங்கு அருள்வாக்கு சொல்லும் நபர்களின் வார்த்தைகள் அப்படியே பலிக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது.

தேர் திருவிழா
தேர் திருவிழா

பார்வதிதேவி பிரம்மனின் கபாலத்தை அழித்து சிவபெருமானுடன் இங்கு சாப விமோச்சனம் பெற்றதால் இந்த ஆலயம் சென்று வழிபட்டால் பிரச்சனைகள், சாபங்கள் தீரும் என்பதும், அம்மன் இங்கு புற்றில் பாம்பாக இருந்ததாலும், அவள் இன்றளவும் அவ்வாறே காட்சி தருவதாகவும் நம்பும் பக்தர்கள் அப்புற்றினை வணங்கி, அம்மண்ணை நெற்றியில் பூசி வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் இந்தப் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்க்காணும் தேதிகளில், மாசித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

12.3.2021 தொடங்கி 24.3.2021 வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு.

மாசி 28 (12.3.2021) - கொடியேற்றம்,

மாசி 29 (13.3.2021) - மயானக்கொள்ளை,

பங்குனி 03 (16.3.2021) - தீமிதி விழா உற்சவம்,

பங்குனி 05 (18.3.2021) - திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம்,

பங்குனி 08 (21.3.2021) - அம்மன் தெப்பல் உற்சவம்,

பங்குனி 11 (24.3.2021) - காப்பு களைதல்.

பிரசித்திபெற்ற இந்த மாசித் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை மனமுருக வேண்டி நல் பயனைப்பெறுவோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு