பிப். 23 உருகுசட்டசேவை, பிப். 26 தேரோட்டம்... திருச்செந்தூர் மாசித்திருவிழா பக்தர்கள் கவனத்துக்கு!

ஆவணி மற்றும் மாசித் திருவிழா காலங்களில் உருகு சட்டை சேவையாகி, வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மூம் மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார்.
ஆண்டுதோறும் முருகப்பெருமான் அருள்புரியும் தலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது மாசிமகம். முருகனின் அறுபடைவீடுகளிலும் இந்தத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிமகம் வருகிற 27.2.21 அன்று வருகிறது. இதையொட்டி இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலத்தில் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை நிர்வாகம் வழங்கியுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 17.2.2021 முதல் 28.2.2021 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளன. இதில் 17.2.2021 அன்று கொடியேற்றமும் 5-ம் திருநாளான 21.02.2021 அன்று குடைவரை வாயில் தீபாராதனையும், 7-ம் திருநாளான 23.2.2021 அன்று உருகு சட்ட சேவையும், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளலும், சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளான 24.2.2021 அன்று பச்சை சாத்தியும், 10-ம் திருநாளான 26.2.2021 அன்று தேரோட்டமும், 11-ம் திருநாள் 27.2.2021 அன்று தெப்ப உற்சவமும் நடைபெற இருக்கின்றன.
இதில் உருகு சட்ட சேவை என்பது வேறெங்கிலும் காணக்கிடைக்காத அற்புத சேவையாகும்.
திருச்செந்தூரில் ஷண்முகர் தெற்கு நோக்கிய சந்நிதியில் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சியருள்கிறார். சாதாரண நாள்களில் இவரின் இரண்டு கரங்களை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். மற்ற கரங்களைப் பட்டாடை இட்டு அலங்கரித்திருப்பர்.
ஆவணி மற்றும் மாசித் திருவிழா காலங்களில் உருகு சட்டை சேவையாகி, வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மும்மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார். அப்போது அவரின் பன்னிரு கரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.

திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் ஏழாம் திருநாளன்று ஷண்முகர் சந்நிதியிலிருந்து எழுந்தருள்வார். மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பதுபோல, இந்த ஷண்முகரை மூலஸ்தானத்தில் இருந்து எடுத்து வாகனத்தில் வைப்பதில்லை.
மாறாக உருகுப் பலகை என்ற ஒரு பெரிய பலகையை பீடத்திலிருந்து சந்நிதி வாயில் வரை போட்டு, ஷண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக அசைத்துப் பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதுவே உருகு சட்ட சேவை என்று போற்றப்படுகிறது. இந்தக் காட்சி காண்பதற்கு சிலிரிப்பூட்டுவதாக இருக்கும்.
இத்தகைய சிறப்புகளையுடைய மாசித் திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் ஆலய நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது
5-ம் திருநாள் குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சிக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று 7-ம் திருநாள் உருகு சட்ட சேவை மற்றும் வெட்டிவேர் சப்பரம் எழுந்திருளல் ஆகியவற்றை தரிசனம் செய்ய 1,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். அன்று மாலையில் நடைபெறும் சிவப்பு சாத்தி தரிசனத்துக்கு 500 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். 8-ம் திருநாள் பச்சை சாத்தியை தரிசனம் செய்ய 1,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். 10-ம் திருநாள் தேரோட்ட நிகழ்ச்சிக்கு சுமார் 1,000 பக்தர்களும் 11-ம் திருநாள் தெப்ப உற்சவ நிகழ்ச்சிக்கு 500 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. பக்தர்கள் திருக்கோயிலுக்கு வெளியிலிருந்து உற்சவங்களைக் காண வகைச் செய்யும் விதமாக சண்முகவிலாசத்துக்கு வெளியில் அகன்ற எல்.இ,டி திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்து வருதல் ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். திருக்கோயில் மூலமாக வழங்கப்படும் அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.