மயிலாடுதுறையின் செல்லப்பிள்ளையாகக் கருதப்படும் அபயாம்பிகை யானை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள ஷவரில் குளித்து, மின்விசிறியில் உலரவைத்து மகிழ்ச்சியுடன் அனைவரையும் ஆசீர்வதிப்பது பக்தர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ மயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 60 வயதுடைய அபயாம்பிகை என்கின்ற யானை கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகக் கவரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தினால் தினமும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், யானையும் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் சிலவற்றை சில சமூக ஆர்வலர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றி யானைப்பாகன் செந்திலிடம் பேசினோம்.
"அபயாம்பிகையை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கோடை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் கோயிலின் உட்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் குளிக்க வைக்கிறோம். ஷவரில் ஆனந்தமாகக் குளித்து விளையாடும் அபயாம்பிகையைப் பொதுமக்கள் பலர் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்கின்றனர்.

குளியல் முடித்தபிறகு கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மின்விசிறியில் அபயாம்பிகை தன்னை உலரவைத்துக் குதுகாலமடைந்து உற்சாகத்தில் பிளிறுகிறது. அதுமட்டுமின்றி பழவகைகள் முதல் ஐஸ்கிரீம் வரை அபயாம்பிகை சாப்பிடும். அபயாம்பிகையை இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதி அது விரும்பி உண்ணும் பொருள்களைக் கொடுத்து மகிழ்கிறார்கள். இது பெரும் கொடுப்பினையாகும். இதுவரை அபயாம்பிகை யாருக்கும் ஒரு சிறு இடையூறுகூட செய்ததில்லை என்பது எங்கள் பாக்கியமாகும்" என்றார்.