திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

மீன்குளத்தி பகவதி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
மீன்குளத்தி பகவதி அம்மன்

மீன்குளத்தி பகவதி கோயிலின் கொடிமரம் தேக்கு; இதைச் செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர்.

கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம்.

இங்குள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தேவியாகத் திகழ்கிறாள். மீன்குளத்தி பகவதி வேறு யாருமில்லை... சாட்சாத் மதுரை மீனாட்சியேதானாம்!

முன்னொரு காலத்தில் மூன்று இனத்துக் குடும்பங்கள் கடும் பஞ்சத்திலிருந்து தப்ப, பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பால், அவர்களது வணிகமும் செழித்தது. எனவே, அங்கேயே வசிக்கத் தொடங்கினர். இவர்களில், மதுரை மீனாட்சியம்மையின் மீது அளவற்ற பக்திகொண்ட பெரியவர் ஒருவர், தன் குடும்பத்தாருடன் மதுரைக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து வருவது வழக்கம்.

மீன்குளத்தி பகவதி அம்மன்
மீன்குளத்தி பகவதி அம்மன்

ஒருமுறை மதுரையம்பதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய பிறகு, அந்தப் பெரியவர் நீராடுவதற்காகக் குளத்துக்குச் சென்றார். கரையில் குடையை விரித்து, பொருள்களை அதனடியில் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பிறகு கரைக்கு வந்தவர், குடையை எடுக்க முயன்றார். ஆனால், குடை அசையக்கூட இல்லை. குடையை மட்டுமின்றி, அதன் கீழே வைத்திருந்த பொருள்களையும் எடுக்கமுடியவில்லை. அதிர்ந்து போனார் பெரியவர்.

வீட்டில் விவரம் சொல்லி, குடும்பத்தாருடன் குளக்கரைக்கு வந்தார். ஆனால், அவர்களாலும் எடுக்க முடியவில்லை. அப்போது, அங்கே ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. அனைவரும் சிலிர்த்தார்கள். ஜோதிடர் ஒருவரிடம் விவரம் சொன்னார்கள். அவர், ‘இந்தக் குடை பதிந்திருக்கும் இடத்தில், மதுரை மீனாட்சி பிரஸனம் ஆகியிருக்கிறாள்’ என்று தெரிவித்தார். அப்போது, ‘இந்தத் தள்ளாத வயதில் நீ நெடுந்தொலைவு வந்து சிரமப்பட வேண்டாம். உனக்காக இங்கேயே வந்திருக்கிறேன். இங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படி அந்தப் பெரியவரும், அவர் குடும்பத்தாரும் அங்கே ஒரு கோயிலை எழுப்பி, வழிபடத் தொடங்கினார்கள். அதுவே ‘குடைமன்னு’ என இன்றும் அழைக்கப்படுகிறது.

கேரளாவில்... மதுரை மீனாட்சி!

மீன்குளத்தி பகவதி கோயிலின் கொடிமரம் தேக்கு; இதைச் செப்புத் தகட்டால் வேய்ந்துள்ளனர். இதைக் கடந்தால் மீன்குளத்தி பகவதியின் அற்புதமான சந்நிதி. மூல விக்கிரகம் தவிர, சப்த மாதர்கள், கணபதி, வீரபத்ரர், துர்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்கு பல விழாக்கள் இருப்பினும் எட்டு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. ஒட்டன் துள்ளல், கதகளி போன்றவை மாசித் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்.

- எஸ்.பவானி, சென்னை - 18