Published:Updated:

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: மக்களின் குழப்பங்களுக்கு விடையளித்த அமைச்சர் சேகர் பாபு

சேகர் பாபு
News
சேகர் பாபு

திருவாரூருக்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் தொடர்பாக விரிவான விளக்கம் அளித்தார்.

மிகவும் பழைமை வாய்ந்த திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயிலின் ஆழித்தோரட்டம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். கமலாலயக் குளத்தின் தென்கரை சுவரின் ஓரு பகுதி, கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

ஆழித்தேரோட்ட விழாவுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கமலாலய குளத்தின் தென்கரை சுவர் சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால் பக்தர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஆழித்தேரோட்டம் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான் திருவாரூருக்கு வருகை புரிந்த, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இது தொடர்பாக விரிவான விளக்கம் அளித்தார்.

கமலாலய குளம்
கமலாலய குளம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவாதிரைத் திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பாத தரிசனம் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு தரிசனம் செய்ததோடு, கமலாலய குளத்தின் தென்கரை சுவரின் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கமலாலயக் குளத்தின் தென்கரை சுவர் சீரமைப்புப் பணி மற்றும் ஆழித்தேரோட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சேகர் பாபுவுடன், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், இந்துசமய அறநிலையத்துறையின் ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தின் நிறைவில் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

"மிகவும் தொன்மையானது கமலாலயத் திருக்குளம்... புராணங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருக்குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1,060 அடி நீளமும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடி நீளமும் கொண்ட பெரிய திருக்குளமாகும். கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையில், குளத்தின் தடுப்புச்சுவரின் ஒரு பகுதியில் 101 அடி நீளத்திற்குச் சரிந்து விழுந்தது.

அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு
அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு

அதுமட்டுமல்லாமல், மேலும் 47 அடி நீளத்திற்கு சுவர் சேதமடைந்துள்ளது. இதனை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் 77 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 148 அடி நீளத்திற்கு தடுப்புச்சுவர் புதிதாக அமைத்திட நிர்வாக ரீதியாக அறநிலையத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்தக் கட்டுமானப் பணிகள் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்சமாக ஆழித்தேர் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் ஆழித்தேர் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ பெருவிழாவின் நிறைவாக நடந்து வருகிறது. இந்தத் தேர்த்திருவிழாவானது கடந்த 25.3.2021 ஆயில்ய நட்சத்திரத்தில் நடந்தது. வரும் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் வெகு சிறப்பாக, ஆழித்தேரோட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஆழித்தேரோட்ட விழாவிற்கு முன்பாகவே சேதமடைந்த தென்கரை சுற்றுச்சுவர் மற்றும் தெற்கு வடம்போக்கி வீதி சாலையினைச் சீரமைத்து ஆழித்தேரோட்டத்தினை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.

அமைச்சர் சேகர் பாபுவின் இந்த அறிவிப்பு திருவாரூர் பகுதி மக்களையும், தியாகராஜ சுவாமி கோயிலின் பக்தர்களையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.