Published:Updated:

ரூ.316 கோடி; 108 தூண்கள்; சிவபுராண சிற்பங்கள்; மோடி திறந்துவைக்கும் உஜ்ஜயினி கோயில் சிறப்புகள்!

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ( டிவிட்டர் )

12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜயினி மகாகாளேஸ்வர் திருக்கோயிலில் சுமார் 316 கோடி ரூபாய் செலவில் முதல்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ரூ.316 கோடி; 108 தூண்கள்; சிவபுராண சிற்பங்கள்; மோடி திறந்துவைக்கும் உஜ்ஜயினி கோயில் சிறப்புகள்!

12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜயினி மகாகாளேஸ்வர் திருக்கோயிலில் சுமார் 316 கோடி ரூபாய் செலவில் முதல்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

Published:Updated:
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ( டிவிட்டர் )
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது உஜ்ஜயினி திருத்தலம். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான இங்குதான் உலகப் புகழ்பெற்ற மகா காளேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.

புராணச்சிறப்பும் பழைமையும் வாய்ந்த இந்தக் கோயிலில் சுமார் ரூ.316 கோடி செலவில் முதற்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அவை முடிவுக்கு வந்துள்ளன. இதையொட்டி பிரதமர் மோடி இந்தக் கோயிலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தத் தலத்தில் செய்யப்பட்டிருக்கும் புனரமைப்புப் பணிகள் எவை என்பதை அறிந்துகொள்ளும் முன்பாக இந்தத் தலத்தின் புராணச் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்

குப்தர்கள், மௌரியர்களின் தலைநகரம்

இந்தத் தலத்துக்கு சப்த மோட்சபுரி என்றும் பெயர் உண்டு. 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இந்தத் தலத்தை அவந்தி என்றும் அழைப்பார்கள். குப்தர்கள் மற்றும் மௌரியர்களின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமும்கூட. இங்கு மூவாயிரம் ஆண்டுப் பழைமையான ஓவியங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இங்குதான் சாந்தீபனி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்திருந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் ஆகியோர் இங்கு கல்வி பயின்றனர் என்பது இந்த ஆஸ்ரமத்தின் சிறப்பு.

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்

ஸிம்ஹத் மேளா

பாற்கடலைக் கடைந்து அமுதம் கிடைத்ததும், அதைப் பறிக்க வந்த அசுரர்களிடமிருந்து குரு, சந்திர, சூரியர்கள் கலசத்தைக் காத்து, மாற்றி மாற்றி எடுத்துச் செல்கையில் ஹரித்வார், நாசிக், ப்ரயாக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் அமிர்தம் தளும்பிச் சிதறியது. அவ்வாறு அமிழ்தம் சிதறிய இடங்களில் உள்ள நதிகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் அதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவின் போது புனித நீராடுவது சிறப்பு என்றும் சொல்கிறார்கள். அவ்வாறு உஜ்ஜயினியிலும் கும்பமேளா சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கு நடைபெறும் கும்பமேளாவுக்கு 'ஸிம்ஹத் மேளா’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

உஜ்ஜயினி தலபுராணம்

முன்னொரு காலத்தில் இந்தத் தலத்தில் வேத ப்ரியன் என்பவன் வாழ்ந்துவந்தான். எப்போதும் நல்லொழுக்கங்களோடு வாழ்ந்துவந்த அவன் மீது மக்கள் நன் மதிப்பு கொண்டு விளங்கினர். அங்கு அருகே இருக்கும் ரத்னமாலா பர்வதத்தில் தூஷணன் என்னும் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் மக்களுக்கும் ரிஷிகளும் பெரும் கொடுமைகளைச் செய்துவந்தான். அதைத் தாங்கமுடியாத மக்கள் வேதப்ரியனிடம் வந்து முறையிட்டனர். வேதப்ரியனோ, ‘சிவனைத் தவிர நம்மைக் காக்கும் தெய்வம் இல்லை’ என்று சொல்லி ஓரிடத்தில் அமர்ந்து ஊராரோடு சேர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார்.

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்

இதை அறிந்த தூஷணன் அங்கு வந்து அவர்களின் வழிபாட்டை சிதைக்கத் தொடங்கினான். எல்லோரும், `சிவனே!' என்று அலற, சிவன் அங்கு ஜோதி ரூபமாய்த் தோன்றி தூஷணனை அழித்தார். தேவர்களும் முனிவர்களும் மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் தலத்திலேயே எழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். சிவ பெருமானும் அதற்கு இணங்கி, ‘மகாகாளர்’ என்னும் திருநாமத்தோடு அங்கு எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

அந்நியர் படையெடுப்பும் மறு நிர்மாணமும்

பாரதத்தின் வரலாற்றில் பல்வேறு மன்னர்கள் உஜ்ஜயினி கோயிலில் வழிபாடு செய்து அந்தத் தலத்துக்குத் திருப்பணி செய்துள்ளனர். அதனால் இத்தலம் செல்வச் செழிப்போடு விளங்கியது. 13 ம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பினால் இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்பின் 500 ஆண்டுகள் கழித்து, ‘ரானோஜி சிந்த்யா’ என்னும் மராட்டிய மன்னன் இந்தக் கோயிலைப் புதுப்பித்தான்.

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்

விசேஷ அலங்காரம்

இங்கே ஸ்ரீ மகாகாளருக்குச் செய்யும் அலங்காரம் தனிச் சிறப்பானது. 'பாங்க்’ எனும் பொருளை முதலில் ஸ்வாமியின் திருமேனியில் அப்பி, அதன்மேல் முந்திரி, திராட்சை, செர்ரி, பாதாம், குங்குமப்பூ, சந்தனம் இவற்றால் இமை, கண், மூக்கு, வாய், நெற்றிக்கண், மீசை, விபூதிப்பட்டை எனப் பாங்காக அலங்காரம் செய்கிறார்கள். இங்கு அதிகாலையில் நடைபெறும் விபூதி அபிஷேகம் சிறப்பானது. இதற்காக பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே இரவு தங்கிக் காத்திருப்பார்கள். காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். அப்போது மகாகாளர் விபூதி அலங்காரத்தில் திகழ்வார். நெய்தீபம் மட்டுமே சந்ந்தியில் சுடர் விடும். அந்தத் திருக்கோலத்தில் மகாகாளரை வழிபடுவது மிகவும் சிறப்பு என்கிறார்கள்.

தற்போதைய திருப்பணிகள்

இந்த அற்புதமான திருத்தலத்தைப் புதுப்பிக்கத் திட்டம் தீட்டப்பட்டு ரூ. 316 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் மகாகாளர் வளாகத்தை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இங்கு வேலைப்பாடுகள் நிறைந்த 108 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணக் காட்சிகளை உணர்த்தும் 93 சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர்

திட்டத்தின் முதல் கட்டமாக மஹாகாளேஸ்வர் கோயில் வளாகம், ருத்ரசாகர் ஏரி சுத்திகரிக்கப்பட்டு அதன் கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அழகிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் அன்னச்சத்திரம், பிரசங்க மண்டபம், தாமரைக் குளம் ஆகியனவும் கட்டப்பட்டுள்ளன. முதற்கட்டப் பணிகள் முடிந்து மகாகாளேஸ்வரர் கோயில் வளாகம் எழில் கொஞ்சத் திகழ்கிறது.

தற்போது 70 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 2023 ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மீதம் உள்ள பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று அந்த வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விரைவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.