திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

ஐஸ்வர்யம் அருளும் மகாலட்சுமி தரிசனம்!

Mumbai mahalakshmi temple
பிரீமியம் ஸ்டோரி
News
Mumbai mahalakshmi temple

தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள் வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமியாகவும், ராஜ்ஜியத்தில் ராஜ்ய லட்சுமியாகவும், இல்லங்களில்- கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாளாம்.

மும்பையில் பல வரலாற்றுப் பெருமைகள் கொண்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது ஸ்ரீமகாலட்சுமி ஆலயம். மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என மூன்று தேவியரும் ஒரே இடத்தில் கோயில்கொண்டுள்ள விசேஷமான தலம் இது.

மும்பை மகாலட்சுமி கோயில்
மும்பை மகாலட்சுமி கோயில்

ஒரே கருவறையில் மூன்று தேவியரும் தாமரை மலர் மீது எழுந்தருளியிருப்பது, வேறெந்த தலங்களிலும் காண்பதற்கரிய சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

தென்மும்பையின் அடையாளமாக அரபிக்கடலோரம் கோயில் கொண்டுள்ள இந்த மகாலட்சுமித் தாயார் ஆங்கிலேயர்களையும் பரிட்சித்து ஆட்கொண்டவள் என்கிறது தலபுராணம். தன்னை எண்ணித் துதிக்கும் பக்தர்களின் குறைகளை விரைந்து தீர்ப்பவள் இந்தத் தாய்.

பழைமையும் பெருமையும் வாய்ந்த நம் ஆலயங்கள், ஒருகாலத்தில் அந்நியரால் தாக்கி அழிக்கப்பட்டன. அப்போது, முப்பெரும் தேவியரின் மூல விக்ரகங்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்த பக்தர்கள் அவற்றை மறைத்துவைக்கும் விதமாக அரபிக்கடலில் போட்டனர். காலங்கள் ஓடின. பாரததேசம் ஆங்கிலேயர் வசம் வந்தது. அன்னையர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் நிகழ்த்திய திருவிளையாடல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி
மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி

18-ம் நூற்றாண்டின் மத்தியில் மும்பையின் ஆளுநராக இருந்தார் ஜான் ஹார்ன்பே. மும்பை நகரை விரிவாக்க விரும்பிய அவர், அதற்கு `ஒர்லி' மற்றும் `மலபார் ஹில்' பகுதியை இணைத் தால் மட்டுமே அது சாத்தியம் என்பதை அறிந்தார். இதனால் அதிகமான நிலப் பரப்பு கிடைக்கும் என்று ஆங்கில அரசாங் கம் மதிப்பிட்டது. ஜான் உத்தரவின் பேரில் `ராம்ஜி சிவாஜி' என்ற பொறியாளர் இந்தத் திட்டத்திற்காக நியமிக்கப்பட்டார்.

கடலில் கட்டுமானப் பணிகளுக்காக அடித்தளம் அமைக்கத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் அடித்தளம் அமைக் கப்பட்டபோதும், அது கடல் அலைகளால் அரித்துச் செல்லப்பட்டது அல்லது இடிந்து விழுந்தது. ஆனாலும் முயற்சிகள் கைவிடப்படவில்லை.

மகாலட்சுமி கோயில்
மகாலட்சுமி கோயில்

ஒரு கட்டத்தில் ராம்ஜி சிவாஜியின் கனவில் ஸ்ரீமகாலட்சுமித் தாயார் தோன்றி, ‘நாங்கள் சகோதரிகள் மூன்று பேரும் கடலுக்குள் இருக்கிறோம். எங்களை அங்கிருந்து மீட்டெடுத்த பிறகு பணிகளைத் தொடருங்கள்!’ என்று தெரிவித்தார்.

மகாலட்சுமி தரிசனம்!
மகாலட்சுமி தரிசனம்!
மகாலட்சுமி தரிசனம்!
மகாலட்சுமி தரிசனம்!
மும்பை மகாலட்சுமி தரிசனம்!
மும்பை மகாலட்சுமி தரிசனம்!


வியப்பும் சிலிர்ப்பும் அடைந்த ராம்ஜி, ஆங்கிலேய ஆளுநர் ஜானிடம், தான் கண்ட கனவினைத் தெரிவித்தார். ஜானுக்கு இதுபோன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகக் கடலில் சிலைகளைத் தேடுவதற்கு அனுமதி கொடுத்தார்.

ராம்ஜி உள்ளூர் மீனவர்கள் சிலருடன் படகு களில் சென்று தேட ஆரம்பித்தார். விரைவிலேயே அந்தச் சிலைகள் அவர்கள் கைகளின் கிடைத் தன. அவற்றை அங்கிருந்த மலை உச்சியில் வைத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ராம்ஜி, பின்னர் ஆங்கிலேயரிடம் நிலம் வாங்கித் தற்போதுள்ள கோயிலைக் கட்டி முடித்தார்.

ஸ்ரீமகாலட்சுமித்தாயார் பாற்கடலில் இருந்து தோன்றிவள். அவளைப்போலவே இங்கும் தாயார் கடலில் இருந்து எழுந்தருளியிருப்பதால், பக்தர்கள் இங்கு எந்தக் காரியத்தை நினைத்து வழிபட்டாலும் அது நிறைவேறும்; கடன் பிரச்னைகள் நீங்கி செல்வகடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

கோயில் இருக்கும் பகுதியை அடைந்ததும் கணபதி பெருமானை தரிசிக்கலாம். அவரை வணங்கிச் சென்றால், ஸ்ரீபரம ராமேஸ்வரர் கோயில் இருக்கிறது. முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால் சற்று உயரமான இடத்தில் தேவியரின் கோயில் இருக்கிறது. படிக்கட்டுகளில் ஏறித்தான் ஆலயத்துக்குச் செல்லவேண்டும்.

படிக்கட்டுகளில் ஏறும் முன்பாக சீதா மற்றும் லட்சுமணனோடு அருளும் ஸ்ரீராமர் சந்நிதி உள்ளது. ஸ்ரீராமரை தரிசித்துப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால், முதலில் நாம் பார்ப்பது திருக் கோயிலின் கொடி மரம். வெள்ளித் தகடு களால் கொடிக்கம்பம் கவசமிடப் பட்டுள்ளது. அதனை வணங்கி உள்ளே சென்றால் அம்மனை தரிசிக்கலாம்.

மகாலட்சுமி கோயில்
மகாலட்சுமி கோயில்

கருவறைக்குள் முப்பெரும் தேவியரும் கொலுவீற்றிருக்கிறார்கள். கருவறையின் நுழைவு வாயிலில் ஜய மற்றும் விஜய தேவியர் காட்சிகொடுக்கின்றனர். அவர்கள் அருகில் இருபுறமும் ருக்மிணி யுடன் ஸ்ரீபாண்டு ரங்கனும் ஸ்ரீவிநாயகரும் தனித்தனியே சந்நிதி கொண்டுள்ளனர்.

இங்கு தேவியரின் திருமேனிகள் கவசமிடப்பட்டுள்ளன. கவசம் இன்றி தேவியரை தரிசிக்க விரும்பினால் தினமும் இரவு 9.30 மணிக்குச் செல்லவேண்டும். இரவு 9.30 மணியிலிருந்து 20 நிமிடங்கள் வரை கவசம் இன்றி தேவியர் தரிசனம் அருள்வர்.

இந்தக் கோயிலில் மகாலட்சுமி தேவியை தாமரை மலர் கொண்டு வழிபடுவது விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள். தேவியர் மூவரையும் வழிபட்டுவிட்டுப் பிரதட்சிணமாக வந்தால், பின்புறம் சுவரில் கறுப்பு வண்ணக் கற்கள் இருக்கின்றன. அவற்றின்மீது பக்தர்கள் நாணயங்களை வைத்துச் சிறிது நேரம் பிடித்துக்கொள்கின்றனர். அது கீழே விழாமல் அப்படியே இருந்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. கீழே விழும் நாணயங்கள் அப்படியே உண்டியலுக்குச் சென்றுவிடும். கோயிலுக்குப் பின்புறம் கடற்கரையையொட்டி ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் கோயில்கள் இருக்கின்றன.

இந்தக் கோயிலுக்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவராத்திரி நாள்களில் தினமும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் திரள்வார்களாம்! கடலில் இருந்து அம்மனை வெளியில் எடுத்த பிறகுதான் மும்பை இந்த அளவுக்குச் செல்வச்செழிப்போடு வளர்ச்சியடைந்தது என்பது இந்த நகரத்தினரின் நம்பிக்கை. இந்த மகாலட்சுமியை வழிபட் டால், நம் இல்லத்திலும் செல்வம் கொழிக்கும்; ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை!

தினமும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க முடியும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், ரயில் மற்றும் விமான மார்க்கமாக மும்பை வரலாம். இந்தக் கோயில் `மகாலட்சுமி' ரயில் நிலையத்தில் இருந்து சில நிமிடப் பயண தூரத்தில் அமைந்துள்ளது. ரயில் நிலையத் திலிருந்து டாக்சி வசதியும் உண்டு.

இல்லத்தில் கிரக லட்சுமி!

விளக்கில் வாசம் செய்பவள் ஸ்ரீமகா லட்சுமி. இங்ஙனம் தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள் வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமியாகவும், ராஜ்ஜியத்தில் ராஜ்ய லட்சுமியாகவும், இல்லங்களில்- கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாளாம்.

அவளே விலங்குகளிடம் சோப லட்சுமியாகவும், புண்ணிய சீலர்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், சத்திரியர்களிடம் கீர்த்தி லட்சுமியாகவும் அருள்பாலிப்பதாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

- எஸ். விஜயா, திருச்சி-13

அருள்புரிவாள் தாமரையாள்!

தாமரையில் விரும்பி உறைவதால் தாமரையாள், பத்மா, பத்மவாசினி, பத்மினி, நளினி, நளினாசனி, கமலவல்லி, கமலினி, கமலா, நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு.

ஆக தாமரைப் பூ சமர்ப்பித்து திருமகளை வழிபடுவது சிறப்பு. அதேபோல் தாமரை பூத்துக் குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

- சி.மீனா, கரூர்