Published:Updated:

மாமன்னர்கள் திருப்பணி கண்ட முன்னேஸ்வரம்!

முன்னேஸ்வரம்
News
முன்னேஸ்வரம்

ராவணன் வழிபட்ட இலங்கைத் திருக்கோயில்

ராவணன் ஆண்ட இலங்கை, தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரிதாக இருந்ததாம்! ராவணன், இலங்கையின் முழுவதும் சிவாலயங்களை எழுப்பி சிவபூஜை செய்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஐந்து மிகவும் முக்கியமானவை.

முன்னீஸ்வரம், கேத்தீஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்தையும் `பஞ்ச ஈஸ்வரத் தலங்கள்’ என்று போற்றி வழிபடுகிறார்கள் இலங்கை மக்கள். இந்தத் தலங்களைப் பற்றிய வரலாறு தமிழர்களின் சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்புடையது; நம் பண்பாடு, கலை, கலாசாரம், அரசியல் ஆகியவற்றைப் பேசுவது; கடல்கடந்து சென்று ஆட்சி செய்து அந்த நிலத்தைச் செழிப்பாக்கிய நம் மன்னர்களைச் சார்ந்தது.

இங்ஙனம் புராண - இதிகாச காலம் தொட்டு நிலைத்து நின்று, மன்னர்கள் காலத்தில் செழித்தோங்கிய ஒரு தலம்தான் முன்னீஸ்வரம். இந்த ஆலயத்தில் அருளும் ஈசன் ராவணனால் வழிபடப்பட்டவர்; அவனே இந்த ஈசனைப் பிரதிஷ்டை செய்தான் என்பாரும் உண்டு. இதன் பெருமையை எடுத்துச் சொல்லும் ராமாயண நிகழ்வு ஒன்றும் உண்டு.

சிவபக்தனான ராவணனைக் கொன்ற காரணத்தால் ராம பிரானைப் பற்றிக்கொள்ள தருணம் எதிர்பார்த்திருந்தது பிரம்மஹத்தி தோஷம். ராமபிரான் சீதாவுடன் ஆகாயமார்க்கமாக புஷ்பக விமானத்தில் பயணித்தார். பிரம்மஹத்தியும் கரிய உருவம் கொண்டு அவரைப் பின்தொடர்ந்தது. இதை ராமரும் அறிந்தார்.

முன்னேஸ்வரம் ஆலயம்
முன்னேஸ்வரம் ஆலயம்


ஓரிடத்தில் அந்தக் கரிய உருவம் அலறி மறைந்தது. இதைக் கண்டு வியந்த சீதாதேவி, அதற்கான காரணத்தைக் கேட்டாள். ராமபிரான் கீழே பூமியைக் காட்டினார். அங்கே ஒளிபொருந்திய ஒரு நந்தவனம் இருந்தது. அந்தத் தலத்தின் சாந்நித்தியமே பிரம்மஹத்தி தோஷத்தை அலறவிட்டிருக்கிறது என்பதை அறிந்து, அங்கே புஷ்பக விமானத்தை இறக்கினார்.

முன்னொரு காலத்தில் முனிவர்களும் தவசிகளும் சிவ வழிபாடு செய்த தலம் அது என்பதை அறிந்து, அங்கே ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமபிரான். சீதாதேவியின் உதவியுடன் சிவ பூஜை செய்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். ராமர் சிவபூஜை செய்த தலங்களில், ராமேஸ்வரத்துக்கும் முந்தைய - பழைமையான தலம் முன்னேஸ்வரம் என்கிறார்கள்.

சரித்திரம் பேசும் திருக்கோயில்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில், வடமேல் மாகாணத்தில் - புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது முன்னேஸ் வரம். காலத்தால் முந்தையவர் எனும் பெருமையை உடைய ஈசன் கோயில் கொண்டிருப்பதால், `முன்னை ஈஸ்வரம்’ எனும் திருப்பெயர் கொண்டதாம் இந்தத் தலம். அதேபோல், இங்குள்ள ஈஸ்வரனுக்கு `முன்னை நாத சுவாமி’ என்பது திருநாமம். அம்பிகைக்கு வடிவாம்பிகை என்பது திருநாமம்.

ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய ஈசனின் சந்நிதியைத் தரிசிக்கலாம். சந்நிதியில் ஈசன் சதுர வடிவ ஆவுடையாருடன் அருள்கிறார். இவரைத் தரிசிக்க மதபேதம் இன்றி மக்கள் வந்து செல்கின்றனர். ஈசனுக்குப் பழங்களும் பொருள்களும் வாங்கி வந்து சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு இவரை வழிபட்டால், ஶ்ரீராமனின் தோஷம் நீங்கியது போன்றே தங்களின் தோஷமும் வினைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முன்னேஸ்வரம் ஆலயம்
முன்னேஸ்வரம் ஆலயம்


இந்த நம்பிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்வது. அதற்கு ஆதாரம், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்த மன்னர்கள் பற்றிய குறிப்பு. கி.மு 543-ம் ஆண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஜயன் என்னும் மன்னன் இந்த ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தான் என்கிறது தலபுராணம்.

மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழ வம்சத்தில் புகழோடு விளங்கிய மன்னன் குளக்கோட்டன் எனப்படும் சோழ கங்க தேவன். இவர் இலங்கையை ஆட்சி செய்தபோது முன்னேஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் திருக்கோயிலைப் புனரமைத்தாராம்.

இலங்கை மன்னர்களின் ஒருவரான ஆறாம் பராக்கிரமபாகு சிவன் மீது பக்தி கொண்டு இந்த ஆலயத்தை மீண்டும் புனரமைத் தார். 15-ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஒன்பதாம் பராக்கிர பாகுவும் இந்த ஆலயத்தை மிகவும் சீர்படுத்தி முறையாக இங்கு வழிபாடுகள் நடைபெற வகை செய்தார். இந்தச் செய்திகளை `முன்னேஸ்வர மகாத்மியம்’ என்னும் நூல் தெரிவிக்கிறது.

1578-ம் ஆண்டு இலங்கை மீது படையெடுத்த போர்ச்சுக்கீசியர்கள், மூலஸ்தானம் தவிர்த்து இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கிக் கொள்ளையிட்டனர். அதன்பின் 175 ஆண்டுகள் இந்த ஆலயம் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி 1745 - 1782 ம் ஆண்டு வரை இலங்கையை ஆண்ட ராஜசிங்கன் என்னும் மன்னன் இந்த ஆலய மகிமைகளை அறிந்து, மீண்டும் புத்தெழில் பெறச் செய்தான்.

முன்னேஸ்வரம் சிவபெருமான்
முன்னேஸ்வரம் சிவபெருமான்
முன்னேஸ்வரம் ஆலயம் வடிவாம்பிகை
முன்னேஸ்வரம் ஆலயம் வடிவாம்பிகை
முன்னேஸ்வரம் ஆலயம்
முன்னேஸ்வரம் ஆலயம்

இந்த ஆலயத்தின் கருவறை முதலிய கட்டுமானங்கள் கல் கட்டுமானங்களாகவும் சோழர்காலக் கட்டடக் கலையின் பாணி யிலும் திகழ்கின்றன. சோழர் கட்டட பாணிக்குச் சான்றான இரட்டை மாலை, இந்த ஆலயத்தின் பழைமையான கட்டுமானங் களில் காணப்படுகின்றன.

கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, புராதனமான லிங்கோத்பவர், துர்கை, பிரம்மா ஆகியோரையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் தேவி பூதேவி சமேதராக மகா விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உள்ளது. இந்த ஆலயத் தின் தலவிருட்சம் ஆல மரம். இங்கு வடிவாம்பிகை கோயில் கொண் டது குறித்த நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.

சிறுமியாக வந்து சிலையான அம்பிகை!

முன்னொரு காலத்தில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்கும் பொருட்டு நதிக்கரைகளைத் தேடிப் பயணித்தார். அவரின் நல்வினை காரண மாக இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே நந்தவனம் ஒன்றில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிந்ததைக் கண்டார்.

அழகும் தேஜஸும் பொருந்திய அவர்கள் இருவரும் யார் என அறிய விரும்பி அருகே சென்றார். அவர்களோ ஒரு நொடியில் அங்கிருந்து மறைந்துவிட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மீனவர் மறுநாளும் நந்தவனத்துக்குச் சென்றார். அன்றும் அவர் அருகில் நெருங்கியதும் அந்தக் குழந்தைகள் மறைந்துபோயினர். மீனவருக்கு அச்சமும் ஆச்சர்யமும் ஒருங்கே தோன்றின.

`இது என்ன மாயம்’ என்பதை அறிய விரும்பினார். மறுநாள் முன்னதாகவே வந்து தக்க இடத்தில் மறைந்துகொண்டார். சிறுவனும் சிறுமியும் வந்து விளையாடத் தொடங்கினர். ஏதுவான ஒரு தருணத்தில் பாய்ந்து சென்று அவர்கள்முன் நின்றார் மீனவர். அவரைக் கண்டதும் சிறுவன் மாயமானான். சிறுமி மறைவதற்குள் அவளின் கையைப் பிடித்துக்கொண்டார் மீனவர். “நீ யார்?” என்று கேட்டார்.

அறுபத்து மூவர்
அறுபத்து மூவர்

அடுத்த நொடி அந்தச் சிறுமி அப்படியே சிலையானாள். மீனவர் பயந்துபோனார். அந்தச் சிலை சிறுமியின் உருவிலேயே இருந்தது. அந்தச் சிலையை அங்கேயே விட்டுப் போக மனமின்றி, தன்னுடன் எடுத்துச் சென்றார் மீனவர்.

அதேநேரம், `இது ஏதோ துர்சக்திகளின் வேலையாக இருக்குமோ’ என்ற பயமும் அவருக்குள் எழவே செய்தது. அன்று இரவு உறங்கும் போது அவர் கனவில் தேவி பார்வதி பிரத்யட்சமானாள். “நானே சிலையாக இருக்கிறேன். அச்சம் வேண்டாம். என்னை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய் ” என்றாள்.

கண்விழித்த மீனவர், சிலையை மன்னரிடத்தில் எடுத்துச் சென்று விஷயத்தை விளக்கினார். மன்னவனுக்கு மீனவர் பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. சிலையை வைத்து விட்டுப் போகச் சொன்னார். மீனவர் சென்றதும் அந்தச் சிலையைப் போன்று வேறுசில சிலைகளைச் செய்யச் சொன்னார். அவை தயாரானதும் அவற்றோடு இந்தச் சிலையை சேர்த்து வைத்தார். பிறகு மீனவனை அழைத்துவரச் செய்தார்.

மீனவர் வந்ததும் அவரிடம், “அன்னை பராசக்தி உன் கனவில் வந்தது உண்மை என்றால், இந்தச் சிலைகளில் நீ கொண்டு வந்த உண்மையான சிலை எது என்று அடையாளம் காட்டவேண்டும். சரியாகச் சொல்லிவிட்டால், நீ சொல்வது உண்மை என்று ஏற்போம்’’ என்றார் மன்னர்.

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்

இது என்ன சோதனை என்று மனதுக்குள் வருந்திய மீனவர், அம்பாளைப் பிரார்த்தித்தபடி சிலைகளை உற்றுப்பார்த்தார். ஒரே மாதிரி தோற்றம் அளித்த சிலைகளில் ஒன்று மட்டும் மீனவர் காணும்படி தன் காலை லேசாக அசைத்தது. சிலிர்த்துப்போன மீனவர், அதுவே தான் கொடுத்த சிலை என்று தெரிவித்தார். மன்னன் வியந்தார். அருகே இருந்த முன்னேஸ்வரம் ஆலயத்தில் அந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்தான். பேரழகு வடிவுடன் திகழும் அந்த அன்னையே இன்றைக்கும் முன்னேஸ்வரம் கோயிலில் வடிவாம்பிகையாய் அருள்பாலிக்கிறாள் என்கிறது தல வரலாறு.

இங்கு அன்னை வடிவாம்பிகைக்கு மாசி மாத மக நட்சத்திரத்தை ஒட்டி நடைபெறும் தீர்த்தோற்சவம் மிகவும் சிறப்பானது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்!

-உலா தொடரும்