Published:Updated:

விசேஷ முத்திரையுடன் அருளும் நாதகிரி முருகன்!

நாதகிரி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
நாதகிரி முருகன்

ஆனந்த் பாலாஜி

விசேஷ முத்திரையுடன் அருளும் நாதகிரி முருகன்!

ஆனந்த் பாலாஜி

Published:Updated:
நாதகிரி முருகன்
பிரீமியம் ஸ்டோரி
நாதகிரி முருகன்

சிவமாகிய நாதமும் ஹரியாகிய கிரியும் இணைந்து ஹரிஹர சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதத் தலம் நாதகிரி. ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன்.

விசேஷ முத்திரையுடன் அருளும் நாதகிரி முருகன்!

சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம் இது.

பெரும்பாலான கோயில்களில் வேலேந்திய வண்ணம் கடி ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய - வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். வேறெங்கும் காண்பதற்கரிய கோலம் இது என்கிறார்கள்.

ந்தத் தலம் சிவ, விஷ்ணு அம்சத்துடன் விளங்குவதை உணர்த்தவே முருகனை வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள். ஆறுமுக சிவம் என்று முருகனைப் போற்றுவர் ஆன்மிக ஆன்றோர். அத்தகைய முருகப்பெருமானின் கிரீடமும் வரத ஹஸ்தமும் இங்கே பெருமாளின் அம்சத்தைக் காட்டுகின்றன என்று சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

தேடி வரும் அடியவர்களுக்கு வரம் வாரி வழங்க வரத ஹஸ்தத் துடனும் `அஞ்சேல்’ என்று அவர்களுக்கு அருள்புரிய அபய ஹஸ்தமும் காட்டித் திகழ்கிறாராம் நாதகிரி முருகன்.

`கண்மலரில் தண்ணருளைக் காட்டியருளும் இந்தப் பெருமானை தரிசித்த கணத்திலேயே நம் சங்கடங்கள் யாவும் விலகும்’ என்றும் `கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த முருகனை வழிபட்டால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் நிறைவேறும்’ என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், இந்தக் கந்தனின் கருணையை அனுபவத்தில் உணர்ந்த உள்ளூர் பக்தர்கள். அடியவர்களை ஆட்கொள்ள முருகன் இம்மலையில் எழுந்தருளிய காரணத்தை அழகாக விவரிக்கிறது தலபுராணம்.

தேவேந்திரனின் மகன் ஜெயந்தன் அசுரர்களுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்தான். பிறகு சிவபெருமானின் அருளாசிப்படி, இந்த மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான். அசுரர்களை அழித்த முருகப்பெருமான், ஜெயந்தனுக்கு இந்த மலையில் அருள் வழங்கினாராம். இங்கே முருகனின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், `ஓம் நமசிவாய’ என முழங்கிட, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன் காரணமாக நாதகிரி எனும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.

சுரனை அழித்த முருகன் ஆனந்தமாக இம்மலையில் எழுந்தருளினார். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வமித்திரர், வாமதேவன் போன்று சித்தபுருஷர்களும் மகான்களும் நாதகிரி முருகனை வழிபட்டு அருள் பெற்றனர். இங்கு தவம் செய்த முனிவர்களும் சித்தர்களுமே மலையில் மரங்களாகவும், செடிகளாகவும், மலைக் கற்களாகவும் திகழ்கிறார்கள் என்பது நம்பிக்கை.

ங்க நிதி, பதும நிதியைத் தன்னகத்தே கொண்டிருந்த இந்தத் திருக்குன்றம், யுகம் யுகமாக பூதகணங்களால் பாதுகாக்கப் பட்டதாம் அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில், நாதகிரியில் திகழும் குகைக் கோயில் மிக முக்கியமானது என்கிறார்கள். இங்ஙனம் தெய்வ சாந்நித்தியத்துடன் திகழ்வதால் இந்த மலையை தெய்வத் திருமலை என்றும் போற்றுகிறார்கள்.

நாதகிரியின் மகிமையை உணர்ந்த பெரியோர்கள், இந்தத் தலத்துக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக முருகனின் திருமேனியை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார்களாம். புளியங்குடியை அடுத்த சொக்கம்பட்டி அருகிலுள்ள பொத்தை (மலைப்) பகுதியில் வெளிப்பட்ட விசேஷமான கல்லில் முருகனின் திருமேனி செய்யப்பட்டது. சிலையைச் செய்த சிற்பியுடன் அடியார் ஒருவர் அந்த அற்புதத் திருமேனியை தலைச் சுமையாகக் கொண்டு வந்து நாதகிரியில் பிரதிஷ்டை செய்தனராம்.

லையின் மீது கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகன். இங்கே, விநாயகர் பீடம், சப்த கன்னியர் சந்நிதி, அவர்கள் நீராடிய சுனை, ஹனுமனின் திருவுருவம், ராமரின் பாதச் சுவடு, காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பக்காட்சி ஆகியவற்றை தரிசிக்கலாம்.

ப்தகன்னியர் நீராடிய சுனையின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்க வல்லது. சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட அம்மையார் இருவரின் ஜீவசமாதிகளும் சுனையின் அடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தூரத்தில், சிவகிரி தாலுகாவில் உள்ள கிராமம் இராயகிரி.
இந்தக் கிராமத்தின் அருகில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது, நாதகிரி மலைக் கோயில். ராஜபாளையத்திலிருந்து சிவகிரி வரையிலும் நிறைய பேருந்து வசதி உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்துள்ள கரிவலம்வந்த நல்லூரிலிருந்து மேற்கே சுமார் 8 கி.மீ. தூரத்தில் நாதகிரி அமைந்துள்ளது.

திருத்தேர்...

நெல்லைச் சீமையில், தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு புராதனமான திருக்கோயில்களைப் புனரமைத்து திருப்பணி செய்துள்ளது ஆதி வித்யா அஷ்டகாயன் அறக்கட்டளை. நாதகிரி மலை அடிவாரத்தில், இந்த அமைப்பின் சார்பில் உலக நன்மையை வேண்டி பெரும் யாகம் நடைபெற்று வருகிறது.

சித்தர்கள் அருளிய வழிமுறையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அணையா குண்டமாக இந்த யாக வைபவம் நடைபெற்று வருகிறது. மட்டுமன்றி, ஊர்மக்களுடன் இணைந்து நாதகிரி தலத்தின் திருத்தேரினைச் சீர்செய்யும் பணியிலும் ஈடுபட்டது இந்த அறக்கட்டளை. கடந்த 19.11.21 வெள்ளி அன்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. வரும் வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடைபெறும் விதமாக, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism