Published:Updated:

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

அர்ச்சகர்கள் வள்ளுவரைத் தமிழிலேயே வழிபடுகிறார்கள். வள்ளுவரின் திருநாமங்களைச் சொல்லிப் போற்றித் தமிழில் வழிபாடு செய்கிறார்கள். பக்தர்களுள் சிலர் சந்நிதியில் மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவித்து வருகிறார்கள்.

மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரரும் வள்ளுவரும்தான் நினைவுக்கு வருவார்கள். ஏழு சிவாலயங்கள் கொண்ட மயிலையில் வள்ளுவர் கோயில், எட்டாவது சிவாலயமாகச் சிறப்பு பெற்றுள்ளது. மயிலை முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயிலோடு இணைப்புக் கோயிலாகத் திருவள்ளுவர் கோயில் உள்ளது.

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

வள்ளுவர் கோயில் வாசல் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. வள்ளுவர்தான் இங்கு ஸ்தலமூர்த்தி. வள்ளுவர் தனி சந்நிதியில் இருக்கிறார். வாசுகி, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், துர்கை, முருகர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். நாகர் வழிபாடும் இங்கே நடக்கிறது. ஏகாம்பரேஸ்வரருக்கு இரண்டு கால பூஜை. வள்ளுவருக்குக் காலையில் மட்டும் ஒரு கால பூஜை.

வைகாசி அனுஷத்தில் உதித்த வள்ளுவர் மாசி உத்திரத்தில் ஜீவமுக்தி அடைந்தார் என்கின்றனர். அந்த நாள்களில் சிறப்பு பூஜை அறநிலையத்துறை சார்பில் இங்கே நடைபெறுகிறது.

கோயில் வளாகத்துக்குள், இலுப்பை மரத்தடியில் வள்ளுவர் அவதரித்ததாகக் குறிப்பிடப்படுகிற அந்த இடத்திலிருந்து 30 அடி தள்ளி அவருக்கு சந்நிதி உள்ளது. மரத்தின் அடிப்பாகம் செப்புத் தகட்டால் கவசமிடப்பட்டிருப்பதாக, அங்குள்ள குறிப்பு தெரிவிக்கிறது. அந்த இடத்தில் மேடை ஒன்று 1935-ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே வள்ளுவர் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கிணறு ஒன்றும் இங்கே உள்ளது. அதை இப்போதுதான் ஓரளவு தூர்வாரியிருப்பதாகக் கூறுகின்றனர், பக்தர்கள்.

திருவள்ளுவர் கோயில் முருகன்
திருவள்ளுவர் கோயில் முருகன்
``அந்த இரண்டு காரணங்கள்தான் திருவள்ளுவர் யாரென்று சொல்லும்!" கவிஞர் மகுடேசுவரன்

சந்நிதியில் தொள்ளக்காதுடன் வள்ளுவர் ஒரு கையில் ஜெபமணியும் மறு கையில் ஓலைச்சுவடியும் கொண்டுள்ளார். பத்மாசனத்தில் அபயமுத்திரை அருளியபடி காட்சி தருகிறவர், தமது சிரசில் லிங்கம் சூடியிருப்பதாகவும், மார்பில் அணிந்திருக்கும் யோகப்பட்டையில் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அர்ச்சகர்கள்.

கோயிலின் நான்காம் தலைமுறை அர்ச்சகராக இருக்கிறார் ஆறுமுகம். அவரிடம் பேசியபோது, "மாசி மகம், சிவராத்திரி, ஆவணி மூலம் உள்ளிட்ட உற்சவங்கள் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. சிவனுக்கான சகல அலங்காரங்களும் அபிஷேகங்களும் திருவள்ளுவருக்கும் நடைபெறுகின்றன. சொர்ணாபிஷேகமும் மஞ்சள், சந்தனம், மூலிகைப்பொடி, எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சர்க்கரை, பன்னீர், அரிசிமாவு ஆகியவற்றால் நித்திய அபிஷேகமும் வள்ளுவருக்கு நடைபெறுகிறது" என்றார்.

மயிலாப்பூர் வள்ளுவர் வாசுகி கல்யாண மண்டபம்
மயிலாப்பூர் வள்ளுவர் வாசுகி கல்யாண மண்டபம்

அடுத்த தலைமுறையாக அவரின் மகன் பாலாவும் இங்குதான் திருப்பணி செய்கிறார். இளைஞரான பாலாவிடம் பேசினோம். "வள்ளுவர் வாசுகிக்குத் திருக்கல்யாண வைபவம் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியில் இங்கே நடைபெறும். அன்றைய தினம் திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கே வந்து வணங்கினால் 90 நாள்களுக்குள் அவர்களுக்குத் திருமணமாகும் என்பது ஐதிகம். அத்தி, அரசு, வேம்பு ஆகிய மூன்று தலவிருட்சங்கள் இங்குள்ளன. இதை சங்கரநாராயணர் விருட்சம் என்கின்றனர். அத்திமரம் பெருமாளைக் குறிப்பது. எனவே, மீனாட்சியம்மனைப் பெருமாள் தாரை வார்த்துத் தரும் காட்சிபோல இந்த மரங்களும் காட்சியாய் விளங்குகின்றன. ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் திருக்கல்யாணம் தை சதயத்தில் நடைபெறும். மாசிப் பௌர்ணமியில் கடலாற்றுதல் வைபவமும் இங்கு விமரிசையாக நடைபெறும்" என்றார். கோயிலுக்கு இடதுபுறம் தனிக்கட்டடமாக 'வள்ளுவர் வாசுகி திருமண மண்டபம்' ஒன்று கட்டப்பட்டுள்ளது.

வரத கஜசக்தி விநாயகர், வல்லப விநாயகர், நர்த்தன விநாயகர், பால விநாயகர், அரச மரத்தடி விநாயகர் என பஞ்ச விநாயகர்கள் அருளும் தலமாக இது இருக்கிறது. கோயிலுக்குள் ஆஞ்சநேயர் சந்நிதியும் நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்துமூவர் உற்சவம் நடக்கும்போது, அதில் கலந்துகொள்வதற்காகத் திருவள்ளுவரும் இங்கிருந்து புறப்பாடாகிறார்.

அறுபத்துமூவர் உற்சவத்தில் திருவள்ளுவர்
அறுபத்துமூவர் உற்சவத்தில் திருவள்ளுவர்
திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை, ருத்ராட்ச மாலை! -தஞ்சையில் கைதான அர்ஜுன் சம்பத்

கோயிலில் உற்சவமூர்த்தியருகே விபூதி மடக்கு ஒன்று இருந்தது. அதில், இத்தலத்துக்கு 1925-ம் ஆண்டு இந்த விபூதி மடக்கு உபயமாக அளிக்கப்பட்டதாய் பொறிக்கப்பட்டிருந்தது. 1962-ம் ஆண்டுவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்டிருந்த இந்தக் கோயில், பிறகு அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகின்றனர்.

கோயில் புனரமைக்கப்பட்டு, 1985-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான கல்வெட்டு ஒன்று இங்கே இருக்கிறது. அடுத்த குடமுழுக்கு 2001-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. கோயில் வளாகத்துக்குள் வலதுபுறம் ஒரு நூலகமும் உள்ளது. தரைப்பகுதி, நூலகம், விமானங்கள், சுற்றுச் சுவர்கள் எனத் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன், தை அல்லது மாசி மாதத்தில் ஒரு தேதி குறித்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் கோயில் திருப்பணி கல்வெட்டு
திருவள்ளுவர் கோயில் திருப்பணி கல்வெட்டு

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்? #ThiruvalluvarTemple #Mylapore வீடியோ : முத்துக்குமரன் மு

Posted by Sakthi Vikatan on Wednesday, November 6, 2019

அர்ச்சகர்கள் வள்ளுவரைத் தமிழிலேயே வழிபடுகிறார்கள். வள்ளுவரின் திருநாமங்களைச் சொல்லிப் போற்றித் தமிழில் வழிபாடு செய்கிறார்கள். பக்தர்களுள் சிலர் சந்நிதியில் மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவித்து வருகிறார்கள்.

வள்ளுவர், சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தமிழின் பெருமையாக நின்று நிலைத்தவர். உலகப் பொதுமறையான திருக்குறள், தமிழர்களுக்கு உயிரிலக்கியமாக வாய்த்திருக்கிறது.

வள்ளுவம் வழி நடப்போம்.

அடுத்த கட்டுரைக்கு