Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

நல்லகுரும்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லகுரும்பன்

கு.அறிவழகன், தேனி-அல்லிநகரம்

ஷ்ட தெய்வமா ஆயிரம் சாமிகளைக் கும்பிட்டாலும் கஷ்ட நேரத்துக்குக் காவல் சாமியா ஓடிவருவது நம்ம குலசாமிதாங்க. அதனாலதான் நம்ம வீட்டுப் பெரியவங்க, தங்கள் மண்ணையும் மக்களையும் காப்பாத்தின தெய்வங்களைக் குலசாமியா கும்பிடச் சொன்னாங்க. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு சாமி கட்டாயமா இருக்கும். அது துடியா நின்னு எப்போதும் அந்தக் கூட்டத்தைக் காப்பாத்தும்.

அந்த வகையில், மதுரை மாவட்டத்துல புகழ்பெற்று விளங்கும் கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன் சாமிதான் எங்களுக்குக் குலசாமி. தேனி - அல்லிநகரம் சின்ன மாயத்தேவர் வகையறாவைச் சேர்ந்த எங்களுக்கு அடையாளமா இருக்கறதே நல்லகுரும்பன் சாமியோட கோயில்தான். என் அப்பா பெயரே குரும்பன்தான். அதனால சாமியும் அப்பாவும் எனக்கு ஒண்ணுதான்.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

எங்க பாட்டன் திருப்பதி போயிருக்க மாட்டார், எங்க அப்பா காசிக்குப் போனதில்லை. ஆனா, எங்க குலத்துல எல்லாருமே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கோம். எனக்குத் தெரிஞ்சு எங்க சீயான், பாட்டன், அப்பா, நான், என் பையன், பேரன்னு ஆறு தலைமுறையா இந்தக் கோயிலுக்குப் போய் வந்துக்கிட்டிருக்கோம். இப்போ எங்க பாட்டன், பூட்டன் எல்லாம் இல்லை. ஆனா, குடும்பத்தோட நாங்க இந்தக் கோயிலுக்குப் போறப்ப, அவங்க எல்லோரும் எங்களைப் பார்க்க வந்திடுறதா ஒரு நம்பிக்கை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோயில்ல ஒவ்வோர் இடத்தைப் பார்க்கும்போதும் முன்னோர் எல்லாருடைய ஞாபகமும் வந்து நெகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுக்கு ஏத்தமாதிரி அவங்க அரூபமா வர்ற மாதிரியான நிமித்தங்கள் கிடைச்சுடும். ஆக, குலசாமி மட்டும் இல்லங்க, எங்க குலமே இங்கேதான் இருக்குதுன்னு சொல்லலாம். அதுதாங்க குலசாமி கோயிலுக்குன்னு இருக்குற ஒரு பெருமை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

எங்க பாட்டன்தான் இந்தக் கோயிலை கட்டினார். இப்போ கோயில் பூசாரியா இருக்குற சந்திரசேகர் சாமிகூட எங்க சொந்தம்தான். இன்றைக்கும் இந்தக் கோயிலே எங்களுக்குக் காவல் நிலையமா, நீதி மன்றமா, மருத்துவமனையா இருந்து வருது. எந்த கஷ்டம்னாலும் சரி, `ஐயா... குரும்பா... நல்ல பதில் சொல்லு’ன்னு, அவர் இருக்குற திக்கைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டால் போதும். உடனே ஏதேனும் நிமித்த வடிவில் பதில் சொல்லிடுவார் குரும்பன். கனவு வழியாவோ அல்லது சகுனமாவோ வந்து `நான் இருக்கேன்டா’ன்னு அவர் நம்பிக்கை தந்துடுவார்.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

தென்னாட்டுல கள்ளர் நாட்டுக் கோயில்களில் பெரிய கோயில்னு சொல்லப்படுறது இந்தக் கருமாத்தூர் நல்லகுரும்பன் கோயில்தான். இங்கே சாதி வித்தியாசமில்லாம சகல சனங்களும் வந்து வழிபட்டுட்டுப் போறாங்க. நல்ல குரும்பன் பிரம்மாவோட அம்சம். படைக்கும் சாமியான அவரு, இங்க துடியா நின்னு நீதியைக் காக்கும் தெய்வமாவும் இருக்காரு.

பஞ்சபூதங்களில் இவர் நிலத்துக்கான சாமி. இந்த மண்ணையும் மக்களையும் காப்பாத்த கருமாத்தூர் பூமியில கண் மூடாம நிலையா நின்னுக்கிட்டு இருக்கார். விருமாண்டியும், பேய்க்காமனும், பேச்சியும் உலாவின இந்த மண்ணுல நல்லகுரும்பன் சாமியா தங்கினதே சிலிர்ப்பான கதை.

விருமன், பேய்க்காமன் இவங்களுக்குள்ள நடந்த சண்டைக்குப் பிறகு மத்தியஸ்தம் செய்ய வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூணு பேர்ல பிரம்மா இங்கே சாமியா நின்னுட்டாராம். பிரம்ம சாரியா இருந்து நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொன்னதால இவரைக் கன்னி கழியாத கடசாரி சாமின்னு கும்பிடுறாங்க. இவரோட வந்த ஏழு கன்னிமார்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கே தனிச் சந்நிதிகளில் குடிகொண்டு இருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்லவங்களுக்குக் காவலா இருக்கிற நல்லகுரும்பன், கெட்டது செய்றவங்களைக் கிட்ட சேர்க்காம தண்டிச்சுக் கேட்பார்னு ஒரு பயம் இருக்கு. நியாயத்துக்குப் பொறம்பா நடந்துட்டு, இந்தக் குரும்பன்கிட்ட தப்பிக்கவே முடியாது. கெட்டவனுக்குப் புத்தி சொல்ல, தான் கட்டிவளர்த்த நல்ல கரு பாம்பையும், நல்லவங்களுக்கு ஆதரவா, தான் தட்டி வளர்த்த கூழை பாம்பையும் அனுப்பி வைப்பார்னு நம்பிக்கை இருக்கு. அதனால இவர்கிட்ட பொய், புரட்டு எல்லாம் ஆகாது.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

அந்நியர்கள் வந்து இந்த மண்ணுல அலங்கோலம் செய்தபோது, மீனாட்சியம்மன் சொத்துக்குக் காவலா நின்னவரு நல்லகுரும்பன்னு சொல்லுவாங்க. இவர் சைவ சாமிதான். ஆனாலும், நாங்க இந்தக் கோயிலுக்குப் போனா, வாசல்ல இருக்கிற கருப்பசாமிக்குக் கடா வெட்டி வெளியிலேயே படையல் போட்டு அவரையும் கும்பிடுவோம்.

அன்றாடம் நல்லகுரும்பனுக்கு பூசை, பொங்கல்னு விசேஷம் இருந்தாலும் அமாவாசை, சிவராத்திரி, மாசிப் பச்சைன்னு பல திருவிழா நாள்கள் இவருக்கு உண்டு. எங்க வீட்டுல எந்த நல்லது நடந்தாலும் இவரைப் போய் பார்த்து உத்தரவு வாங்காம செய்ய மாட்டோம். ஆமாம், நல்லகுரும்பன், சாமியா மட்டுமல்ல எங்க வீட்டு மூத்தோனாகவும் இருந்து வர்றார். வருஷா வருஷம் சொந்தபந்தங்களோட வண்டி கட்டிக் கிட்டு இவரு சந்நிதிக்குப் போய், பொங்கல் வெச்சு படையல் போட்டு கொண்டாடினாத்தான் அந்த வருஷம் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

சாதாரணமா இருந்த என்னை வளர்த்தெடுத்து காத்துக்கிட்டு வர்றது நல்லகுரும்பன்தான். என் பிள்ளைங்க மதுரை, சென்னை, அமெரிக்கான்னு ஆளுக்கொரு திக்குல இருக்காங்க. எங்க எல்லோரையும் ஒண்ணுசேர்க்கிறது இந்தச் சாமிதான். வழிவழியா எங்க குடும்பம் இந்த மண்ணை மறக்காம இருக்கப்போறதும் இந்தச் சாமியாலதான்.

நான் அமெரிக்காவுல இருந்தப்பகூட, `சாமி இருக்குற எல்லையில இல்லாம போய்ட்டேனே’ என்ற கவலைதான் ரொம்ப இருந்துச்சு. ஏன்னா... பிள்ளைங்க எல்லாம் எங்கெங்கோ இருக்க, அவங்க நல்லா இருக்கணும்னு நான் அங்கே இருந்து என் சாமிய கும்பிடறதுதானே நல்லது.

எங்களுக்கு மட்டுமல்ல, இந்த மதுரை மாவட்டம் தாண்டி எல்லா தேசத்துல இருந்தும் இந்தச் சாமிய பார்த்து வணங்க வர்றாங்க. நீதி கேட்டு இங்கே வந்து நின்னால் போதும். யார் பக்கம் நியாயமோ அவங்க பக்கம் நின்னு காத்தருள்வார் எங்க சாமி; குறைன்னு இந்த மண்ணை மிதிச்சாலே போதும். குறைகளைக் களைந்து எங்க நல்லகுரும்பன் நிறைவா கொடுத்துடுவார்.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி... இந்தக் கோயில்ல நடந்த - நடக்குற அற்புதங்களைச் சொல்லச் சொன்னால் விடிய விடிய சொல்லலாம். கல்லானை கரும்பு தின்னதும்; வெள்ளானை வேதம் சொன்னதும்; தலையறுந்த கோழி சாட்சி சொன்னதும்; தாக்க வந்த அந்நியருக்கு வானுக்கும் பூமிக்குமா நின்னு பாடம் சொன்னதும்னு இந்தச் சாமி செஞ்ச அற்புதங்கள் அநேகம்.

மனசுல நினைச்சாலே கனவுல வந்துடுற கருணையான தெய்வம் இவர். பிள்ளை வரம் கேட்டும், வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகம் கேட்டும், முக்கியமா வம்பு வழக்கு தீரவும் இங்கே வர்றவங்க, சீக்கிரமே நிவர்த்தி பெற்றுப்போவது சகஜமானதுங்க. எங்க குலமும் இந்த மண்ணும் நல்லா இருக்குன்னா, அதுக்குக் காரணம் இந்தச் சாமிதான். இதை நாங்க மறக்காம கொண்டாடுற வரை எங்களுக்கு ஒரு கஷ்டமுமில்லை.

எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

உலகமே கொரோனா என்ற நோயால ரொம்ப கஷ்டப்படுது. நிச்சயமா எங்க நல்லகுரும்பன் அருளால சீக்கிரமே மருந்து கண்டுபிடிச்சு எல்லோரும் சுகமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன். அதுக்கு நல்லகுரும்பன் நல்ல வழி காட்டுவார். மதுரை பக்கம் வர்றவங்க, அப்படியே இந்தக் கோயிலுக்கும் ஒருமுறை வந்துட்டுப் போங்க. உங்க வாழ்க்கையிலே நல்லது நிரம்ப நடக்கும்.