மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்!

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

திருவையாறு அருகே திருமழப்பாடித் தலத்தில் பங்குனித் திருவிழாவில் நந்தி திருமணம் விசேஷம்.

கையில் சானிட்டைசர், முகத்தில் மாஸ்க் சகிதம் வந்து, மிகப் பொறுப்புடன் தேவையான அளவு இடைவெளிவிட்டு அமர்ந்த நாரதரிடத்தில் உற்சாகமில்லை. நாம் அவரையே உற்றுப்பார்த்ததன் உள்ளார்ந்த காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல் பேசத் தொடங்கினார்.

“உலக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுப் பிரச்னை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம். பல வகையில் பல விஷயங்களுக்கு பெருந் தடையாக அமைந்துவிட்டது, இந்நப் பிரச்னை!'' என்ற நாரதரின் பேச்சை ஆமோதித்ததுடன், தொடர்ந்து அவருடைய கருத்தையும் தகவல் களையும் செவிமடுக்க ஆயத்தமானோம்.

`‘நாகை மாவட்டம் திருக்கடவூர் ஶ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் ஶ்ரீகால சம்ஹார மூர்த்தி, மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் 16’ என்று சிரஞ்சீவி வரம் அளித்தவர்; மரண பயம் நீக்கியருளும் தெய்வம்.

ஆண்டுதோறும் அவருக்குச் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தன்று ஶ்ரீகாலசம்ஹாரத் திருவிழா இத்தலத்தில் வெகு சிறப்பாக நடக்கும். இங்குள்ள ஶ்ரீகாலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 12 முறைதான் அபிஷேகம் நடைபெறும். அதுபோல் ஆண்டுக்கு ஒரு முறைதான் அவர் வீதி உலா எழுந்தருளுவார்.

அன்றைய நாளில் அவரை தரிசனம் செய்தால் யம பயம் நீங்கி மக்கள் நீண்ட ஆயுளோடு நலமாய் வாழ்வர் என்பது ஐதிகம். இந்த வருடம் மே மாதம் 2-ம் தேதி இந்த வைபவம் நடைபெறவேண்டும். ஆனால் மே 3-ம் தேதிவரை ஊடங்கை நீடித்திருப்பதால் அந்தத் திருவிழாவை நடத்த முடியாத சூழல். பக்தர்கள் தரப்பில் மிகவும் ஆதங்கப்படுகிறார்கள்.''

நாரதர் உலா
நாரதர் உலா

``நோயின் தீவிரத்தைத் தடுக்க வேறு வழியில் லையே... விரைவில் இந்தப் பிரச்னை தீர அந்தக் காலசம்ஹாரர் அருளட்டும்'' என்று நாம் யதார்த்தத்தை எடுத்துரைக்க, நாரதரும் அதை ஆமோதித்தார். அவரிடம், “இதுபோல் வேறு எந்தக் கோயில் பெருவிழாக்கள் எல்லாம் தடைப்பட்டுள்ளன...” என்று கேட்டோம். நாரதர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“கும்பகோணம் அருகேயுள்ள திருமங்கலக்குடி - பிராணநாதேசுவரர் சமேத மங்களாம்பிகை திருக்கோயில். பஞ்ச மங்கள க்ஷேத்திரம். இத்தலத்து அன்னை மாங்கல்யம் காக்கும் மங்களாம்பிகை ஆதலால் அம்மையப்பர் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இப்பகுதியிலுள்ள மடத்திலிருந்து சீர்த்தட்டு கொண்டு செல்வார்கள். மாங்கல்யச் சரடு பெண்களுக்குப் பிரசாதமாக அளிப்பது இங்கு சிறப்பு. பெண்களின் கண்கண்ட நாயகியான இவள் நீடித்த தாலி பாக்கியம் தருவாள் என்பது நம்பிக்கை. அவ்விழா நடத்த முடியாமல் போனது.

அதுபோல் திருப்பனந்தாள் தலத்தில் பங்குனி உத்திரம் முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் நடைபெறும். தேரோட்டம், திருக்கல்யாணம் ஆகியன இங்கு விசேஷம். சுவாமி ஶ்ரீசெஞ்சடையப்பர் குருவாக உபதேசிக்கும் ஐதிக நிகழ்வு இங்கே நடைபெறாமல் போய்விட்டது.

திருவையாறு அருகே திருமழப்பாடித் தலத்தில் பங்குனித் திருவிழாவில் நந்தி திருமணம் விசேஷம். ‘நந்தி திருமணம் தரிசிக்க முந்தித் திருமணம் நடக்கும்’ என்பர். சுவாமியே நந்தியெம்பெருமானுக்குத் தாமே முன்னின்று திருக்கல்யாணம் செய்து வைப்பதாக ஐதிகம். அதுவும் நடைபெறவில்லை.

திருவாலங்காடு பிரம்மராளகாம்பாள் சமேத வடாரண்யேஸ்வரர் ஆலயம். இங்கு பங்குனி அமாவாசையன்று புத்திர காமேஷ்டி தீர்த்தத்தில் நீராடி புத்திர காமேஸ்வரரை வழிபட, மகப்பேறு இல்லாதவர்கள் மகப்பேறு அடைவர் என்பது ஐதிகம். அதுதவிர பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம், தேரோட்டம், திருக்கல்யாணம் உண்டு. உத்திரத்தன்று, பஞ்ச மூர்த்திகள் காவிரித்துறைக்கு வந்து தீர்த்தம் தருவார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தரிசனம் செய்யும் வாய்ப்பு இந்தாண்டு இல்லாமல் போய்விட்டது.

நரசிங்கன்பேட்டை ஶ்ரீசுயம்புநாத சுவாமி ஆலயம். சித்திரை முதல்நாள் இரவு இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவம் விசேஷம். அந்நாளில் இங்கு வழிபட்டால், சிவபெருமான் மற்றும் நாரணர் இருவரது அருளையும் ஒருசேரப் பெறலாம். அந்த வைபவமும் நடைபெறவில்லை.

நாரதர் உலா
நாரதர் உலா

சீர்காழி திருத்தோணியப்பர் ஆலயம் பங்குனிப் பிரம்மோற்சவமும் தடைப்பட்டுள்ளது.இதேபோல், வைத்தீஸ்வரன் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில் ஶ்ரீசெல்வமுத்துகுமரன் வைத்தியநாதரை பூஜித்து செண்டு பெறும் வைபவமும், நடைபெறவில்லை. திருவாரூர் தியாகராஜப் பெருமான் ஆலயத்தில், பங்குனி வசந்தோற்சவம் பக்தர்கள் இல்லாமல் உள்ளேயே நடந்தது. பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டமும் (மே-5) குறித்த தேதியில் நடைபெறுமா என்றும் தெரியவில்லை. மதுரை சித்திரைத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி திருக் கல்யாணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திருமருகலை அடுத்த திருப்புகலூர், வேளாக் குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான அக்னீஸ்வர சுவாமி கோயிலில் ‘சித்திரை சதயம் அப்பர் பெருமான் ஐக்கிய விழா’ பக்தர்கள் இன்றி (ஏப்ரல் 18) உள்ளுக்குள்ளேயே நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான திருச்செங் காட்டங்குடி உத்ராபதீஸ்வர சுவாமி கோயிலில் ‘சித்திரை பரணி நாளன்று சிறுத் தொண்ட நாயனார் அமுது படையல் விழாவுக்கு உத்திராபதியார் வீதியுலா வரும் வைபவமும் முடங்கிவிட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஶ்ரீராஜகோபாலசுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவின் 16-ம் நாள் வெண்ணெய்தாழித் திருவிழாவும், அன்றிரவு வெட்டுக்குதிரை தங்க வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வருவதும் கண்கொள்ளாக் காட்சியாகும். இதெல்லாம் கனவாகிப் போனது. அதேபோல், தருமையாதீனத்துக்குச் சொந்தமான ஒட்டங்காடு மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல கிராமதேவதைகளின் கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்கள் ரத்தாகிவிட்டன.

வைணவ திவ்யதேசங்களில் திருவரங்கம் ஆலயத்தில் ‘பங்குனி உத்திர சேர்த்தி விழா’ பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. இப்படித் தமிழகம் முழுதும் பல சைவ வைணவ ஆலயத் திரு விழாக்கள் ரத்தாகிவிட்டன” என்றார் நாரதர் வருத்தத்தோடு.

“திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. தெய்வ அருளால் விரைவில் இயல்பு நிலை திரும்பட்டும்'' என்று நாரதரைச் சமாதனப்படுத்தியதோடு, ``வேறு ஏதேனும் தகவல் உண்டா?'' என்றும் விசாரித்தோம்.

``பார்வதி பசுவாக சிவனை பூஜித்த பல தலங்களில், நாகை மாவட்டம் திருக்கோழம்பம் கோயில் முக்கியமானது. இந்தப் பகுதியில் வாரத்தில் இரண்டு நாள்கள்தான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம் என்பது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு. இந்தச் சூழலில் குறிப்பிட்ட கோயிலில் பூஜை செய்யும் சிவாசார்யர்கள் தவித்துப்போனார்கள். வாரத்தில் இரண்டு நாள்கள்தான் வீட்டைவிட்டு வெளியே வரலாம் எனும் நிலையில், ஆலயத்தின் தினப்படி வழிபாடுகள் தடைப்படுமே என்பதுதான் அவர்களின் தவிப்புக்குக் காரணம். இந்தப் பிரச்னையை நம் கவனத்துக்கும் கொண்டு வந்தார்கள்.

நாம் உடனே மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக மேலாளர் அரவிந்தனைத் தொடர்பு கொண்டு ‘இதற்குத் தீர்வுதான் என்ன?’ என்று கேட்டோம். உடனே அவர் திருநாகேஸ்வரம் செயல் அலுவலர் நித்தியா மூலம் ‘மேற்படி மூவரும் சுழற்சிமுறையில் அக்கோயிலுக்கு பூஜை செய்பவர்கள்’ என்று அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட சிவாசார்யர்கள் நமக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்” என்றார்.

நிறைவாக, நாரதர் புறப்படும் முன் வேறொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார். “ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திர தினம் (இந்த ஆண்டு ஏப்ரல் 18) பழைமையான திருக்கோயில்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தினமாகும்.

அன்று கும்பகோணம் `ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்' எனும் அமைப்பின் சார்பில் பழைமையான சிவாலயங்களில் உழவாரப் பணிகள் செய்து தீபமேற்றி வழிபடுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக இப்பணிகளைச் செய்து வந்தவர்கள், இந்த ஆண்டு உழவாரப்பணி செய்ய முடியவில்லை. எனவே வீட்டில் இருந்தபடியே தீபமேற்றி திருமுறைகளைப் பாடி, அந்நாளைக் கொண்டாடினார்களாம்” என்றபடியே விடைபெற்றுக் கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...

ராவணன் ஏன் அசுரன்?

புலஸ்திய மகரிஷி - ஆவிற்பூ இருவருக்கும் பிறந்தவர் விஸ்ரவஸ். இவருக்குத் தன் மகள் இளிபிளையை மணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. இவர்களுக்குப் பிறந்தவனே குபேரன்.

இதனிடையே, மகாவிஷ்ணு வால் இலங்கையில் இருந்து பாதாளத்துக்கு விரட்டப்பட்டனர் அசுரர்கள். இதனால் கலக்கமுற்ற அசுரர்களின் தலைவன் சுமாலி, 'இனி, நம் குலம் சிறப்பது எவ்விதம்?' என்று சிந்தித்தான். பின்னர், தன் மகள் கைகசியை அழைத்தான். அவளிடம், "விஸ்ரவஸ் என்பவர் மகா தபஸ்வி. அவரிடம் சென்று, உன்னை மணந்து கொள்ளும்படி வேண்டிக் கொள். அவர் உன்னை மணந்தால், நம் குலம் மீண்டும் தழைக்கும்!" என்றான் சுமாலி.

அதன்படி கைகசி, விஸ்ரவஸிடம் சென்று, "இப்போதே திருமணம் செய்து கொள்ளுங்கள்"என்றாள். அதற்கு விஸ்ரவஸ், "இது நல்ல நேரம் அல்ல. நாம் இப்போது சேர்ந்தால் அசுரனே பிறப்பான்"என்றார். கைகசியோ, "இப்போதே மணம் புரியுங்கள்"என்று வற்புறுத்தினாள்.

அதற்கு அவர், "நமக்கு நான்கு குழந்தைகள் பிறப்பர். மூவர் அசுர குணங்களைக் கொண்டிருப்பர். இதில் ஒரு பெண்ணும் உண்டு."என்று ஆசிர்வதித்தார். அதன்படி விஸ்ரவஸிக்கும் கைகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்ப கர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன்.

- பா .கிருஷ்ணன், சென்னை