மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: கொட்டகையில் குடியிருக்கும் ஈசன்... திருப்பணிகள் தொடங்குமா?

ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்

சிவபெருமான் ஆலகால விஷத்தைப் பருகிவிட்டு தாண்டவம் புரிந்தார். அப்போது பிரளயம் உண்டானது.

``சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியையெல்லாம் அறிவீர்கள். ஆனால், சிவனாருக்கான சிவப் பெயர்ச்சியைப் பற்றி அறிவீரா?''

நாரதரின் போன் அழைப்பை ஏற்றதுமே எதிர்முனையில் கேள்வியோடு ஆரம்பித்தார் அவர். பதிலுக்கு நாம் பேச முற்படுவதற்குள், நம் பகுதியில் கொரானோ தொற்று நிலவரம் குறித்தும் நம்முடைய பாதுகாப்பு மற்றும் உடல்நிலை குறித்தும் அக்கறையோடு விசாரித்துக்கொண்டார். நாமும் அதே அக்கறையுடன் பதில் சொல்லி, அவர் நலன் குறித்தும் விசாரித்து அறிந்தோம். தொடர்ந்து அவரது வினாவுக்கு விடையறிய முற்பட்டோம்.

``சிவப் பெயர்ச்சி என்று சொன்னீரே... புதிய தகவலாக இருக்கிறதே... என்ன விவரம்?''

"சிவபெருமான் ஆலகால விஷத்தைப் பருகிவிட்டு தாண்டவம் புரிந்தார். அப்போது பிரளயம் உண்டானது. பார்வதிதேவி மனமுருகி ஸ்வாமியை வேண்டினார். `கோபம் தணிந்து சகல உயிர்களையும் ரட்சித்தருள வேண்டும்' என்று பிரார்த்தித்துக்கொண்டார். அதை ஏற்று பகவானும் சினம் தணிந்து ருத்ர ரூபத்திலிருந்து சாத்விகமான சதாசிவ ரூபத்துக்கு மாறினார். அப்படி அவர் மாறிய தினத்தையே சிவப் பெயர்ச்சி தினம் என்று அனுஷ்டிக்கிறார்கள்.''

``அந்தத் திருநாள் என்றைக்கு நாரதரே?''

ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்
ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்

``ஆண்டுதோறும் தை மாதம் கடைசி திங்கட்கிழமையே அந்தத் திருநாள். கலி யுகத்தில் கடன், குடும்பத்தில் குழப்பம் எனப் பலவிதமான பிரச்னைகளால் அதீத மன அழுத்தத்துக்கும் ஆவேசத்துக்கும் ஆளாகிறார்கள் மனிதர்கள். அப்படியான ஆவேசத்தை, கோபத்தை, மன அழுத்தத்தை அழித்து எல்லோருக்கும் சாந்தம், அன்பு, கருணை, குணம் தரக்கூடிய திருநாள் இது என்கிறார்கள் பக்தர்கள். அன்று சிவ வழிபாடு செய்தால் சத்வ குணங்கள் மேலோங்கும், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை'' என்று விளக்கியவரிடம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

``இந்தத் திருநாளுக்கென்று பிரத்யேகமாக ஏதேனும் தலம் உண்டா ஸ்வாமி?''

"சிவப் பெயர்ச்சிக்கு விசேஷ தலமாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில், முட்டம் குளத்தங்கரை எனும் கிராமத்திலுள்ள ஶ்ரீமகா பலீஸ்வரர் சிவாலயத்தைச் சொல்கிறார்கள். மகாபலிச் சக்ரவர்த்தி தான் இழந்த செல்வம், புகழ் முதலான சகல செளபாக்கியங்களையும் மீண்டும் பெறும் வகையில் அவருக்குச் சிவனருள் கிடைத்த தலம் இது என்கிறார்கள்.''

``அடடே... அப்படியெனில், புராதனமான கோயிலாகத்தான் இருக்கும்...''

ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்
ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்

``சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதனமான கோயில்தான். தற்போது மிகவும் சிதிலமுற்று உருத்தெரியாமல் போய்விட்டது. மிகப்பெரிய சுயம்புலிங்கமாய் திகழும் ஶ்ரீமகாபலீஸ்வரரும் ஶ்ரீமங்களாம்பிகையும் சிறிய ஓலைக் குடிசையில் குடிகொண்டிருக் கிறார்கள்'' என்றார் நாரதர். அதைக்கேட்டு பதறிப்போனோம் நாம்.

``என்ன சொல்கிறீர்கள் ஸ்வாமி... அதுபற்றி ஏதும் விசாரித்தீர்களா?''

``விசாரிக்காமல் இருப்பேனா. அந்த ஈசனுக்குக் கடந்த 25 ஆண்டுகளாக விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறார் ராஜேந்திரன் என்ற அன்பர். அவரிடம் கோயில் குறித்து விசாரித்தேன்.''

``என்ன சொல்கிறார் அவர்?''

``அதுபற்றி அவர் சொன்னதை அப்படியே விவரிக்கிறேன் கேளும்... பல வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதிக்கு வந்த கல்வெட்டு ஆய்வாளர் ஒருவர் மூலமாகவே இந்த ஈசனின் மகிமை ராஜேந்திரனுக்குத் தெரியவந்ததாம். இந்த சிவனார் அப்போது புதர்களுக்கு மத்தியில் இருந்தாராம். பதறிப்போனாராம் கல்வெட்டு ஆய்வாளர். ராஜேந்திரனை துணைக்குச் சேர்த்துக்கொண்டு, புதர்களை நீக்கி அந்த இடத்தைச் சுத்தம் செய்து, அபிஷேகம் செய்து வழிபட்டாராம். அத்துடன் அந்த ஈசனின் தொன்மைச் சிறப்பை ராஜேந்திரனுக்கு எடுத்துச்சொல்லி, அனுதினமும் ஈசனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். என்றைக்காவது ஒரு நாள் இவரின் பெருமை வெளிச்சத்துக்கு வரும். எவரேனும் முன்வந்து கோயில் கட்டுவார்கள். பகவான் அருளால் எல்லாம் நன்மையாக நடக்கும் என்று வழிகாட்டினாராம்.

ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்
ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில்

அதன்படியே இப்போது வரை அனுதினமும் ஶ்ரீமகாபலீஸ்வரரை வழிபட்டு வருகிறார் ராஜேந்திரன். அத்துடன் ஊரிலுள்ள முக்கிய பிரமுகர்களின் உதவியோடு சிவனாருக்குச் சிறு கொட்டகையும் அமைத்திருக்கிறார். சுற்றிலும் வன்னி, ஆலம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வருகிறார். கடந்த தை மாதம் குறிப்பிட்ட சிவப் பெயர்ச்சி அன்று, இத்தலம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பரவ, நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் சென்றார்களாம். அப்படி வந்தவர்களில் கோவையைச் சேர்ந்த அன்பர்கள் இருவர், இந்த ஈஸ்வரனுக்கு தங்கள் சொந்த பொறுப்பில் திருப்பணி செய்கிறோம் என்று ஆர்வத்தோடு முன்வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஶ்ரீமகாபலீஸ்வரர் கோயில் இருக்கும் இடம் திருவாவடுதுறை ஆதினத்தின் கீழ் வருவது என்பதால், இந்தப் பக்தர்களின் வேண்டுகோளைக் குறிப்பிட்ட ஆதினத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நேர்ந்ததாம்...''

``அவர்கள் தரப்பில் என்ன சொன்னார் களாம்?''

``இந்த விஷயத்தை திருவாவடுதுறை ஆதினத்து மேலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்`ராஜேந்திரன். மேலாளர், குருக்கள் ஒருவரை இந்தக் கோயிலுக்குப் பூஜை செய்ய நியமித்துள்ளார். அந்தக் குருக்களும் கடந்த ஒரு வார காலமாக தினமும் காலையில் வந்து பூஜை செய்து விட்டு, கோயிலைப் பூட்டிச்சென்று விடுகிறாராம். இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட ராஜேந்திரன், `25 ஆண்டுக் காலமாக கோயிலைப் பாதுகாத்து வைத்த என்னிடம்கூட ஒரு சாவியைக் கொடுக்க மறுக்கிறார்கள். சாவி என்னிடம் இல்லாததால் மின்விளக்கைப் போட முடிய வில்லை. அல்லும்பகலும் நான் வணங்கிய ஈசன் இரவில் இருளில் கிடக்கிறார். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் ஈசனை ஆராதித்து வழிபாடு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். கோவை அன்பர்கள் திருப்பணி செய்ய முன்வந்தும் அதற்கான அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்' என்று வருந்தினார்'' என்று விவரித்தார் நாரதர்.

``நீங்கள், அந்தக் குருக்கள் அல்லது ஆதினத்தின் தரப்பில் ஏதும் விசாரித்தீர்களா?''

``கோயிலுக்குப் பூஜை செய்ய வரும் சிவாசார்யரிடம் பேசினேன். அவர், `எனக்கும் இந்த ஊர்தான் பூர்வீகம். காலப்போக்கில் எங்கள் குடும்பம் மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. தற்போது திருவாவடு துறை மடத்து நிர்வாகம் பணித்ததால், தினமும் இங்கு வந்து பூஜை செய்கிறேன். சுயம்பு லிங்கமான இந்த மூர்த்தியை வெள்ளையர் காலத்தில் இங்கிருந்து பெயர்த்து எடுத்துச் செல்ல முயன்றார்களாம். ஆனால், நாகங்கள் வந்து துரத்த பயந்துபோய் முயற்சியைக் கைவிட்டார்களாம். இதைச் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல், இங்குள்ள அம்பாள் விக்கிரகத்தை அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் கொண்டுபோய் வைத்து விட்டார்களாம். இப்போது சிவனருகில் அம்பாள் இருக்க வேண்டும் என்று மீண்டும் ஶ்ரீமங்களாம்பிகை எனும் அந்த அம்பாளை இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். இந்த அம்மையும் அப்பனையும் வழிபட்டால் இழந்த பதவி, செல்வாக்கு, பொருள் அனைத்தையும் அடையலாம்' என்று தனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்'' என்றார் நாரதர்.

``இனி, இதுதான் ஆலயத்தின் நிலையா... மேற்கொண்டு வளர்ச்சிக்கு வழியே இல்லையா?'' என்று நாம் ஆதங்கத்துடன் கேட்டோம்.

``உமக்கு வரும் ஆதங்கம் எனக்கு எழாமல் இருக்குமா. ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் திருவாவடுதுறை ஆதின நிர்வாகத்துக்குட்பட்ட மயிலாடுதுறை திருக்கோயில் மேலாளர் குருமூர்த்தியைத் தொடர்புகொண்டு பேசினேன்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட மேலாளர், ‘நீங்கள் சொல்வது உண்மைதான். காட்டுக்குள் கிடந்த ஈசனை நாட்டுக்கு வெளிப்படுத்திய ராஜேந்திரன் வசம் ஒரு சாவி உடனடியாக வழங்கப்படும் என்றதுடன் அதன் பொருட்டு அப்போதே சிப்பந்திகளிடம் உரிய உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், ‘கோவை அன்பர்களின் திருப்பணி ஆர்வத்தை வரவேற்கிறேன். அதேநேரம், திருவாவடுதுறை ஆதினகர்த்தருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் அவர் ஓய்வில் இருந்ததால், உடனடியாக அவரிடம் திருப்பணி குறித்து அனுமதி பெற்றுத் தர இயலவில்லை. தற்போது ஆதினகர்த்தர் மடத்துக்கு வந்துவிட்டார். ஆகவே, விரைவில் அவரிடம் பேசி உரிய அனுமதியைப் பெற்றுத் தருகிறேன் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்'' என்று கூறி முடித்தார் நாரதர்.

``மிக்க மகிழ்ச்சி நாரதரே. கோயிலின் திருப்பணிக்கு உங்களால் ஆன முன்னெடுப்பையும் செய்து விட்டீர்கள். விரைவில் திருப்பணிக்கு அனுமதி கிடைத்து, ஶ்ரீமகாபலீஸ்வரருக்கு பிரமாதமாக ஓர் ஆலயம் எழும்பட்டும்'' என்றோம் நாம்.

``அந்த ஈசனின் அருளால் நல்ல விஷயம் விரைவில் நடக்கும்!'' என்றபடியே, போனில் நம்மிடம் விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...

எது தியானம்?

ரு நாள், சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஆச்சார்ய கிருபளானி வந்தார். காந்திஜியிடம் அவர், ''பாபுஜி, தியானம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

உடனே, ''வாசலில் உட்கார்ந்திருக்கிறார் பார், வினோபா. அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்'' என்றார் காந்திஜி. வாசலுக்கு வந்த கிருபளானி, வினோபாவை பலமுறை அழைத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. பகவத் கீதை படிப்பதில் மும்முரமாக இருந்தார் வினோபாஜி. இதனால் கிருபளானி சலிப்படைந்து காந்திஜியிடம் சென்று, ''நான் அழைப்பதைக்கூடக் கவனிக்காமல், படித்துக்கொண்டே இருக்கிறார்!'' என்றார். காந்திஜி புன்சிரிப்புடன் ''தியானம் என்றால் என்னவென்று கேட்டாயே, அது இதுதான். மனத்தில் சிறிதுகூட சஞ்சலம் ஏற்படாமல், கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்தியிருக்கிறாரே, அதுதான் தியானம்!''

கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை-20