மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி!

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

நடப்புச் சூழலில் கோயில் வழிபாடுகள் குறித்து சாஸ்திரம் அறிந்த ஆன்றோர்கள் சொல்லும் கருத்து வேறுவிதமாக இருக்கிறது

முகக்கவசம் அணிந்தபடி, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கிருமிநாசினி திரவத்தால் கரங்களை நன்கு சுத்தம் செய்துகொண்டு வந்து, உரிய இடைவெளிவிட்டு அமர்ந்த நாரதரை வரவேற்றோம்.

இஞ்சி கலந்த எலுமிச்சைச் சாற்றைப் பருகக் கொடுத்தோம். ரசித்துப் பருகியவர் பேச ஆரம்பித்தார்.

“ஆலயத் திருக்கதவுகள் மூடியிருக்கும் நிலையில் பூஜைகள் நடைபெறுவது சரியா... என்பது போன்ற சர்ச்சைகள் ஆங்காங்கே பட்டிமன்றம்போல் நடந்து வருவதை அறிவீரா...” என்றார்.

“என்ன ஆயிற்று... அரசாங்கத்தின் உத்தரவின்படி, பெரிய ஆலயங்கள் முதல் கிராமத்துச் சிறு கோயில்கள் வரை அனைத்திலும் பக்தர்களின் வரவு தடை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் அந்தந்த கோயில்களின் வழக்கப்படி கால சந்தி பூஜைகள் குறைவில்லாது நடந்துகொண்டுதானே இருக்கின்றன...”

நாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி!

“அதுபற்றிதான் நானும் சொல்ல வருகிறேன்... நடப்புச் சூழலில் கோயில் வழிபாடுகள் குறித்து சாஸ்திரம் அறிந்த ஆன்றோர்கள் சொல்லும் கருத்து வேறுவிதமாக இருக்கிறது’’ என்ற நாரதர், தொடர்ந்து விவரித்தார்...

``அவர்கள் தரப்பில் பகிர்ந்ததை அப்படியே சொல்கிறேன் கேளும். `பெரிய கோயில்களோ, சிறு கோயில்களோ... அங்கு நிகழ்த்தப்படும் உற்சவங்கள், விசேஷங்கள், தினசரி பூஜைகள் போன்ற அனைத்துமே ஆகம விதிப்படிதான் நடத்தப்பட வேண்டும். அந்தந்தக் கோயிலில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகளை மாற்றாமல், அனைத்து பூஜை நிகழ்வுகளும் நடைபெறச் செய்ய வேண்டும். இந்த மரபு சார்ந்த விஷயங்களில் மாறுதல் செய்தால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

நாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி!

ஆலய பூஜை நடைமுறைகளில் நிகழும் தவறுகள் நாட்டையே பாதிக்கும் எனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ளார். திருமந்திரப் பனுவல் ஒன்றில்,

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே

என்கிறார் திருமூலர்.

ஆக, ஆலயங்களில் பூஜா காலங்களின்போது, திருக்கதவுகளை மூடிவைக்கக் கூடாது என்பதே விதி’ என்கிறார்கள் அவர்கள். வேறு சிலர், மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார்கள்’’ என்ற நாரதர், அது பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

`` `அபிஷேகக் காலங்களில் திரையிட்டு மறைக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை தரிசிப்பது கூடாது. உற்சவ மூர்த்திகள் புறப்பாட்டின் போது, மூலவர் திருமேனிகளை தரிசனம் செய்வது வழக்கம் இல்லை. இவைபோன்ற நடைமுறைகளை அனைவரும் அறிவர். அப்படித்தான்... கோயில் நடை மூடியிருக்கும் நிலையில், கோபுர தரிசனம் மட்டும் செய்வது வழக்கம். ஆக, ஆராதனை நடக்கும் காலங்களில் ஆலயத்தின் பிரதான திருக்கதவுகள் மூடப்பட்டு இருக்கக் கூடாது என்பது விதி.

நாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி!

ஆயினும், கண்ணுக்குத் தெரியாமல் எளிதில் பெருந்தொற்று நோய் பரவும் நிலையில், நோய்க்கு மருந்து இல்லாத சூழலில், மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதால், மேற்சொன்ன விதிமுறைகள் சற்று தளர்த்தப்படுவதில் தவறில்லை’ என்று மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார்கள் சிலர்” என்றார் நாரதர்.

“இந்தியாவின் மற்ற பாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திருக்கோயில்கள் விரைவில் திறக்கப்படும் என்று செய்திகள் வருகின்றனவே... அப்படி நடந்தால் சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா?’'

``நீர் சொல்வதுபோல் நடந்தால் மகிழ்ச்சியே. வெகுசீக்கிரம் நோய்த் தொற்று பாதிப்பு நீங்கட்டும்; கோயில்கள் திறந்து கொள்ளட்டும். அதன் பொருட்டும் நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்’’ என்ற நாரதர் அடுத்த தகவலுக்குத் தாவினார்.

“கொரோனா பாதிப்பு காரணமாகக் கோயில்கள் மூடப்பட்டன சரி. ஆனால், சுமார் 50 ஆண்டுக் காலமாக பிரசித்திபெற்ற ஒரு கோயிலின் ராஜகோபுர வாசல் கதவு அடைக்கப்பட்டுக் கிடப்பது உங்களுக்குத் தெரியுமா...”

``என்ன சொல்கிறீர்கள் சுவாமி. அது எந்தக் கோயில்?!’’

“தோணிபுரம் என்று புராணங்கள் போற்றும் தலமும், திருஞான சம்பந்தர் அவதரித்த ஊருமான சீர்காழியின் ஶ்ரீசட்டைநாதர் திருக்கோயில்தான் அது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தப் பிரமாண்ட கோயிலின் மேல வீதியில் அமைந்துள்ள ராஜ கோபுர வாசற்கதவுகள் கடந்த 50 ஆண்டுக் காலமாக அடைக்கப்பட்டுள்ளன.

`சாஸ்திர முறைப்படி லட்சுமி வாசம் செய்யும் மேல வீதிக் கதவுகளை அடைத்து வைப்பது ஆகம விதிப்படி தவறு. மேலும் 22 ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடத்தப்படாமல், சிதிலம் அடைந்து வருகிறது ஆலயம்’ என்று வருத்தப்படுகிறார்கள் உள்ளூர் பக்தர்களும் ஆன்மிக ஆர்வலர்களும். இதுபற்றிச் `சீர்காழி சைவநெறி தமிழ்ச்சங்கம்’ முதல் `திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை’ வரை பல தரப்பினரும், கோயில் நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் பலன் கிடைக்கவில்லையாம்!’’

“கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீர்களா?”

“கோயில் நிர்வாகி செந்திலிடம் பேசினோம். ‘குறுகலான பாதையைக் கொண்டது மேல வீதி. அருகில் பேருந்து நிலையம். எதிரில் புற்றடி மாரியம்மன் கோயில். அந்த வாயில் வழியாகக் கோயிலுக்குள் வரவேண்டுமானால், சுமார் ஐந்து ஏக்கர் நந்தவனத்தைக் கடந்துதான் வர வேண்டும். மாலை நேரங்களில் கதவுகள் திறந்திருக்கும்போது, சமூக விரோதிகள் உள்ளே புகுந்து நந்தவனத்தில் பதுங்கிக்கொண்டால், அவர்களைக் கண்டறிவது கடினம்.

இப்படியான பிரச்னைகளையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் குறிப்பிட்ட கோபுர வாசற்கதவை அந்தக் காலத்தில் இருந்தே சாத்தி வைத்திருக்கிறார்கள். கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையிலும், 22 வருடங்களுக்குப் பிறகு, கடந்த வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தோம். தற்போதைய ஊரடங்கு காரணமாக அதை ஆவணி மாதத்துக்குத் தள்ளிவைத்திருக்கிறோம். விரைவில் திருப்பணி ஆரம்பமாக இருக்கிறது.

அப்படியே... மேலக்கோபுர வாசல் வழியாக வருபவர்கள், நந்த வனத்துக்குள் செல்ல முடியாதபடி இருபுறமும் தடுப்புவேலி அமைப்பதுடன், அந்த வாசல் திறக்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்’ என்கிறார் அவர்!’’ - நாரதர் கூறிமுடித்தார்.

``நல்லது நடந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே’’ என்று நாம் கூற, நாரதரும் ஆமோதித்த அதேவேளையில் செல்போனில் அவருக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேசத் தொடங்கியவர், நம்மிடம் விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...