மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா?

வேதபுரீஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேதபுரீஸ்வரர் ஆலயம்

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயம் குறித்த விவரத்தைப் பகிர்கிறேன்.

`சில நாள்களாக நாரதரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே. என்னவாயிற்று அவருக்கு’ என்ற சிந்தனையில் நாம் லயித்திருந்த வேளையில், செல்போன் ஒலித்து சிந்தனையைக் களைத்தது. நாரதர்தான் அழைத்தார்.

``வணக்கம் சுவாமி. இப்போதுதான் உம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தோம். அதற்குள்...’’

நம்மைப் பேசவிடாமல் இடைமறித்த நாரதர், ``மன்னிக்கவும். சில கோயில் விஷயங்களை நேரில் சென்று விசாரிப்பதில் பல சிரமங்கள் நமக்கு. ஆகவேதான் பேசமுடியவில்லை’’

``புரிகிறது. இப்போது ஏதேனும் விஷயம் உண்டா?’’

நம் கேள்வியைப் புரிந்துகொண்ட நாரதர், ``விஷயம் இருக்கிறது. பண்டைய தமிழ் மன்னர்களின் அரசுகள் கோயிலுக்கு வாரி வழங்கிய சொத்துகள், தற்போது பலவகையிலும் அபகரிக்கப்பட்டு, கோயில்கள் பலவும் அழிவின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்’’ என்றார்.

வேதபுரீஸ்வரர் ஆலயம்
வேதபுரீஸ்வரர் ஆலயம்

``நிறைய கோயில்களின் நிலை அதுதான். நீர் இப்போது சொல்ல வரும் கோயில் எது. விவரமாகச் சொல்லும்.’’ எனக் கேட்டுக் கொண்டோம் நாம்.

``வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயம் குறித்த விவரத்தைப் பகிர்கிறேன். குறுக்கே பேசாமல் கேளும்...’’ என்றபடியே விவரிக்க ஆரம்பித்தார் நாரதர்.

``வெளிநாட்டு ஆதீனகர்த்தர் ஒருவர் நிர்வாகம் செய்யும் தமிழகக் கோயில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயம். வேதாரண்யம் விளக்கழகு எனப் போற்று கின்றன ஞானநூல்கள் பலவும். வேதங்கள் போற்றும் தலம் என்பது புராணங்கள் சொல்லும் தகவல். இத்தகு சிறப்புமிக்க இந்தத் திருத் தலத்துக்குச் சொந்தமான சுமார் 2,400 ஏக்கர் சொத்துகளை, மத்திய அரசிடமிருந்து மீட்கக் கடந்த 60 ஆண்டுகாலமாகப் போராடி வருகின்றார்களாம்.”

நாரதர் சொன்ன விவரம் நம்மை திகைக்கவைத்தது. எனினும் அவர் கேட்டுக்கொண்டபடி பேச்சில் குறுக்கிடாமல், அவர் கூறுவதை அமைதியாய்ச் செவிமடுத்தோம்.

“இதுபற்றி வேதபுரீஸ்வரர் ஆலயத்தை நிர்வாகம் செய்யும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி என்னிடம் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

`சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குச் சுமார் 2,400 ஏக்கர் நிலத்தைக் காணிக்கையாகத் தந்துள்ளனர். அதற்கான செப்பேடுகளும் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்குப் பரிகாரமாக ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு பகோடா வீதம் தொகை தருவதாக நிர்ணயித்துள்ளனர்.

வேதபுரீஸ்வரர் ஆலயம்
வேதபுரீஸ்வரர் ஆலயம்

அருகே அகஸ்தியம்பள்ளியில் உள்ள அந்த நிலங்களில் உப்பு உற்பத்தி செய்கிறார்கள். இந்த நிலங்கள் தற்போது மத்திய அரசின் உப்பு ஆணையத்தின் கீழ் உள்ளன. 1961 -ல் உச்சநீதிமன்றம் மேற்படி சொத்துகள் யாவும் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தம் என தெளிவாகத் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனாலும் 2,400 ஏக்கர் நிலத்திற்கு இன்றுவரை ‘பகோடா’ கணக்குப்படி ஆண்டுக்கு வெறும் ரூ 4,100-தான் தருகிறார்கள்.

இது நியாயமா... என்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். அவர்கள் சிவில் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளச் சொன்னார்கள். சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அவர்கள் மத்திய உப்பு ஆணையத்திடம் பேசித் தீர்த்துக்கொள்ளச் சொல்லி விட்டார்கள். இப்படியே அலைந்து கொண்டேயிருக்கிறோம். அதன் பின்புதான் `பகோடா கணக்கு’ என்றால் என்னவென்று தெரியாமல், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தேடினோம். விடை கிடைத்தது.

`பகோடா’ என்றால் ஒரு கிராம் தங்கம். அதாவது அந்தக் காலத்தில் ஒரு பகோடாவுக்கு 10 ரூபாய் வீதம் குத்தகை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆக, ஏக்கர் ஒன்றுக்கு-ஆண்டுக்கு 10 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.4,000. இன்றைய மதிப்புக்கு ஏற்ப தொகையை அதிகப்படுத்தித் தரவேண்டும் அல்லவா. உப்பு ஆணையம் அப்படி வழங்குவதில்லை. மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கீழ்தான் உப்பு ஆணையம் வருகிறது. ஆகவே, இந்தப் பிரச்னையை மத்திய நிதியமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளோம்.

நாம் விசாரித்து அறிந்ததில் உப்பு ஆணையத்தின் உள்குத்தகையில் சிறிய, பெரிய உப்பு உற்பத்தியாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்ட வர்கள் இந்த நிலங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களில் பலரும் முறையாகக் குத்தகை செலுத்துவதில்லையாம். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும் கோயில் நிலத்தை வைத்துக்கொண்டு, கோயிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கக்கூட உதவாத வகையில் அற்பத் தொகையைத் தருவது, எப்படி நியாயமாகும்.

அதுமட்டுமல்ல... மத்தியப் பாதுகாப்புத் துறை சார்பில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான, கோடியக்கரையில் உள்ள ஓர் இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைப்பதற்காக பல ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டார்களாம். அதற்கு, 32 கோடி ரூபாய் கோயிலுக்கு வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால், இன்று வரை போராடியும் அந்தத் தொகையும் வந்துசேரவில்லை.

நாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா?

இத்தனைக்கும் யாம் தங்கியுள்ள குடிசை வீட்டின் கூரை கஜா புயலில் சேதமாகிவிட்டது. தற்போது பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு செய்யப்பட்ட கூரை போட்டு, அதன்கீழ் வசிக்கிறோம். எனது சுகத்துக்காகப் போராடவில்லை. கோயில் நலத்துக்காகவே பாடுபடுகிறேன். அந்த இறைவன்தான் நல்ல தீர்வு தரவேண்டும்’ என்று அவர் விவரித்தபோது, நமக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை” என்றார் நாரதர்.

“அநியாயமாக இருக்கிறதே... இது பற்றி உப்பு ஆணையம் தரப்பில் விசாரித்தீரா?’’

“விசாரிக்காமல் இருப்பேனா... அகஸ்தியம்பள்ளி உப்பு ஆணைய அலுவலகம் தரப்பில் `கோயிலுக்குரிய பணத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது சம்பந்தமாகச் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் விவரமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்கிறார்கள்.’’

``தலைமை அலுவலகத் தரப்பிலிருந்து என்ன பதில் கிடைத்தது?’’

``சென்னையில் உள்ள உப்பு ஆணைய கமிஷனர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, `வெளியிலுள்ள நிலவரத்தை மட்டும் பார்க்கக்கூடாது. உள்ளே நடப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கு முடிந்து அலுவலகம் முழுமையாகச் செயல்படும்போது, இது பற்றி விரிவாகப் பேசுவோம்’ என்கிறார்கள்’’ என்றார் நாரதர்.

தொடர்ந்து, ``மத்திய மண்டலத்தில் சில கோயில்கள் குறித்த பிரச்னைகளை நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். விசாரித்து வந்து பகிர்கிறேன்’’ என்றுகூறிவிட்டு போனில் விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...