மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா ( நாரதர் உலா )

அடியார்கள் கோரிக்கை நிறைவேறுமா?

`சிவமயமே எங்கும் சிவமயமே, இனி பவ பயம் இல்லை எங்கும் சிவமயமே...' என்ற பாடியபடி நுழைந்தார் திரிலோக சஞ்சாரி.

``இறை அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர் தாங்கள். பின்னரும் பவ பயம் குறித்துப் பாடுவது ஏனோ சுவாமி''

நம் கேள்விக்கு சிறு புன்னகை யைப் பதிலாகத் தந்த நாரதர், அவருக்காக தயாராக வைத்திருந்த இளநீரை உரிமையோடு எடுத்துப் பருகினார். பின்னர் தம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, தகவல்களைப் பகிரத் தொடங் கினார்.

``தஞ்சை மண்டலத்தி ஓர் உலா போய்விட்டு வந்தோம்...''

``விஜயத்தில் எந்தெந்த தலங்கள் எல்லாம் இடம்பெற்றன சுவாமி?''

``பல தலங்கள் உண்டு. தரிசனம் சிலிர்ப்பைத் தந்தாலும் சில ஆலயங்களின் நிலைமை ஆதங்கத்தையே தந்தது. சிதிலமுற்றுக் கிடக்கும் கோயில்களைக் கண்டு மனம் வெதும்பிப் போனோம்.''

உழவாரம்
உழவாரம்

``விளக்கமாகச் சொல்லுங்கள் சுவாமி.''

``சொல்கிறேன்... சொல்கிறேன்... சிதிலமுற்றுக் கிடக்கும் கோயில்களைக் காணும்போது இன்னும்பல அப்பர் பெருமான்கள் இருந்தாலும் போதாது என்றே தோன்றியது. சைவத்தின் ஆதார தர்மமே உழவாரம்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் திருநாவுக்கரசர். `உழவாரமே சைவத்தின் மணியாரம்' என்று அடியார்களுக்கு எடுத்துச் சொன்னவர்.

அந்தப் பெருமானைப் போற்றும் விதமாக ஒரு கோரிக்கையும், அது கண்டுகொள்ளப்படாததால், கடந்த 10 ஆண்டுகளாக சைவ அடியார்களிடம் பெரும் மனத் தாங்கலும் இருந்து வருகிறது தெரியுமா?''

``திரிலோக சஞ்சாரி நீங்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும். விவரமாகச் சொன்னால் நாமும் தெரிந்துகொள்வோம்!''

``தம் வாழ்வையே உழவாரம் எனும் பெரும் தவத்துக்குத் தத்துக் கொடுத்தவர் தாண்டக வேந்தர் திருநாவுக்கரசர். பல்வேறு ஆலயங்களில் திருப்பணி செய்து புனரமைத்த இவரது சேவை இன்றும் பல அடியார்களால் தொடர்ந்து செய்யப்படுகிறது.

அதனால்தான் தமிழகத்தில் பல ஆலயங் கள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் உள்ளன. எவரிடமும் எதையும் எதிர்பாராமல் சொந்த செலவிலும், உழைப்பிலும் ஆலயங்களை, திருக்குளங்களை, நந்தவனங்களை அடியார்கள் ஒன்றிணைந்து புனரமைத்து வருகிறார்கள்.

அரசுக்குச் சொந்தமான பல ஆலயங்களில் இவர்களுக்குப் போதிய ஒத்துழைப்பு கொடுக் காமல் அலட்சியப்படுத்தும் நிலையும் உண்டு. ஆனாலும் இந்த அடியவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாது செயலாற்றி வருகிறார்கள்.

பெருந்தொற்றுப் பேரிடர் காலம் முடிந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள பல ஆலயங்களிலும் இவர்களின் புனரமைப்புப் பணி தொடர்கிறது.

தமிழகம் முழுக்கவும் இப்படியான அடி யார்கள், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தோர் பல லட்சம்பேர் உண்டு. அவர்களின் ஒருமித்த ஒரு கோரிக்கையை அரசிடம் விண்ணப்பித்து, சுமார் 10 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள்.''

``என்ன கோரிக்கையோ?''

``சித்திரை சதய நட்சத்திர நாள், அப்பர் பெருமானை அடியார்கள் போற்றிக் கொண்டா டும் தினம். இந்தத் திருநாளை திருநாவுக்கரசர் திருநாளாக - பழைமை மிக்க ஆலயங்களின் பாதுகாப்பு - தூய்மை - பராமரிப்புத் தினமாக அரசு அறிவிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இதை அரசின் கவனத் துக்குக் கொண்டு சென்று, எப்படியேனும் நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்ட அமைப்பு. வருடம் தோறும் இந்த கோரிக்கைக் குறித்து அறநிலையத் துறையிடம் விண்ணப்பம் வைத்து வருகிறது.

சித்திரை சதயம்
சித்திரை சதயம்

ஆனால் அறநிலையத் துறையோ, `இந்தக் கோரிக்கையை தமிழக அரசிடம்தான் வைக்க வேண்டும்’ என்று தட்டிக்கழித்து வருகிறதாம். இதுகுறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும், அறப் போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பலனும் இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் அடியார்கள். `தலைவர்கள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடும்போது, சித்திரை சதய நாளை ஏன் உழவாரத் திருநாளாகக் கொண்டாடக் கூடாது’ என்பது அடியார்களின் கேள்வியாக உள்ளது’’ என்ற நாரதர், குவளையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு, மீண்டும் தொடர்ந்தார்.

``இதுகுறித்து ஜோதிமலை இறைப் பணிக் கூட்டத்தின் நிறுவனர் தவயோகி திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசினோம்.

`உலகிலேயே முதன்முறையாக அற வழியில் உண்ணா நோன்பிருந்து பழையாறை வடதளி தர்மேஸ்வரர் கோயிலை மீட்டெடுத்தவர் அப்பர். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வாழ்ந்த அப்பரை நினைவுகூர்வது அவசியம் அல்லவா? சித்திரை சதயத்தைச் சிறப்புத் தினமாகக் கொண்டாடும்போது, அதன் மூலம் மக்களிடம் பெரிய விழிப்பு உணர்வை உண்டாக்க முடியும். ஆலயங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது, சிதிலமான ஆலயங்களை எப்படி மீட்டெழுப்புவது, ஆலயப் பாதுகாப்பு, விழாக்களை நடத்துவது, சிலைகள் பராமரிப்பு, அடியார்களின் இலக்கணம் என்ன என்பவை குறித்தெல்லாம் அந்த நாளில் விளக்கிக் கூற முடியும். அதன் மூலம் நம் பாரம்பர்யத்தை, பெருமைகளை பரவும்படி செய்யலாம். எனவே, சித்திரை சதயத்தை திருநாவுக்கரசர் தினமாக அரசு அவசியம் அறிவிக்க வேண்டும்’ என்றார்.

``அரசுத் தரப்பில் என்ன சொல் கிறார்கள்?’’

``அரசுத் தரப்பில் `அரசு விழா என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். அடியார்களின் இந்தக் கோரிக்கை நல்ல விஷயம்தான். என்றாலும் இது அமைச்சரவையின் முடிவுக்கு உட்பட்டது. தகுந்தவர்களின் பரிந்துரைகளை ஏற்று அரசு நல்ல முடிவு எடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதுதொடர்பாக அறநிலைய துறையும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், பரிந்துரைகளை வழங்க இயலும்’ என்கிறார்கள்.

இன்னும் சில வாரங்களில் சித்திரை சதயம் நாள் வரவுள்ளது. இம்முறை யேனும் நம் கோரிக்கை நிறைவேறும் என்று அடியார்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். நல்லது விரைவில் நடக்க இறைவன் அருள்புரியட்டும்’’ என்ற நாரதர், நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்.