மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா : ஆக்கிரமிப்பில் வசிஷ்டர் திருக்குளம்!

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா ( நாரதர் உலா )

நல்ல விஷயம்தான். பக்தர்களும் பெருந் தொற்று பாதிப்பை மனத்தில் வைத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

“மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றபடியே விஜயம் செய்தார் நாரதர்.

“மழைதான் குறைந்துவிட்டதே சுவாமி” என்றபடியே, தயாராக இருந்த பானகத்தைப் பருகக் கொடுத்தோம்.

“ஆலய விஷயத்தில் தளர்வுகள் அறிவித்தும் இன்னும் விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றனவே. அதுபற்றியே சொல்ல வந்தேன்...'' என்று பதில் சொல்லிவிட்டு, பானகத்தைப் பருகி முடித்தவர், தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

“உரிய சமூக இடைவெளியுடன் பரிகார பூஜைகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்ற பக்தர்களின் ஆதங்கத்தை நாம் பதிவுசெய்திருந்தோம். அதிகளவிலான பக்தர்களின் இந்த ஆதங்கம் அரசின் கவனத் துக்குச் சென்றது போலும்.

தற்போது பரிகார-பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கோயில்களில் பக்தர்களுக்கான பரிகார பூஜைகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவாம்.''

நாரதர் உலா
நாரதர் உலா

``நல்ல விஷயம்தான். பக்தர்களும் பெருந் தொற்று பாதிப்பை மனத்தில் வைத்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.''

நாம் கூறியதை அமோதித்தபடி நாரதர் தொடர்ந்தார்: ``கோயில் விசேஷங்களுக்கு அனுமதி தரப்பட்டாலும், மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடர் கின்றன. தை மாதத்தில் களைகட்டும் விழாக் களான திருவிடைமருதூர் தைப் பூசம், பழநி தைப்பூச விழா, திருக்கடவூர் கோயிலில் அபிராமி அன்னை அபிராமிப் பட்டருக்குத் திருக்காட்சி தரும் தை அமாவாசை வைபவம், திருவாவடுதுறை பிரம்மோற்சவம், ரத சப்தமி பத்து நாள் விழா போன்றவை இந்த ஆண்டு எளிமையாகவே நடைபெறுமாம்.

`புது வகைக் கொரானா பாதிப்பு அச்சத்தைக் கவனத்தில் கொண்டு, ஆலயங்களில் அதிகளவு பக்தர்களை அனுமதிக்க வேண்டாம்' என்று அறிவித்துள்ளார்களாம். இதனால் பல திருவிழாக்கள் பெரியளவில் நடைபெறாது.

எளிய அளவில் நடைபெறும் விழாக்க ளிலும், பக்தர்கள் தங்களின் ஒத்துழைப்பை அளித்து பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.”

``நீங்கள் சொல்வது சரியே. ஆமாம் சுவாமி... நெல்லை தீரத்துக்குச் செல்வதாகச் சொன் னீர்களே...''

நாம் கேள்வியை முடிப்பதற்குள் இடைமறித் துப் பேசத் தொடங்கினார் நாரதர்.

“விரைவில் செல்லவுள்ளேன். முன்னதாகக் கும்பகோணம் அருகிலுள்ள பாபநாசத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.''

``அங்கே என்ன விவகாரம் சுவாமி?''

``பொறும். விளக்கமாகவே சொல்கிறேன். பாபநாசம் திருப்பாலைத்துறைக் கோயில், திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற திருத்தலம். தவளவெண்ணகையாள் அம்பிகையுடன் பாலைவனநாதர் வீற்றிருக்கும் இந்தத் தலம், பெரும் சிதிலமுற்றுக் கிடந்தது.

நாரதர் உலா
நாரதர் உலா

சிவனடியார்கள், பக்தர்களின் கோரிக்கை களை ஏற்று, அரசு தற்போது திருப்பணிகள் செய்து கோயிலைப் புனரமைத்துள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி கோயிலின் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இது நல்ல செய்திதான். ஆனால் கோயிலின் புனிதக் குளத்தின் நிலைமை கவலை அளிப்பதாக இருக்கிறது.

கோயிலின் புனிதத் தீர்த்தமான வசிஷ்டர் திருக்குளம் கோயிலுக்கு வெளியே பரந்து விரிந்து அமைந்திருந்தது. இப்போது பாசிகள் படர்ந்தும், தூர் வாரப்படாமலும், படிகள் உடைந்தும், குடியிருப்புகளின் கழிவு நீர் குளத்துக்குள் சேரும் நிலையிலும் மோசமாக உள்ளது.

பலரின் ஆக்கிரமிப்புகளால் குளத்தின் அளவும் சுருங்கி விட்டது. குளமே ஒரு குட்டை போன்று அசுத்தமாகிச் சிதிலம் அடைந்து கிடக்கிறது. இதுகுறித்து பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், சென்ற ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி இந்தக் குளத்தைச் சீரமைக்க ஆணையர் பொதுநல நிதி வழியே 1.95 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டும், நிர்வாக அனுமதி வழங்கியும் உத்தரவிடப்பட்டதாம். ஆனால் இன்றுவரை திருக்குளப் பணி எதுவும் தொடங்கப்படவே இல்லையாம்.

நாரதர் உலா
நாரதர் உலா

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் எல்லாம் தொடங்கிவிட்டபிறகும் குளம் சீரமைக்கப் படாமல், உள்ளே கழிவுநீர் தேங்கிக் கிடப்பது சரியா என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்.

திருப்பாலைத்துறை திருக்குளம் மட்டுமல்ல, பாபநாசம் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளமும் மிக மிக மோசமான நிலையிலேயே உள்ளதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தெப்பத் திருவிழா கண்ட இந்தப் பெருமாள் கோயில் குளம், தற்போது இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பில் உள்ளது என்கிறார்கள்.''

``வசிஷ்டர் குளம் குறித்து ஆலய நிர்வாகத் தரப்பினரிடம் பேசினீர்களா?''

“பேசினோம். ‘70 சென்ட் பரப்பளவிலிருந்த வசிஷ்டர் குளம், தற்போது 20 சென்ட் அளவே உள்ளது. குளத் தில் இறங்கி பணி செய்யக்கூட முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் தடைகள் உள்ளன. இப்போது, இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தால் கும்பாபிஷேகப் பணிகள் தடைப்பட வாய்ப்புள்ளது. கும்பாபிஷேகம் முடிந்ததும் நிச்சயம் திருக்குளப் பிரச்னைகளைச் சட்டப்படி எதிர்கொண்டு, திருப்பணிகளைச் செய்து முடிப்போம்’ என்கிறார்கள் ஆலய நிர்வாகத் தரப்பில்.''

``விரைவில் நல்லது நடக்கட்டும்!''

``நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம். இறைவன் அருள்செய்வார்...'' என்ற நாரதர் நம்மிடம் விடை பெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

நான்கு கோலத்தில் மலைக்கோட்டை தரிசனம்!

மலைக்கோட்டை
மலைக்கோட்டை

திருச்சி என்றதுமே நினைவுக்கு வருவது, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில்தான்!

ஸ்ரீராமர், விபீஷணரிடம் கொடுத்த ஸ்ரீரங்கநாத மூர்த்த மானது, திருச்சியிலேயே கோயில் கொண்டதற்குக் காரணமானவர், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்தான்!

திருச்சி மலைக்கோட்டையின் வித்தியாசமான தோற்றம் கொள்ளை அழகு! வடக்கில் இருந்து பார்த்தால், ஸ்ரீதாயுமானவரை நந்திதேவர் வணங்குவது போலவும், தெற்கில் இருந்து பார்த்தால் யானையும் அம்பாரியுமாகவும் காட்சி தரும்.

அதேபோல், மேற்கில் இருந்து பார்த்தால்... நங்கூரம் பாய்ச்சி நிற்கிற கப்பல் போலத் தோன்றுமாம்!

மலையுச்சியில் இருந்தபடி படிக்கட்டுகளைப் பார்த்தால், அவை விநாயகப் பெருமானின் துதிக்கையைப் போலவே தெரியும் என்பர்.

- எஸ்.ரங்கராஜன், புதுக்கோட்டை