திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

நாரதர் உலா: `கோயில்கள் மீண்டெழுமா?'

துக்காச்சி சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
துக்காச்சி சிவாலயம்

துக்காச்சி சிவாலயம்

``ஆடும் திருவடி கோலம் அறிந்திட அரனே தாழ் திறவாய்; அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட சிவனே தாழ் திறவாய்...” என்று உணர்ச்சி பொங்கப் பாடியபடியே உள்ளே நுழைந்தார் திரிலோக சஞ்சாரி.

வந்தவரை வரவேற்று குளிர்ச்சியான நீர் மோரைக் கொடுத்தோம். பருகி முடித்து தம்மைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாரதரிடம் கேட்டோம்: ‘`சுவாமி! ஏதோ சூடான விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறீர்கள் என்று தங்களின் பாடலைக் கேட்டதுமே புரிந்து கொண்டோம். என்ன விஷயமோ...''

துக்காச்சி சிவாலயம்
துக்காச்சி சிவாலயம்

“இந்து சமய அறநிலையத் துறையில் எங்கு பார்த்தாலும் ஊழல், மெத்தனம், அதிகார துஷ்பிரயோகம், ஆக்கிரமிப்பு என்று மலிந்து கிடக்கும் இந்தச் சூழலில்தான் கோயில்களை அரசிடம் இருந்து மீட்டு ஆன்மிக அன்பர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மாமன்னர்களும் கொடையாளிகளும் உருவாக்கிக் கொடுத்த மாபெரும் கலைப் பொக்கிஷங்கள் நம் கோயில்கள். உலகில் வேறெங்குமே காண முடியாத கருங்கல் காவியங்கள் அவை. மீண்டும் எளிதில் உருவாக்க முடியாத பல அற்புத ஆலயங்கள் பாழ்பட்டும் சிதைந்தும் கிடக்கும் நிலையில், அதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்து வருகிறது அறநிலையத் துறை என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள் தரப்பில்.

``குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதை அரசு தரப்பில் சுட்டிக்காட்டுகிறார்களாமே... தவிரவும், எண்ணிக்கையில் அதிகமான ஆலயங்களை ஏக காலத்தில் புனரமைப்பது சாத்தியம் இல்லை. நிதிப் பற்றாக்குறையையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன்வைப்பதாக நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்...''

``கோயில்களைப் புனரமைக்க அரசிடம் நிதி இல்லை என்ற வழக்கமான பல்லவி எல்லாம் பொய் என்பது பக்தர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது. `அன்பர்கள் பலர், பல ஆலயங்களைப் புனரமைக்க முன் வந்தும் அதற்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பது சகஜமாகி வருகிறது. பொதுமக்களே கோயில் திருப்பணியை மேற்கொண்டால், தாங்கள் ஊழல் செய்ய முடியாதே என்றுதான் இப்படியான இழுத்தடிப்பு வேலைகள் நடைபெறுகின்றன' என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்'' என்ற நாரதர் தொடர்ந்தார்.

நாரதர் உலா: `கோயில்கள் மீண்டெழுமா?'

`‘தஞ்சை மாவட்டம், தென் குரங்காடுதுறை ஶ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயில் பிரசித்திபெற்ற தேவாரத் திருத்தலம். சுக்ரீவன் வழிபட்டதால் இது குரங்காடுதுறை என்றானது. செம்பியன் மாதேவி கட்டிய பிரமாண்ட கற்றளி ஆலயம் இது. பைரவரும், அனுமனும், அகத்தியரும் வழிபட்ட பரிகார ஆலயம். அகத்தியருக்காக நடராஜப்பெருமான் இங்கு ஆடியருளியதால் நடராஜபுரம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. அப்பரும் சம்பந்தரும் உருகி உருகிப் பாடிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயம், இடிந்து விழும் நிலையில் மிகவும் சிதிலமுற்றுக் கிடக்கிறதாம்!''

``என்ன சுவாமி சொல்கிறீர்கள்?!''

``உண்மைதான்! உயிர் பயம் இல்லாத வைராக்கிய பக்தர்கள் மட்டுமே இங்கு தரிசனம் செய்ய வந்துபோகிறார்கள். அந்த அளவுக்கு இடிபாடுகளுடன் திகழ்கிற தாம் கட்டடங்கள். அரசுக்கு எத்தனையோ முறை வேண்டுகோள் வைத்தும், இந்த ஆலயத் திருப்பணிக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.''

``ஆலய நிர்வாகத் தரப்பில் விசாரித்தீர்களா?''

``விசாரித்தோம். பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இந்த ஆலயம் உள்ளது. ‘மேலிடத்துக்குச் சொல்ல வேண்டிய எல்லா விதத் திலும் சொல்லிவிட்டோம். அங்கிருந்து அனுமதி வந்தால் மட்டுமே அடுத்த காரியங்களை நகர்த்த முடியும். ஆண்டவன் அருளால் விரைவில் கோயில் மீண்டெழும்' என்று முடித்துக் கொண்டார்கள். திருப்பணி செய்ய பலரும் முன்வரும் நிலையில், அரசு மெத்தனமாக இருப்பது ஏனோ தெரியவில்லை. பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் நடவடிக்கை எடுத்தால் நல்லது என்கிறார்கள் மக்கள்.''

``இதேபோல், நீடாமங்கலம் அருகிலும் ஒரு கோயில் சிதிலமுற்று கிடக்கிறதாமே...''

நாரதர் உலா: `கோயில்கள் மீண்டெழுமா?'

``தமிழகம் முழுக்கவுமே எண்ணற்ற கோயில்களின் நிலை இதுதான். நீங்கள் குறிப்பிடுவது, கும்பகோணம் - மன்னார்குடி சாலையில், நீடாமங்கலம் அருகிலுள்ள அரையூர் சிவாலயம். நீடாமங்கலத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் உள்ளது. நாகராஜன் கார்கோடகன் வழிபட்டதால் அரவூர் என்று பெயர். அதுவே அரையூர் ஆகிவிட்டதாம்.

இங்குள்ள அற்புதமான சிவாலயத்தில் பல ஆண்டு காலமாகக் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை; ஆலயமும் மிகவும் சிதிலம் அடைந்து கிடக்கிறது என்கிறார்கள்.சோழர்களும் மராட்டிய மன்னர்களும் கொண்டாடிய ஆலயம் இது. தனிநபர் ஒருவரின் தலையீட்டால், திருப்பணி செய்ய விரும்பும் அன்பர்களையும் அனுமதிப்பது இல்லையாம். இங்கு மட்டுமல்ல கும்பகோணம், தஞ்சாவூரைச் சுற்றிலுமுள்ள பல ஆலயங்களின் நிலை இதுதான்.

இது இப்படியென்றால், சில கோயில்களில் திருப்பணிகள் தொடங்கியும், அவை முழுமை பெறாமல் கும்பாபிஷேகம் தடைப்பட்டு நிற்கிறது!''

``எந்தெந்த ஊர்களில் சுவாமி?''

``தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத் தில் அமைந்த மானம்பாடி, துக்காச்சி ஆகிய தலங்களில், திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் முழுமை அடையவில்லை. கேட்டால் நீதிமன்ற வழக்கு... தொல்லியல் துறை தலையீடு... என்று நிறைய காரணம் சொல்கிறார்கள்.

துக்காச்சி கோயிலுக்கு ஐஐடி உதவியால் ஒரு கோடி ருபாய் செலவில் திருப்பணி செய்ய ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. அது வந்ததும் திருப்பணிகள் செய்வோம் என்கிறார்கள். ஆனால், ஏற்கனவே 55 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் தொடங்கின. ஆனால் தொல்லியல் துறை தலையீடு, வழக்கு என்று தற்போது ஆலயப்பணி தடைப்பட்டு நிற்கிறது.''

``இதே நிலை நீடித்தால், நம் மண்ணின் மகிமைக்கு சாட்சியாகத் திகழும் தொன்மை வாய்ந்த பல கோயில்களை இழந்துவிடுவோம்...''

``அப்படியான நிலை வராமல் இருக்க இறைவன் அருள்புரிவார்'' என்று பதில் சொன்ன நாரதர், நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...

சத்தியமே உயர்ந்தது!

`நித்தியமானது எதுவோ, சத்தியமானது எதுவோ அதுவே உயர்வானது' என்கிறது ஆன்மிகம்.

மகான் ஶ்ரீகனகதாசர் அருளிய ‘ராமதான்ய சரித்ரே’ எனும் குறுங்காவியத்தின் கதை ஒன்று மேற்காணும் தத்துவத்தை எளிமையாக விளக்குகிறது.

ஒருமுறை, ஶ்ரீராமனிடம் விநோதமான வழக்கு ஒன்று வந்தது.

அரிசி, கேழ்வரகு இரண்டுக்கும் இடையில் `தங்களில் உயர்ந்தவர் யார்' என்ற போட்டியும் சண்டையும் எழுந்தன.

வழக்கு ஶ்ரீராமனிடம் வந்தது. இருவருக்கும் உண்மையை உணர்த்த விரும்பிய ஶ்ரீராமன், அரிசியையும் கேழ்வரகையும் ஆறு மாத காலம் சிறையில் அடைத்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு பார்த்தால், அரிசி உளுத்துப் போனது. கேழ்வரகோ தரம் மாறாமல் அப்படியே இருந்தது. `காலங்களைக் கடக்கும் திறனும், கஷ்டங்களைப் பொறுக்கும் சக்தியும் படைத்த கேழ்வரகே உயர்ந்தது' என்று ஶ்ரீராமன் தீர்ப்பு வழங்கினாராம்.

சத்யமானது எதுவோ அதுவே காலத்துக்கு நிலைத்திருக்கும்; உயர்ந்திருக்கும்!

- எம்.தர்ஷினி, திருப்பூர்