மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: பரிகார பூஜைகள் எப்போது தொடங்கும்!

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிவாலயங் களில் ஒன்றாக பாபநாசம் அருள்மிகு பாபநாசநாதர் கோயில் உள்ளது.

`வேலியே பயிரை மேய்வதா என்ற வேதனையில் உயிர்கள் வீழ்வதா...' எங்கோ பாடல் ஒலிப்பது கேட்க, நாரதர் வேக வேகமாக வந்துசேர்ந்தார். ``சூழலுக்குப் பொருத்தமான பாடல்தான்'' என்றபடியே இருக்கையில் அமர்ந்தவருக்கு, திருக்கோயில் பிரசாத மாய் வந்திருந்த சர்க்கரைப் பொங்கலைக் கொடுத்தோம். கூடவே பானகமும் ஒரு குவளையில் வந்து சேர்ந்தது.

சர்க்கரைப் பொங்கலை உண்டதுடன் பானகத்தையும் பருகியவர், `நாராயணா' என்றபடியே பார்வையால் நமக்கு நன்றி சொன்னார்.

``சூழலுக்குப் பொருத்தமான பாடல் என்றீரே... என்ன சூழல், எங்கே பிரச்னை...''

நாரதரை அலுவலுக்குள் இழுத்தோம்.

“நெல்லைச் சீமையில் ஒரு கோயிலில் நகைகள் மாயமான தகவல் குறித்து நண்பர் பகிர்ந்துகொண்டார். அதை விசாரித்து வருகிறேன் என்று கிளம்பினேன் அல்லாவா, இதோ தகவல்கள்...” என்று தொடங்கினார்.

நாரதர் உலா: பரிகார பூஜைகள் எப்போது தொடங்கும்!

``தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிவாலயங் களில் ஒன்றாக பாபநாசம் அருள்மிகு பாபநாசநாதர் கோயில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்தக் கோயில், சாளுக்கிய மன்னர்களால் கட்டப் பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்பது வரலாறு.

கயிலாய மலையில் நடந்த சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணத்தைக் காண முடியாத அகத்தியருக்கு, பொதிகை மலைப்பகுதியில் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சியளித்ததாக இக்கோயிலின் தலபுராணம் தெரிவிக்கிறது.

பிரசித்திபெற்ற பாபநாசநாதர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தக் கோயிலில் வழிபட்டவர்கள், தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்ததும் கோயிலுக்குப் பொன்னையும் பொருளையும் காணிக்கையாகக் கொடுப் பார்கள்.

அதன்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தக் கோயிலுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன. ஆனால், அந்த நகைகள் திடீரென மாயமாகிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கோயில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும், எப்படியோ தகவல் பக்தர்களுக்குத் தெரியவந்ததால் பரபரப்பு நிலவியது.

சம்பவம் சர்ச்சையானதால், அறநிலையத் துறை அதிகாரிகள் வேறு வழியின்றி காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அதனால் விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நாரதர் உலா: பரிகார பூஜைகள் எப்போது தொடங்கும்!

கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தத் தொடங்கினார்கள். அதனால் அச்சம் அடைந்த பணியாளர் ஒருவர் விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், பிரச்னையின் நிலை தீவிரமானது.

போலீஸார் தொடர் விசாரணையில் கோயிலின் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றிய இருவர் இணைந்து கோயிலின் உண்டியலில் போடப்பட்ட நகைகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 200 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இந்த விஷயத்தில் இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றாலும், இதற்கு முன்பு இதுபோல இன்னும் எவ்வளவு நகைகள் கொள்ளைபோயினவோ என்கிற சந்தேகம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

`எவ்விதத் தலையீடுகளும் இன்றி விசாரணைகள் நடைபெற்றால், பல உண்மைகள் வெளிவரலாம்' என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள். எல்லாம் அந்த பாபநாச நாதருக்கே வெளிச்சம்...” என்று முடித்த நாரதர், அடுத்தத் தகவலுக்குத் தாவினார்.

``அரசியல் கூட்டங்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, இன்னும் கோயில் பரிகார பூஜைகளுக்கு அனுமதி மறுத்து வருவது குறித்து பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. உரிய சமூக இடைவெளியுடன் பரிகார பூஜைகளை நடத்த அனுமதிக்கலாமே என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது'' என்ற நாரதரிடம் நாம் கேட்டோம்.

``ஆலயங்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அல்லவா? பரிகாரங்கள் தடைப்படுகின்றன என்றால்... எவ்விதமான பரிகாரம், வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதாம்?''

``முடிக்காணிக்கை, பொங்கல் வைப்பது போன்ற பிரார்த்தனைகள் பெரும்பாலான கோயில்களில் அதிக அளவில் செய்யப்படும். தற்போது பல ஆலயங்களில் இந்த நேர்த்திக்கடன்களுக்கு அனுமதி இல்லை.

தெய்வங்களுக்கு உரிய அபிஷேக அர்ச்சனை செய்வதற்குக்கூட, பூக்கள் முதலான எந்தப் பொருளும் கொண்டு வர அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மட்டுமல்ல, பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப் படுகிறார்கள் பக்தர்கள் தரப்பில்.''

``இதுபோன்ற அனுமதி மறுப்பு தொடர் பாக வேறு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன சுவாமி?''

``தோஷங்களை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் எந்த பரிகார பூஜைகளும் நடத்தப்படக் கூடாது என்ற தடையால், கடந்த குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி காலங்களில் பலரும் பாதிக்கப் பட்டார்கள். இதுகுறித்து அரசும் அறநிலையத் துறையும் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்று ஆன்மிக அமைப்புகளும் பக்தர்கள் தரப்பில் பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

`இந்த ஊரடங்கு காலத்தில் பன்மடங்கு இழப்புகளையும் அச்சங்களையும் அனுபவித்து வரும் பக்தர்களுக்கு ஆறுத லாக இருப்பவை ஆலய வழிபாடுகளும் பரிகார பூஜைகளும்தான். அவற்றை இன்னும் அனுமதிக்க மறுப்பது ஏன்...' என்ற கோபம் பக்தர்கள் வட்டாரத்தில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதை அரசு கவனிப்பது நல்லது.” என்றார் நாரதர்.

அவர் பேசி முடித்ததும் நமக்கு வந்த ஒரு தகவலை அவரிடம் காட்டினோம்.

`நெல்லைஅம்பாசமுத்திரம் தாலுகாவில் பனஞ்சாடி எனும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழைமையான திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் கடந்த 3 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள் ளது. இந்த விஷயத்தில் பல மர்மங்கள் இருக்கலாம்' என்று நண்பர் ஒருவர் நமக்குப் பகிர்ந்துகொண்ட தகவல்தான் அது.

உன்னிப்பாகப் படித்துப் பார்த்த நாரதர், ``விரைவில் விசாரித்து வந்து தகவல் பகிர்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...