Published:Updated:

நாரதர் உலா: ‘விமோசனம் கிடைக்குமா?’

“என்ன சுவாமி... பாடல் எல்லாம் பலமாக இருக்கிறதே... பாட்டு மூலம் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரிகிறது.

பிரீமியம் ஸ்டோரி

வெளியே பெருமழை பெய்துகொண்டிருக்க, முழுவதும் நனைந்தவராய் உள்ளே நுழைந்தார் நாரதர். சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு ஈரம் களைந்து, பாடல் ஒன்றைப் பாடியபடி வந்தார்.

``ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி... குதம்பாய் காசுமுன் செல்லாதடி...”

திரிலோக சஞ்சாரியின் பாட்டு ஏதோ உள்ளர்த்தம் கற்பிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டோம். பனங்கற்கண்டு கலந்த பாலைக் கொடுத்து நாரதரை உபசரித்தோம்.

ரசித்துப் பருகி முடித்தவரிடம் கேட்டோம்.

“என்ன சுவாமி... பாடல் எல்லாம் பலமாக இருக்கிறதே... பாட்டு மூலம் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரிகிறது. தகவலை நேரடியாகச் சொல்லிவிடுங்களேன்...'' என்று வேண்டிக்கொண்டோம்.

நாரதர் உலா:  ‘விமோசனம் கிடைக்குமா?’

``கும்பகோணம் சென்று வந்தேன். அங்கே ஆதிகும்பேஸ்வரர் கோயில் குறித்த விஷயங்கள் சிலவற்றை அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பாட்டு...'' என்றவர், தொடர்ந்து விவரித்தார்.

``கும்பேஸ்வரர் கோயிலில் நடந்த லஞ்ச லாவண்ய விஷயங்கள், பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் கொதிப்புக்கு ஆளாக்கியிருக்கின்றன.

திருக்கோயில் கோபுரங்களை மறைத்து பெரும் கட்டடங்களைக் கட்டக்கூடாது என்பது பொதுவான அரசு விதி. ஆனால், அது எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.

நாரதர் உலா:  ‘விமோசனம் கிடைக்குமா?’

அப்படியே, ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் ஈசான பக்கத்தில் கோபுரத்தை மறைக்கும் வகையில் பெரும் கட்டடப் பணிகள் நடந்து வந்தனவாம். அப்போதே, பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாம். நல்லவேளை... தற்போது அந்தப் பணி நகராட்சியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கம் ஒரு மொட்டை கோபுரம் உள்ளது. அந்த இடத்துக்குப் பக்கத்தில், கோயிலுக்குச் சொந்த மான ‘தியாகராஜ பிள்ளை நந்தவனம்’ என்ற இடம் உள்ளது. அந்த இடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அங்கே தனியார் கட்டடங்களும் வீடுகளும் எழுப்ப, கோயில் நிர்வாகத்தின் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இப்போது இந்த விஷயமே பெரும் பரபரப்பை உருவாக்கி, ஆலய நிர்வாகத்துக்கு எதிரான விஷயமாகி உள்ளது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஆதரவாக அந்த கோயிலின் செயல்அலுவலர் ஒருவரே செயல்பட்டு வந்துள்ளார் என்பதுதான் பக்தர்களின் குற்றச்சாட்டு.

அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கோயிலின் அனைத்து விஷயங்களிலும் ஊழல் பெருகிப் போய்விட்டது என்கிறார்கள் பக்தர்கள்.

கோயில் நிலத்தை விற்பது, கோயில் சொத்துக் களின் வாடகையைக் குறைத்து மதிப்பீடு தருவது, கோயில் கான்ட்ராக்ட்களில் கமிஷன், ஸ்தபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் நியமனத்தில் லஞ்சம், கோயில் வாசல்களில் கடை வைத்திருப்போரிடம் மறைமுக வாடகை வசூலிப்பு... என அந்த அதிகாரியின் முறைகேடுகள் எல்லைமீறிப் போய்விட்டன என்று வேதனைப்படுகிறார்கள், ஆன்மிக ஆர்வலர்களும் பக்தர்களும்.

நாரதர் உலா:  ‘விமோசனம் கிடைக்குமா?’

ஒரு கட்டத்தில், குறிப்பிட்ட செயல் அலுவலரின் செயல்களைக் கண்டுபிடித்து, அவரைக் கண்டித்து போராட்டம் நடத்தினர் சில அமைப்பினர். இறுதியில் அவர்களையும் ‘எப்படியோ’ சரி செய்துவிட்டார் அந்தச் செயல் அலுவலர் என்று வருத்தப்படுகிறார்கள் பக்தர்கள்.

பின்னர் பொதுமக்களும் பக்தர்களும் பெருமளவில் அந்த அதிகாரிக்கு எதிராகக் களம் இறங்கினர். விஷயம் எல்லை மீறிப் போவதை உணர்ந்து விழித்துக்கொண்ட அறநிலையத் துறை, குறிப்பிட்ட அதிகாரியை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த ஒரு கோயிலின் செயல்அலுவராக மாற்றப் பட்டுள்ளார் அந்த அதிகாரி.

அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கை யும், பெரும் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது. எண்ணற்ற தவறுகள் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு, நிறைய சொத்து சேர்த்தவரின் மீது துறைரீதியில் அதிகபட்ச நடவடிக்கை எடுக்காமல், இடமாற்றம் செய்வது எப்படித் தீர்வாகும்?''

நாரதர் உலா:  ‘விமோசனம் கிடைக்குமா?’

``ஆமாம்... அங்கும் அவர் தவறு இழைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?''

``பக்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்களின் கேள்வியும் இதுவே. `பணி இடமாற்றம் செய்வது எப்படித் தண்டனையாகும். எல்லா துறையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் பாயும்போது, அறநிலையத் துறையில் மட்டும் ஏன் அத்தகைய நடவடிக்கைகள் இல்லை. சில தருணங்களில்... பெரியளவிலான பிரச்னைகள் எழும்போது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்றபடி, பல இடங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்தும், சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான விசாரணை நடத்துவதோ, குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கும் பட்சத்தில் உரியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதோ இல்லையே ஏன்... இதற்கெல்லாம் விமோசனம் எப்போது கிடைக்குமோ' என்று பக்தர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.''

“இதுகுறித்து குறிப்பிட்ட செயல் அலுவலர் தரப்பில் தொடர்பு கொண்டு பேசினீர்களா சுவாமி'' என்று கேட்டோம். “பலமுறை முயன்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; போனில் நம் அழைப்பை ஏற்கவில்லை” என்ற நாரதர் அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

``தமிழகமே அதிகம் விவாதித்த `கள்ளக் குறிச்சி - வீரசோழபுரம் சிவாலயத்தின் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசுத் தரப்பில் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக அறிந்தோம். இங்கு மட்டுமல்ல, இன்னும் பல கோயில்கள் சார்ந்த நிலங்களிலும் கையகப் படுத்துதல் தனியார் ஆக்கிரமிப்புகள் என நிறைய பிரச்னைகள் உள்ளனவாம்... அவைகுறித்த விரிவான தகவல்களோடு வருகிறேன்'' என்ற நாரதர் விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு