Published:Updated:

நாரதர் உலா: `திருப்தியான தரிசனமும் வழிபாடும் எப்போது?’

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

`பெருந்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் அவை கோயில்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டும்தானா’

சிலுசிலுவென மழை பொழியும் குளிர்ச்சி மிகுந்த அந்த மாலை நேரத்தில்தான் விஜயம் செய்தார் என்றாலும், `தேநீர் வேண்டாம் பழச்சாறு ஏதேனும் இருந்தால் கொடும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் நாரதர். ஆரஞ்சுப் பழச் சாறு கொடுத்து உபசரித்தோம். ரசித்துப் பருகியவர், சற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``ஸ்வாமி! ஏதோ சிந்தனை மிகுதியில் இருக்கிறீர்கள் போலும். யாத்திரை சென்ற இடத்தில் தரிசனம் ஏதேனும் தடைப்பட்டுப் போனதா?’’

``நாதன் உள்ளிருக்க நமக்கென்ன கவலை. எனினும் உடன் வந்த நண்பர்களுக்குச் சில கோயில்களில் பரிகார வேண்டுதல் இருந்தது. அதை நிறைவேற்ற முடியாமல் போனதில் அவர்களுக்கு மிகுந்த வருத்தம். அடியார்களின் கவலை என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது’’ என்றார் நாரதர்.

``வேண்டுதல் வழிபாடுகளில் என்ன பிரச்னை ஸ்வாமி?விவரமாகச் சொல்லுங்களேன்...’’

``சொல்கிறேன் கேளும்...’’ என்றபடியே விவரிக்க ஆரம்பித்தார் நாரதர்.

``புகழ் பெற்ற பல தலங்களில் குறிப்பிட்ட வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் பிரசித்தம். ஆனால், அங்கெல்லாம் தரிசனத்தின் பொருட்டு கோயில் திறக்கப்பட்டுவிட்டாலும் பக்தர்கள் வேண்டுதல் நிமித்தமான வழிபாடு களைச் செய்ய தடை தொடர்கிறது.

பக்தர்கள் தரப்பில் பிரார்த்தனையின் பொருட்டு நிகழ்த்தும்... தெய்வ மூர்த்தங்களுக்கு மஞ்சள் காப்பு செய்வது, கல்யாணப் பரிகார வழிபாடுகள், கிரக தோஷ வழிபாடுகள் போன்றவற்றுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விவரம் அறியாத பக்தர்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

`பெருந்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் அவை கோயில்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டும்தானா’ என்று ஆன்மிக அமைப்பினரும், பக்தர்கள் தரப்பிலும் ஆதங்கப்படுகிறார்கள். புகழ்பெற்ற திருவிழாக்கள் பல பெயரளவில் நடத்தப்படுவதிலும் அவர்களுக்கு வருத்தம்தான்’’ என்ற நாரதர் வேறு சில விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

``டெல்டா மாவட்டத்துக்குச் சென்று வந்தேன். நவகிரகப் பரிகாரங் களுக்குப் பிரசித்தி பெற்ற கோயில்கள் நிறைந்த பகுதி அது. எப்போதும் உள்ளூர், நம் மாநில பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலத்தவர் கூட்டமும் அலைமோதும். பல தருணங்களில் போக்கு வரத்தே ஸ்தம்பித்துப்போகும்!

தற்போது, பல தலங்கள் வெறிச்சோடி திகழ்கின்றன. கோயில் வாசல்களில் வழக்கமாகக் களைகட்டும் சிறு வியாபாரிகளின் அர்ச்சனைப் பொருள்கள் விற்கும் கடைகள், பூக்கடைகள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. `அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பது உண்மைதான்; ஆனால் வேறு வழியில்லை’ என்கின்றனர் ஆலயங்களின் நிர்வாகத் தரப்பில்.

கோயிலுக்குள் நுழைந்தால், கொடிமரத்தைத் தாண்டி முதலில் தென்படுவது பக்தர்களுக்கான விதிமுறைகள் தாங்கிய பெரிய அறிவிப்பு போர்டுகள். அதனைக் கடந்தபின் தரையெங்கும் சமூக இடைவெளிக்கான அடையாளமாக வெள்ளை நிற வட்டங்கள். பக்தர்களும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தரிசித்துத் திரும்புகிறார்கள். அர்ச்சகர்கள், பணியாளர்கள் தரப்பிலும் சிறந்த ஒத்துழைப்பு, வழிகாட்டலைத் தருகிறார்கள்.

பக்தர்கள் சோதனைகளுக்குப் பிறகு உள்ளே பிரவேசித்தால், ‘அர்ச்சனை கிடையாது. பூ வாங்க மாட்டோம். தீபம் போடக்கூடாது. பிரசாதம் கிடையாது’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் பணியாளர்கள். பெரிய ஆலயங்கள் சிலவற்றில் ஸ்பீக்கர்களில் கொரோனா விதிமுறைகள் அறிவிப்பு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

`இதெல்லாம் சரிதான்... ஆனால் ஆலய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதிலும் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். சில கோயில்களில் மூலவர் மற்றும் உற்சவர் மூர்த்தங்கள் போதிய அலங்காரம்கூட இல்லாமல் திகழ்வதை என்னவென்பது’ என்று பக்தர்கள் தரப்பில் ஆதங்கப்படுவதையும் கவனிக்க முடிந்தது.

ஆன்மிக ஆர்வலரான ஒருவர் தற்போதைய நிலைமை குறித்து நம்மிடம் பேசினார். `மனம் அமைதியுடன் பிராகார வலத்தைக்கூட திருப்தியாய் செய்ய முடிவதில்லை. வழிநெடுக தடுப்புகள். சில கோயில்களில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடிவதில்லை. ஆக, பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்த திருப்தி இல்லாமல்தான் திரும்ப வேண்டியுள்ளது’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.

நாரதர் உலா: `திருப்தியான 
தரிசனமும் வழிபாடும்
 எப்போது?’

கோயில் பணியாளர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். ‘கோயிலை மறுபடியும் திறக்கச் சொல்லிட்டாங்களேன்னு சந்தோஷப்பட்டோம். ஆனால் எங்கள் சந்தோஷமெல்லாம் கானல் நீராயிடுச்சு. அர்ச்சனை, அபிஷேகம், பரிகார பூஜைன்னு உபயதாரர் மூலம் வர்ற வருமானம் எதுவும் கிடையாது. 500 ரூபாய் மாதச் சம்பளம். குருக்களுக்கு 600 ரூபாய். இதை வெச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும்?

அவ்வளவு ஏன்... சாமிக்கே நாள்-கிழமைகள்ல நல்ல அலங்காரம், நைவேத்தியம் கிடையாது. கோயில் சார்ந்த வியாபாரமும் சரிஞ்சு போச்சு. சேவார்த்திகளும் முன்னமாதிரி வர்றதில்ல. ஏதோ எக்சிபிஷன் மாதிரி கோயிலைத் திறந்து வைக்கிறோம். வேறு வருமானத்துக்கும் வழியில்லாம, கௌரவத்துக்காக இங்கேயே சுத்திட்டிருக்கோம்’ எனப் புலம்புகிறார் அவர்.’’ என்று முடித்த நாரதரிடம் கேட்டோம்.

“சரி ஸ்வாமி... பெரிய கோயில்களின் நிலை இது. கிராமியக் கோயில்கள் - சிறு கோயில்களில் நிலைமை என்ன?’’

“அந்தக் கொடுமையைக் கேட்கவே வேண்டாம். கடந்த பல மாதங்களாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பைக் காரணம் காட்டி, பல கோயில்களுக்கு வரவேண்டிய நிவேதன அரிசி, வஸ்திரம், விளக்கிற்கான எண்ணெய் என எதுவும் சரிவர வருவதில்லையாம். இந்த நிலைமையை சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லையாம். மூலவருக்கு சாத்தப்பட்ட வஸ்திரங்களைக் கிழித்துத் துண்டுகளாக்கி, அவற்றையே சுற்றுக்கோயில் உப தெய்வங்களுக்கு சாற்றும் நிலைதான் தற்போது என்கிறார்கள் சிறு கோயில்கள் சிலவற்றில் பணி செய்யும் அன்பர்கள்.

மொத்தத்தில் வேண்டுதலுக்காகவும் தரிசனத்துக்காகவும் சென்றால், கோயில்கள் பலவற்றின் நிலைமையைப் பார்த்து வேதனை அதிகரிப்பதுதான் மிச்சம் என்கிறார்கள் பக்தர்கள்’’ என்றார் நாரதர்.

``வெகுசீக்கிரம் இவை எல்லாவற்றுக்கும் விடிவுகாலம் பிறக்க வேண்டும். அதற்கு அந்த இறைவன்தான் அருளவேண்டும்’’ என்று நாம் பதிலுரைக்கவும், நாரதரின் செல்போனில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

நாரதர் உலா: `திருப்தியான 
தரிசனமும் வழிபாடும்
 எப்போது?’

செல்போனில் வாட்ஸப் பகிர்வுகளை ஆராய்ந்த நாரதர், அவற்றில் வந்துவிழுந்த சில புகைப்படங்களை நம்மிடம் காட்டினார்.

சிதிலம் அடைந்த நிலையில் இடிந்து விழும் நிலையிலிருந்த கோயில் ஒன்றின் புகைப்படங்கள்தான் அவை. ஆக்கிரமிப்பின் காரணமாக இந்த நிலை என்றும், கோயில் மதிலின் வெளிப்புறத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்றன என்றும் தகவல் பகிர்ந்திருந்தார் அதை அனுப்பியவர்.

``கடவுளே! என்ன அக்கிரமம் இது... எந்தக் கோயில் ஸ்வாமி?’’

``தஞ்சை மாவட்டம், முல்லைக்குடி - தீக்ஷ சமுத்திரம் ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். 200 வருடம் பழைமை வாய்ந்த ஆலயமாம். கோயிலின் அபிஷேக நீர் வெளியேறவும் வழியில்லாதப்படி ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்களாம். முழு விவரத்தையும் விசாரித்து வந்து பகிர்ந்து கொள்கிறேன்’’ - என்று முந்தைய நமது கேள்விக்குப் பதில் கூறியபடியே விடைபெற்றுக் கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலைமகள் அருள் புரிவாள்!

திருமகளின் வாகனம் அன்னம் என்கின்றன ஞான நூல்கள். ஆனால், வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில், தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால், சுபகாரியங்களுக்குத் திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

நாரதர் உலா: `திருப்தியான 
தரிசனமும் வழிபாடும்
 எப்போது?’

கேரளா- சோட்டாணிக்கரையில், ஸ்ரீலட்சுமிநாராயண தத்துவத் துடன் எழுந்தருளியிருக்கிறாள் ஆதிபராசக்தி. இங்கே தரிசனம் தரும் சிவப்பு வெட்டுக்கல்- பகவதி அம்மனாகவும், வலப்புறம் உள்ள சிறிய கருங்கல்- மகா விஷ்ணுவாகவும் பூஜிக்கப்படுகின்றன. இங்கே காலையில்- வெண்ணிற ஆடையுடன் ஸ்ரீசரஸ்வதிதேவியாகவும், மதியம்- செந்நிற ஆடையுடன் ஸ்ரீலட்சுமியாகவும், மாலை வேளையில்- நீல நிற ஆடையுடன் ஸ்ரீதுர்கையாகவும் காட்சி தருகிறாள் அம்மன்.

விளக்கில் வாசம் செய்பவள் ஸ்ரீமகா லட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர். ஸ்ரீதுர்கையின் வடிவங்களிலும் ஸ்ரீதீபதுர்கை உண்டு. தீபமேற்றப்பட்ட விளக்கை, ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடாது என்பது ஐதிகம்!

தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள் வைகுண்டத்தில்- ஸ்ரீமகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில்- ஸ்ரீசொர்க்கலட்சுமியாகவும், ராஜ்ஜியத்தில்- ஸ்ரீராஜ்ய

லட்சுமியாகவும், இல்லங்களில்- கிரக லட்சுமியாகவும், விலங்குகளிடம்- ஸ்ரீசோப லட்சுமியாகவும், புண்ணியசீலர்

களிடம்- ஸ்ரீப்ரீதி லட்சுமியாகவும், சத்திரியர்களிடம்- ஸ்ரீகீர்த்தி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம்- ஸ்ரீதயா லட்சுமியாகவும் அருள்பாலிப்பதாக புராண நூல்கள் கூறுகின்றன.

- எஸ். விஜயா, திருச்சி-1