
மெய்ம்மறந்து மெல்லிய குரலில் பரவசமாகப் பாடிக்கொண்டிருந்தவரை உசுப்பினோம்.
பருவமழையும் புயல்மழையும் போட்டி போட்டுப் பெய்துகொண்டிருக்க, அந்த அடை மழையிலும் நாரதர் சொன்னபடி சரியான நேரத்துக்கு வந்துசேர்ந்தார். சூடாக இஞ்சி கலந்த தேநீர் கொடுத்து உபசரித்தோம்.
ரசித்துப் பருகி முடித்தவருக்கு என்ன தோன்றியதோ, கண்ணை மூடியபடி பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்தார்.
`நீ அறிவாயோ குளிர் காற்றே, நாங்கள் மாலையிட்டால் ஐயப்பன்மார்; ஐயனும் நாங்களும் ஒன்று... ஒன்று... ஒன்று!'
மெய்ம்மறந்து மெல்லிய குரலில் பரவசமாகப் பாடிக்கொண்டிருந்தவரை உசுப்பினோம்.
``என்ன ஸ்வாமி... ஐயன் ஐயப்பன் தியானத் தில் லயித்துவிட்டீர்கள் போல...''

``உண்மைதான்... வழியில் நண்பர் ஒருவர் வீட்டில் நிகழ்ந்த ஐயப்ப பூஜையில் கலந்து கொண்டுவிட்டு வந்தேன்... அதன் பாதிப்பு...'' என்று புன்னகைத்தார்.
``சபரி யாத்திரை - தரிசனம் எல்லாம் என்ன நிலையில் இருக்கின்றன... ஏதேனும் தகவல் உண்டா?''
``விரிவாகச் சொல்கிறேன்...'' என்ற நாரதர், இருக்கையில் வசதியாக அமர்ந்துகொண்டு, தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
``தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுத் தளர்வுகள் காரணமாக ஆலயங்களில் கொஞ்சம் பக்தர்களைக் காண முடிகிறது.

பழநியில் பக்தர்கள் வசதிக்காக மீண்டும் வின்ச் பயன்பாட்டைத் தொடங்கிவிட்டார்கள். ஆந்திரா திருப்பதியிலும் பக்தர்களைக் கணிசமாக அனுமதிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக முப்பதாயிரம் பேரை தரிசனத்துக்கு அனுமதித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் திருப்பதியில் வரலாறு காணாத மழை. மலையெங்கும் அருவிகள் பொங்கிப் பெருக, திருமலை பார்ப்பதற்கு தேவலோகம் போலிருந்தது. ஆனால் கேரளாதான் இன்னும் கொரோனாவை வென்றபாடில்லை.
அதனால் மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சபரிமலை தரிசனம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை வழங்கி யுள்ளது. அதனால் தமிழகத்திலும் ஐயப்ப சாமிமார்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.''
``கேள்விப்பட்டோம். சபரியில் தினமும் 1,000 பேருக்கு அனுமதி என்று முன்பு சொல்லி யிருந்தார்கள். இப்போது அதை 2,000 என்று மாற்றி இருக்கிறார்களே...''

``முந்தைய வருடங்களை ஒப்பிட்டால் இது மிக மிக சொற்பம் அல்லவா. ஐயப்ப சீசனில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிக்குப் பயணமாவார்களே... அப்படிப் பார்த்தால், இப்போதைய நிலைமையில் உள்ள இரண்டாயிரம் மூவாயிரம் என்பதெல்லாம்... பக்தர்களைப் பொறுத்தவரையிலும் மிகக் குறைச்சல் என்றுதானே தோன்றும். பக்தர்கள் பலருக்கும் இதுகுறித்த ஆதங்கம் இருக்கவே செய்கிறது.
வேறொரு பிரச்னையும் உண்டு. எப்படி யேனும் ஐயனை நேரில் சென்று தரிசித்துவிட வேண்டும் என்று ஆன்லைனில் முன்பதிவுக்கு முயற்சிக்கும் பக்தர்கள் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது!''
``என்ன பிரச்னை...''
``முன்பதிவு செய்ய விரும்பி கணினியில் அமர்ந்தால், தேவசம்போர்டின் இணைய தள இணைப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆக அவ்வளவு எளிதில் யாராலும் முன்பதிவு செய்ய முடியவில்லை. இது இப்படியென்றால், புக் செய்தவர்களின் நிலை மிகவும் மோசம். சபரிமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 24 மணி நேரத்துக்குள் கொரோனா சோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை பம்பையில் காண்பிக்க வேண்டும் என்பது விதி. பயணமே 24 மணிநேரம் என்ற நிலையில் இருக்கும் பக்தர்களுக்கு இது சாத்தியமே இல்லை.

பக்தர்கள், தங்கள் ஊரில் சோதனை செய்து அந்த ரிப்போர்டைக் கொண்டு வருவதற்குள் 24 மணி நேரம் கடந்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்துடன், பம்பையில் புதிதாக கொரோனா சோதனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்குக் கட்டணமாக 625 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. இந்த நிலை பக்தர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது.''
``கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறதே. இங்கெல்லாம் தனியார் மையங்களில் 3,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்களே...''
``இங்கு 3,000 ரூபாய்க்குச் செய்யப்படுவது ஆர்டி - பிசிஆர் பரிசோதனை. ஆனால் அங்கு செய்யப்படுவதோ ரேபிட் டெஸ்ட். இந்தப் பரிசோதனை துல்லியமாக இல்லை என்று தமிழக அரசு எப்போதோ கைவிட்டுவிட்டது.
இந்தச் சோதனையைத்தான் அங்கு அவர்கள் மேற்கொள்கிறார்கள். அதனால் பரிசோதனை முடிவுகளில் குழப்பமே மிஞ்சுகிறது என்று குறைப்பட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள். அவ்வளவு தூரம் சென்று, 2- முறையாக பரிசோதனை செய்யும் நிலையிலும், குழப்பமான பரிசோதனை முடிவுகளால் தரிசனம் செய்ய முடியாமல் போகிறதே என்பது அவர்களின் ஆதங்கம்''
``சிரமம்தான்... துல்லியம் இல்லாத பரிசோதனையை இன்னும் ஏன் கடைப் பிடிக்கிறார்களாம்?''
``கடுமையான நிதி நெருக்கடியே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வேறுசில பிரச்னைகளும் ஐயப்பமார்களுக்கு உண்டு. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், பெரும்பாலான குருசாமிகள் சபரிக்குச் செல்ல இயலாத நிலைமை. ஆகவே, சரியான வழிகாட்டல்களைப் பெற முடியாத நிலை புதியவர்களுக்கு.
மேலும், பம்பையில் நீராடத் தடை, கொண்டு செல்லும் நெய்யை ஐயனுக்கு அபிஷேகம் செய்ய முடியாத சூழல், எங்கும் தங்கமுடியாமல் கால் வலிக்க வலிக்கத் திரும்பி நடந்துவரும் வேதனை... இப்படி எண்ணற்ற சிரமங்கள்!
அதேபோல், பக்தர்களைவிடவும் பாது காப்புப் பணியில் உள்ளோர் மூலமே நோய்த் தொற்று அதிகம் பரவுகிறது என்ற புகாரும் கோயில் பணியாளர்களிடையே பேசப்படுகிறது.
பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் சொந்த செலவில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்களாம். பலரும் இதைச் செயல்படுத்துவதில்லை. இதன் காரணமாக நோய்த் தொற்று அதிகம் பரவும் சூழல் என்கிறார்கள்.''
``விரைவில் பிரச்னைகள் விலக வேண்டும். ஐயப்பமார்களின் சரண கோஷத்தைக் காது குளிரக் கேட்க வேண்டும். ஐயனின் அடியார்கள் மகரஜோதியைக் கண்குளிர தரிசிக்கவேண்டும். அதற்கு ஐயப்பனே அருள்செய்ய வேண்டும்.''
நமது கூற்றை ஆமோதித்த நாரதர், ``நெல்லைச் சீமையில் ஒரு கோயிலில் நகைகள் மாயமான தகவல் குறித்து நண்பர் பகிர்ந்துகொண்டார். விசாரித்து வருகிறேன்...'' என்றபடியே விடை பெற்றுக்கொண்டார்.
- உலா தொடரும்...