மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் எனும் அமைப்பின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

``வாரும் வாரும்...'' என்று அறைக்குள் நுழைந்த நம்மை வரவேற்றார் நாரதர். அலுவலகச் சந்திப்பில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தாமதத்தைப் பொறுத்தருள வேண்டினோம் நாரதரிடம்.

சிரம் அசைத்து காரணத்தை ஏற்றுக் கொண்ட நாரதர் கைகாட்ட, இஞ்சி கலந்த சூடான தேநீர் நமக்காகக் காத்திருந்தது. மலர்ச்சியுடன் நன்றி தெரிவித்த நாம், தேநீரைப் பருகியபடியே பேச்சைத் தொடங்கினோம்.

“ஒரு கால பூஜைத் திட்டத்தில் நிறைய குளறுபடி இருப்பதாகக் கேள்விப்பட் டோமே...''

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

``ஆம்... நானும் அதுபற்றியே ஆரம்பிக்க லாம் என்றிருந்தேன்...'' என்ற நாரதர் தொடர்ந்து பேசினார்.

“இதுபற்றி இந்து - சமய அறநிலையத் துறை ஆணையருக்குக் கும்பகோணம், ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் எனும் அமைப்பின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

`வருமானம் இல்லாத பல கோயில்களில் ஒரு வேளையாவது பூஜை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், ஒரு கால பூஜைத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களில்... ஏதேனும் காரணத்தால் சிலருக்குப் பதில் புதியவர்கள் மாறும் நிலையில், ஆரம்பத்தில் பணி செய்த அர்ச்சகரின் பெயரிலுள்ள வங்கி கணக்குகளுக்கே பணம் போய் சேர்கிறது. இதன் காரணமாக, பழையவருக்கு மாற்றாக தற்போது பணி செய்பவருக்கு இந்தப் பண உதவி கிடைப்பதில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

அதேபோல், ஒரு கால பூஜைத் திட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப் பட்டுள்ள தொகை - மாதம் ரூ 700. இந்தத் தொகை ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை மொத்தமாக வழங்கப்படுகிறது. அதிலும் ஒரு பகுதியைத் தங்களுக்குத் தரவேண்டும் என அதிகாரிகள் சிலரும் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அர்ச்சகர்களை நிர்பந்திக் கிறார்கள். வேறுவழியின்றி அர்ச்சகர்களும் அதற்கு உடன்பட வேண் டிய அவல நிலை தொடர்கிறது.

இந்து சமய அறநிலைத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, ஒரு கால பூஜைத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். அத்துடன், இத்திட்டத்தை காலை - மாலை இரு வேளைகளும் பூஜை கள் நடத்துமாறு விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' இதுதான் கடிதத்தின் சாராம்சம்'' என்றார் நாரதர்.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

“நடவடிக்கை விரைவில் வேண்டும்தான். அதேபோல், இந்தத் திட்டத்துக்குப் பக்தர்கள் உதவ முனைந்தால், அவர்களின் பங்களிப்பை ஏற்பது பற்றியும் யோசிக்கலாமே...''

“சரியாகச் சொன்னீர். இதுபோன்ற கோயில்களில் வழிபாட்டு வேளையை அதிகரிப்பது குறித்து பக்தர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றால், நிறைய அன்பர்கள் உதவ முன்வருவார்கள்.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

தற்போது, அறநிலையத்துறை வழங்கும் பணம் மாதம் சுமார் 700 ரூபாய் என்பது, இன்றைய விலைவாசியில் பூஜை செலவு களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.

எனவே, அந்தந்த பகுதி பக்தர்கள் ஒருங் கிணைந்து நித்திய பூஜைகளுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவிகளைச் சேகரித்து வழங்கி உதவலாம். பூஜைக்கு அர்ச்சகர் இல்லாத கோயில்களை அடையாளம் கண்டு அங்கே பூஜைகள் நடத்தவும் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.''

``சில ஊர்களில் சில கோயில்களில் நீர் சொல்வது போன்று பக்தர்கள் பெரிதும் திருப் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை அரசுத் தரப்பில் முறைப்படி பயன்படுத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.''

``உண்மைதான்...'' என்ற நாரதர் அடுத்த தகவலைச் சொல்லத் தொடங்கினார்.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

“வருடம்தோறும் திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் மஹா சரஸ்வதிதேவி ஆலயத்தில் நவராத்திரி விழா களைகட்டும். கூத்தனூரில் சாரதா நவராத்திரி 12 நாள்களும், அதன்பிறகு 10 நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாள்களில் பல்வேறு அலங்காரங்களில் அன்னை கலைவாணி காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங் களில் பக்தர்களே மலரிட்டு அர்ச்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு வித்தியாப்பியாசம், அன்றிரவு நாகஸ்வர இன்னிசையுடன் அம்பாள் வீதி உலா, இசைக் கலைஞர்களின் வழிபாடு, வாகன பூஜை முடித்து அன்னையின் அருள் வேண்டி வலம் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்... என்று ஊரே கோலாகலமாக இருக்கும்.இவையாவும் இந்த வருடம் இல்லை...''

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

``பெருந்தொற்றுப் பாதிப்பைத் தவிர்க்க விழாவைச் சுருக்கி விட்டார்களோ''

“ஆம். எப்போதும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே விழா ஏற்பாடுகள் தொடங்கி விடும். இந்த வருடம் இன்னும் தொடங்க வில்லை. பக்தர்கள் தூரத்தில் இருந்து அம்பாளை தரிசிக்கும் அளவில் அனுமதிக்கப் படுகிறார்கள்.''

“அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினம் தசரா திருவிழாவுக்கும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். இன்னும் திருச்செந்தூர் சஷ்டித் திருவிழா, திருவண்ணாமலை தீபத் திருவிழா என்று பெரும் விழாக்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. பெருந்தொற்று விரைவில் விலகி, ஆலய விழாக்கள் மீண்டும் களைகட்ட அந்த இறைவன் அருளட்டும்'' என்று நாரதருக்குப் பதில் சொன்ன நாம், தஞ்சை மாவட்டம் முல்லைக்குடி கோயில் பிரச்னை குறித்து நினைவூட்டினோம்.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

“ஆமாம் விசாரித்து வந்தோம். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரிலிருந்து திருக்காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் உள்ள முல்லைக் குடியில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் -மீனாட்சி அம்மன் ஆலயம். 220 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் வழிபட்டால் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

`அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் முன்பு மூன்று கால பூஜைகள் நடந்துள்ளன. தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. குடமுழுக்கு நடை பெற்று 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் கோயில் களையிழந்து காணப்படுகிறது.

கோயிலைச் சுற்றியுள்ள பல இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதிகாரிகள் சிலர் கோயில் இடங்கள் சிலவற்றைத் தனி நபர்களுக்கு, விதியை மீறி பட்டா போட்டும் கொடுத்துள்ளனர்.அபிஷேக நீர் வெளியே செல்லவும் வழி இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது.

நாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா?'

ஆக்கிரமிப்புகளால் விழா நாள்களில் கோயிலைச்சுற்றி உற்சவ ஊர்வலம் செல்லவும் முடியவில்லை. கோயில் குளத்தில் கழிவுகளைக் கொட்டும் அவலமும் நடந்தது. சிலர் மது அருந்திவிட்டு, காலி மதுப்பாட்டில்களையும் வீசிச் செல்லும் நிலையும் இருந்தது.

தற்போது 100 நாள் திட்டத்தின் கீழ் பணி புரிபவர்கள் உதவியுடன் குளத்தைச் சுத்தம் செய்து புனரமைத்து வருகிறோம். குளத்தைச் சுற்றிலும் தளம் அமைக்க வேண்டும் . ஆனால் அதற்கான ஒத்துழைப்பை அறநிலையத்துறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இவை அனைத்தையும் சரி செய்து சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தவேண்டும்' என்கிறார்கள் உள்ளூர் பக்தர்களும் ஆன்மிக அமைப்பினரும்'' என்றார் நாரதர்.

அத்துடன், ``இந்தப் புகார்கள் குறித்துக் கேட்டறிய ஆலய நிர்வாகத் தரப்பிலும் உரியவர்களைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். விரைவில் விசாரித்தறிந்து விவரம் சொல்கிறேன்'' என்றபடியே நம்மிடம் விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...