Published:Updated:

அரசின் அலட்சியம்... சிதைந்து வரும் சிவாலயம்!

வையங்குடி சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
வையங்குடி சிவாலயம்

நாரதர் உலா

அரசின் அலட்சியம்... சிதைந்து வரும் சிவாலயம்!

நாரதர் உலா

Published:Updated:
வையங்குடி சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
வையங்குடி சிவாலயம்

இதழுக்கான மற்ற பணிகள் நிறைவடைந்து நாரதரின் தகவல்களுக்காகக் காத்திருந்தோம். மாலை 6 மணிக்குள் வந்து என்று குறுந்தகவல் கொடுத்திருந்த நாரதர், சொன்னபடியே வந்து சேர்ந்தார். `சிவபெருமான் கிருபை வேண்டும்... அவன் திருவடி பெற வேண்டும்... வேறென்ன வேண்டும்...’ எனும் பாடலை முணுமுணுத்த படியே வந்த நாரதருக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தபடியே கேட்டோம்...

அரசின் அலட்சியம்...
சிதைந்து வரும் சிவாலயம்!

``என்ன ஸ்வாமி... விருப்பு வெறுப்பற்ற தங்களுக்கு என்ன வேண்டுதல்...’’

தேநீரைப் பருகியபடியே பதில் சொன்னார் நாரதர்: ``உலக நன்மையைத் தவிர வேறென்ன வேண்டுதல் இருக்கும் நம்மிடம்? தற்போது ஒரு சிவாலயம் சீக்கிரம் பொலிவு பெறவேண்டும் என்றே அந்த ஈசனிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.’’

``அது எந்த சிவாலயம் ஸ்வாமி?’’

``விவரமாகச் சொல்கிறேன். முன்னதாக வேறொரு தகவலைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’’ என்றவர், ``கோயில்களில் பயன்படுத்த இயலாத ஆபரணங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, வைப்புநிதியில் வைத்து வருமானம் ஈட்டலாம், இதன் மூலம் வரும் வட்டித் தொகையை கோயில்கள் திருப்பணிக்குப் பயன்படுத்த லாம்’ என்ற அரசின் திட்டத்துக்கு ஆன்மிக அமைப்பினர் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் எழுகின்றனவே...’’

``அதுகுறித்துதான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளாரே...’’

``ஆமாம்! அத்துடன், `நகைகளை உருக்கும் நடவடிக்கைகளில் எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் நேர்மையாகவும், உண்மையாகவும், தூய்மையாகவும் அரசு செயல்படும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் பக்தர்கள் தரப்பிலோ, `பயன்படுத்த இயலாத நகை களைக் கணக்கெடுப்பது, பிரிப்பது ஆகிய விஷயங்கள் துல்லியமாக நடைபெற வேண் டும்; தொன்மையான நகைகளையும் இதில் கலந்துவிடக் கூடாது. இதையெல்லாம் எப்படி அரசுத் தரப்பில் தொடர்ந்து கவனிக்கப் போகிறார்கள்... காலப்போக்கில் இதிலும் முறைகேடுகள் நடக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஆலயம் தொடர்பான வருவாயைப் பெருக்க வேறு வழிகளை யோசிக்காமல், ஆலய ஆபரண விஷயங்களில் கவனம் செலுத்துவது ஏன்...’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்’’ என்ற நாரதர், சிவாலயம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

அரசின் அலட்சியம்...
சிதைந்து வரும் சிவாலயம்!
அரசின் அலட்சியம்...
சிதைந்து வரும் சிவாலயம்!

``கடலூர் - திட்டக்குடி அருகிலுள்ள கிராமம் வையங்குடி. இங்குள்ள சிவாலயம் 9 ஆண்டுகளாகத் திருப்பணிக்குக் காத்திருக்கிறது...’’

``ஆமாம்! அந்த ஆலயத்தின் நிலை குறித்து ஏற்கெனவே சக்தி விகடன் இதழில் `ஆலயம் தேடுவோம்’ பகுதியில் விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தோமே...’’

``அதே ஆலயம்தான். ‘ராஜேந்திரசோழனின் மகன் ராஜாதிராஜன் கட்டிய ஆலயம். இதே ஊரைச் சேர்ந்த வண்டார்குழலி என்ற பெண் அடியார் இந்த ஆலயத்தைப் புனரமைப்புச் செய்துவிட்டுதான் திருமணமே செய்துகொள்வேன் என்ற உறுதியோடு ஐந்து ஆண்டுகளாகப் போராடி வருகிறார். ஆனால், இன்றுவரை என்னென்னவோ காரணங்களைக் கூறி அரசு அதிகாரிகள் இந்த ஆலயத் திருப்பணிகளைச் செய்யவிடாமல் கிடப்பில் போட்டு வருகிறார்களாம். இதுபற்றி கேள்விப்பட்டதும் நேரில் சென்று விசாரித்தோம். கோயில் பணிக்காகப் போராடி வரும் வண்டார்குழலி பேசினார்.

வண்டார்குழலி
வண்டார்குழலி

‘புதர் மண்டி எவரும் உள்ளே போக முடியாத அளவுக்கு சிதிலமுற்றுக் கிடந்தது கோயில். 2012-ல் அடியார்கள் இணைந்து உழவாரம் செய்து தூய்மைப் படுத்தி இருக்கிறார்கள். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலைப் புனரமைக்கும் முயற்சிகளை அப்போதே தொடங்கி யிருக்கிறார்கள். கோபுரத்தைப் பிரித்தெடுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தபோது, ஸ்தபதி இறந்துவிட்டார். அத்துடன், இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஊர்ப் பெரியவர்கள் சிலரும் இறந்துவிட, பணிகள் நின்றுபோயின. கோயில் மீண்டும் புதர்மண்டிப் போனது. வழிபாடுகள் நடத்த இயலவில்லை.

மீண்டும் 2016-ல் அடியார்கள் இணைந்து கோயிலை ஓரளவு சீர்செய்தோம். பிறகு அறநிலையத்துறை தலையிட்டு, ஓர் அர்ச்சகரை நியமித்து வழிபாடு செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் வழிபாட்டுக்கு உரிய பொருளையோ, பணத்தையோ அரசு அளிக்கவில்லை. அர்ச்சகருக்கு மாதம் 3000 ரூபாய் ஊதியம் உட்பட எல்லா செலவுகளையும் நாங்களே பார்த்துக்கொண்டோம். திட்டக்குடி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த ஆலயம் வருகிறது. 2016-ம் ஆண்டில் பொறுப்பிலிருந்த ஆய்வாளரிடம் எத்தனையோ முறை முறையிட்டோம். ஆனாலும் அவர் இந்த ஆலயத் திருப்பணி குறித்து அரசிடம் எந்த விண்ணப்பமும் வைக்காமலும் கோப்புகளை அனுப்பாமலும் இருந்துவிட்டார். இப்படியே இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன.

பின்னர் விழுப்புரம் இணை ஆணையரிடம் முறையிட்டோம். அவர் இந்தக் கோயில் குறித்த விவரங்களை திருப்பணிகள் மாநிலக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். இது நடக்கவே 2020-ம் ஆண்டு வரை ஆகிவிட்டது. தொடர்ந்து சென்னையில் அப்போதைய ஆணையரைச் சந்தித்து விண்ணப்பித்தோம். அவரின் பரிந்துரையால் மாநிலக் குழுவின் ஒப்புதல் கிடைத்தது. ஆனாலும் திருப்பணி குறித்த உயர்நீதி மன்ற குழுவுக்குச் சென்று, மீண்டும் கோயில் பணி கிடப்பில் போடப்பட்டது.

ஆனாலும் நாங்கள் முயற்சியைக் கைவிட வில்லை. தற்போதைய அரசு அதிகாரிகளிடம் மீண்டும் முறையிட்டோம். அதிகாரிகள் ஆய்வு செய்து ‘இந்தக் கோயிலின் கோபுரம் வித்தியாசமாக உள்ளது. அந்த அமைப்புப் படி பணி செய்ய தற்போது ஸ்தபதிகள் யாரும் இல்லை’ என்று கூறிவிட்டார்கள். ஆனால் நாங்கள் விசாரித்த வரையில், இந்த அமைப்பிலான கோபுரத்தை மீண்டும் திருப்பணி செய்வது எளிதுதான் என்றே தெரியவருகிறது.

இதுகுறித்து மீண்டும் அணுகிய போது, அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில், `இந்தக் கோயிலின் கோபுரம் தஞ்சை கோபுரம் போன்று விசேஷமாக உள்ளது. மற்றொரு குழு ஆய்வு செய்து அனுமதி தரும்’ என்றார்கள். ஆனால் இதுவரை எந்த அனுமதியும் கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ முயற்சிகள் செய்து விட்டோம். எந்த முன்னேற்றமும் இல்லை. ஆலயப் பணிக்கு ஆகும் செலவை ஏற்கவும் தயாராக இருக்கிறோம். ஊர் மக்களும், கோவை பேரூர் ஆதீனகர்த்தாவும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை’ என்று ஆதங்கப்படுகிறார் வண்டார்குழலி.

மேலும் அவர் `எங்கள் கோயில் சிறியதுதான். ஆனால் அதைப் புனரமைக்க ஏன் இவ்வளவு தடங்கல்கள் என்றுதான் தெரியவில்லை. இங்கு ஸ்வாமியும் அம்பாளும் அவ்வளவு அழகு. இப்போது மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் திகழும் நிலைமை. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஏதேனும் வழி பிறக்காதா எனக் காத்துக் கிடக்கிறோம்’ என்று கலங்கியபோது மிகவும் கஷ்டமாக இருந்தது’’ என்று முடித்தார் நாரதர்.

``இதுகுறித்து அறநிலையத் துறை தரப்பில் விசாரித்தீர்களா..?’’

``விரைவில் விசாரித்து தகவல் பகிர்கிறேன்... சீக்கிரம் நல்லது நடக்கும் என நம்புவோம்’’ என்றபடியே நம்மிடம் விடைபெற்றுக் கொண்டார் நாரதர்.

- உலா தொடரும்!