திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது?

கோட்டை மாரி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கோட்டை மாரி கோயில்

`எங்கெங்கு காணிணும் சக்தியடா... தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா...' என்று பாடியபடியே விஜயம் செய்தார் நாரதர். பாடலிலேயே குறிப்பை உணர்த்தும் நாரத மகரிஷியை வரவேற்று உபசரித்தோம்.

``சுவாமி... தாங்கள், ஏதோ அம்மன் கோயில் பற்றிய பிரச்னையைத்தான் சொல்லப் போகிறீர்கள் என்று அறிகிறோம். சரிதானா...'' என்றதும் நம்முடைய யூகிக்கும் திறனை மெச்சியவராக, விஷயத்தைக் கொட்ட ஆரம்பித்தார் நாரதர்.

“சேலம் மாநகரத்தின் பெருமைகளில் ஒன்று அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் கோட்டையை எழுப்பியபோது, காவல் தெய்வமாக வழிபடப்பட்டவள் இந்த அம்பிகை.

மணிமுத்தாற்றில் நீராடி, கோட்டை மாரியம்மனை வேண்டிக் கொண்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை.

நாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது?

இந்தக் கோயிலில் விசேஷம் என்றால் சேலம் மாநகரமே திருவிழாக்கோலம் பூண்டுவிடுமாம். சுற்றுவட்டாரத்து மக்கள் பெருந்திரளாகக் கூடிவிட, சேலம் நகரமே பெருங்கூட்டத்தால் திணறுமாம்'' என்ற நாரதர், அருகிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகிமுடித்துவிட்டு தொடர்ந்தார்.

``ஆனால்... கடந்த ஐந்தாறு வருடங்களாக எவ்வித விழாக்களும் நடைபெறவில்லையாம். மேலும், 1993-ம் வருடம் திருக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு இதுவரையிலும் குடமுழுக்கு நடைபெறவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள். ஊரைக் காக்கும் அம்மனுக்கு இப்படி விழா எடுக்காமல் இருந்தால் ஊருக்கு நல்லதல்ல என்றும் ஆதங்கப்படுகிறார்கள் அவர்கள்.''

``அறநிலையத்துறைக்கு வருவாய் ஈட்டித் தரும் கோயில்களில் முக்கியமானது, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில். அதற்கே இந்த நிலைமையா... கோயிலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உண்டா... பொதுமக்களும் அரசுத் தரப்பும் என்ன சொல்கிறார்கள்?”

“கோயில் கட்டுமானத் திருப்பணிகளில் தாமதம், நன்கொடை முறைகேடு, சிலைகள் பிரச்னை, குழு அரசியல் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து நிறைய குற்றச் சாட்டுகளை முன்வைக்கிறார்கள். எங்கிருந்து தொடங்குவது...” என்று கேட்டார் நாரதர்.

கோட்டை மாரி கோயில்
கோட்டை மாரி கோயில்

“குடமுழுக்கு விஷயத்தை முதலில் சொல்லுங்கள் நாரதரே'' என்று நாம் எடுத்துக் கொடுத்தோம்.

“கோயில் கட்டுமானம் பழைமையானது. சேதமடைந்துவிட்டது. அதனால், கோயிலின் சிதிலமான கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாகக் கட்டி குடமுழுக்கு செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அத்துடன் கருவறையையும் இடித்துவிட்டு புதிதாகக் கட்டலாம் என்று அறநிலையத்துறை முடிவெடுத்தபோதுதான் பிரச்னை தலை தூக்கியதாம்.

கருவறையை இடித்துவிட்டு ஆகம விதிப்படி கட்டினால், அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் ஒருவரை நியமிக்கவேண்டியது இருக்கும். அதனால், காலம்காலமாக இந்தக் கோயிலில் பூஜை செய்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி, ஒருசாரார் கருவறையை இடிக்கக்கூடாது என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்களாம்; அந்தத் தரப்புக்குச் சாதகமாக தீர்ப்பும் கிடைத்தது என்கிறார்கள். ஆனால், அதையும் மீறி இரவோடு இரவாகக் கருவறை இடிக்கப்பட்டது என்று ஆதங்கப்படுகிறார்கள் அந்தத் தரப்பினர்.

`கருவறையை இடித்ததால் கோயிலின் சாந்நித்யம் போய்விட்டது. கோயிலின் தொன்மைச் சிறப்பு பாழாகிவிட்டது. அங்கிருந்த சிலைகள் அனைத்தும் சேதமாகி விட்டன. மேலும், கோயில் கட்டுவதற்கு வசூலிக்கப்படும் நிதிக்கும் முறையான ரசீது வழங்கப்படுவதில்லை. அதேபோல், கோயில் கட்டுமானப் பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. அதுமட்டுமா, கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன' என்று அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுகிறார்கள் பக்தர்கள் சிலர். அத்துடன் வேறொரு `பகீர்' குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.''

``அது என்ன குற்றச்சாட்டு?''

``கோயிலில் இருந்த தங்கத் தேரும் மாயமாகி விட்டது என்கிறார்கள்!''

``தலைசுற்றுகிறதே... சரி, இந்தக் குற்றச் சாட்டுகள் குறித்து, அறநிலையத்துறை தரப்பில் ஏதேனும் விசாரித்தீரா, அவர்கள் தரப்பில் என்ன பதில் சொல்கிறார்கள்?''

“இது தொடர்பாக கோட்டை மாரியம்மன் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் ராஜாராமைச் சந்தித்துப் பேசினோம். அவர் கோயில் கருவறை பிரச்னையிலிருந்து பேசத் தொடங்கினார்.

`ஏற்கெனவே கருவறை சேதமாகிவிட்டது. கருவறையில் உள்ள மூலவர் உயரமான இடத்தில் இருக்கவேண்டும் என்பது ஆகமவிதி. இங்கே, மக்கள் நின்று வணங்கும் இடம் மேடா கவும், சாமி சிலை அமைந்திருக்கும் பகுதி தாழ்வாகவும் அமைந்திருந்தன. கருவறையைத் தவிர மற்ற இடங்கள் காலப்போக்கில் படிப் படியான கட்டுமானப் பணிகளின் காரணமாக உயர்ந்துவிட்டன. அதேபோல் கோயிலின் கருவறையும் மிகச்சிறியது. ஒருவர் மட்டுமே... அவரும் முழங்கால் போட்டு மண்டியிட்டபடி தான் உள்ளே நுழையமுடியும்.

இப்படியான பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில்தான் கோயில் திருப்பணிகளோடு கருவறையையும் புதிதாகக் கட்டத் தீர்மானித் தோம். அதேபோல், கருவறையை இரவோடு இரவாகவெல்லாம் இடிக்கவில்லை. தொல்லியில் துறை, கட்டடக்கலை வல்லுநர்களின் அனுமதி பெற்ற பிறகே கோயில் கருவறை இடிக்கப் பட்டது' என்கிறார் செயல் அலுவலர்.''

``கருவறையை இடித்ததால் கோயிலின் சாந்நித்யம் போய்விட்டது என்கிறார்களே பொதுமக்கள். அதற்கு என்ன பதில் சொல் கிறார்கள்?''

``அதுகுறித்தும் கேட்டோம். `இன்று மற்ற பகுதிகளைச் சீரமத்தைவிட்டு, கருவறையைக் கவனிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். சேதமடைந்திருக்கும் கருவறை திடீரென்று இடிந்து அசம்பாவிதம் ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது! ஆகவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் நலன் கருதியே கருவறையையும் சேர்த்து இடித்திருக்கிறோம்' என்று பதிலளித்த செயல் அலுவலர், திருப்பணிகள் தாமதத்துக்கும் விளக்கம் தந்தார்.

`கோயில் முழுவதும் கற்றளியாக எழுப்பப் படுகிறது. ஒவ்வொரு சிலையையும் தூணையும் பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டி இருக்கிறது. கற்சிலைகளைச் செய்யும்போது வேகமாக செய் என்று துரிதப்படுத்த முடியாது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்தவை. இயன்றவரை பணிகளை விரைவுப்படுத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் கருவறைப் பணிகள் நிறைவடைந்துவிடும். அதற்குப் பிறகு அடுத்தகட்ட பணிகள் விரைவில் முடிந்துவிடும்' என்று கூறுகிறார் அவர்'' என்ற நாரதரிடம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

கோட்டை மாரி கோயில்
கோட்டை மாரி கோயில்

“நன்கொடை முறைகேடு, சிலைகள் சேதம், தங்க ரதம் குறித்து விசாரித்தீரா?”

“விசாரிக்காமல் இருப்பேனா! `ரசீது இல்லாமல் யார் நன்கொடை கொடுப்பார்கள்? இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதேபோல் கோயிலிலிருந்த சிலைகள் எதுவும் சேதமாகவில்லை. அனைத்தையும் அரசுப் பாதுகாப்பில் வைத்திருக்கிறோம்' என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.

அதேபோல், கோயிலில் திருவிழாக்கள் நடைபெறாததால்தான் தங்க ரதத்தை வெளியே எடுக்கவில்லையாம். குடமுழுக்கு முடிந்தபிறகு கண்டிப்பாக தங்கத் தேர் பவனி வரும் என்று கூறுகிறார்கள். அதேபோல், திருக்கோயிலில் எப்போதும் இருதரப்புக்கு இடையே பிரச்னை இருந்துகொண்டிருக்கிறதாம். அதுவும் கோயில் கட்டுமானத் திருப்பணிகளில் தொய்வு ஏற்படக் காரணம் என்கிறார்கள் பொதுமக்கள்'' என்ற நாரதர், அடுத்து ஆக்கிரமிப்புப் பிரச்னை குறித்து விவரித்தார்.

“திருக்கோயில் கோபுரத்துக்கு முன்பு உள்ள இடங்கள் முனிசிபாலிட்டி நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சில முறை முயற்சியெடுத்தும் பலன் கிட்டவில்லையாம். மேலும், கோயில் நிர்வாகத் துடன் மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை இது. திருப்பணி முடிந்ததும் கோயில் நிர்வாகத்தின்கீழ் இந்த இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது'' என்ற நாரதர், ``விரைவில் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து திருக்கோயில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற அந்த மாரியன்னை அருள்புரியட்டும்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...