மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா?

ஆதிகும்பேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதிகும்பேஸ்வரர்

இந்த ஒரு நாள் விழாவை நடத்துவதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் என்னவாயின என்றும் தெரியவில்லை.

நாரதரின் வரவுக்காக நாம் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, வாசலில் நாராயண நாமம் ஒலிப்பது கேட்டது. நாரதரின் வருகையை அறிந்துகொண்டோம்; அவருக்காகக் கற்கண்டு கலந்த பாலைத் தயாராக எடுத்துவைத்தோம்.

வந்ததும் நம் உபசரிப்பால் அகம் மகிழ்ந்தவர், கற்கண்டு கலந்த பாலைச் சுவைத்துக் குடித்தார். அத்துடன் விபூதிப் பொட்டலம் ஒன்றையும் பவ்யமாக நீட்டினார். அந்தச் சிறு பொட்டலத்தின் கவரை ஆதிகும்பேஸ்வரர் திருப்படம் அலங்கரித்தது.

பணிவுடன் விபூதியை எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டே நாரதரிடம் கேட்டோம்.

நாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா?

``என்ன நாரதரே... மாசி மக விழாவுக்குக் கனஜோராகத் தயாராகிறதா கும்பகோணம்..?''

``ஆமாம்! கங்காதேவியே புண்ணியம் பெற தேடி வந்து நீராடும் திருத்தலமாயிற்றே திருக் குடந்தை. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மகம் அங்கு சிறப்பென்றால், ஆண்டு தோறும் வரும் மாசி மகத்தன்றும் பக்தர்கள் அதிகம் திரளும் தலமாயிற்றே...''

``அதனால்தான் முன்னோட்டம் பார்த்து வந்தீராக்கும்?''

``அதுமட்டுமல்ல... வேறொரு பிரச்னை குறித்த தகவலும் காதில் விழுந்தது'' என்று நாரதர் கூற, ``விவரமாகச் சொல்லும்'' என்று நாம் கேட்டுக் கொண்டோம்.

நாரதர் விவரிக்கத் தொடங்கினார்... ``கும்பகோணம் மாசி மக விழா விசேஷமானது. இதில் தொடர்புடைய 11 கோயில்களில் முதன்மையானது ஆதிகும்பேஸ்வரர் கோயில்.

இந்தக் கோயிலில் மாசி மாதத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கும் விழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். 9-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தீர்த்தவாரியும் விழாவில் சிறப்பம்சங்கள். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்துகொள்வார்கள்.''

``இதெல்லாம் எல்லோருக்கும் தெரியுமே...''

``பொறும்... விஷயத்துக்கு வருகிறேன்'' என்று இடையில் குறுக்கிட்ட நம்மை உரிமையோடு கடிந்துகொண்ட நாரதர் தொடர்ந்தார்.

நாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா?

``விழாவின் எட்டாம் நாள் வீதி உலாவில்தான் சர்ச்சை. இந்த 8-ம் நாள் வீதி உலா வைபவச் செலவைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் ஏற்று நடத்தி வந்தனர். அதற்கான செலவுக்காக சோலையப்பன் தெருவில் ஒரு மண்டபத்தைக் கோயிலின் பெயரில் எழுதிவைத்துள்ளனர். அதில் வரும் வருமானத்தை வைத்து மாசி மகம் 8-ம் நாள் வீதி உலாவை நடத்துவதுடன், அவ்வப்போது மண்டபத்தைப் புனரமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி இந்த விழா சிறப்பாக நடைபெற்று வந்ததுடன், வீதி உலா வரும் ஶ்ரீகும்பேஸ்வரர், 8-ம் எண் படித்துறையில் அமைந்திருக்கும் அந்த மண்டபத்தில் எழுந்தருள, அங்கே அவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு கும்பேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து, பின்னர் தேரில் ஏறி அருள்வாராம். இந்த நிலையில், சுமார் 25 வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட அந்த மண்டபம் இடிந்துபோனதாம். அதன் பிறகு, அருகே சந்நியாசி ஒருவர் நடத்திவந்த பாட சாலையில் இந்த வைபவம் நடைபெற்றதாம். அந்தச் சந்நியாசி இறந்தபிறகு, அவரின் உறவினர் ஒருவர் பாடசாலையை வீடாக மாற்றி வசித்து வருகிறார். அத்துடன் அந்த வீட்டில் வைத்து கும்பேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாராம்!''

``அப்படிச் செய்ய முடியுமா..?''

``இல்லறம் நடக்கும் வீட்டில் ஸ்வாமியை எழுந்தருளச் செய்து அபிஷேக ஆராதனைகள் செய்யக் கூடாது எனக் கோயிலின் குருக்கள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதனால், குறிப்பிட்ட நபரின் வீட்டில் ஸ்வாமி எழுந்தருளல், அபிஷேக வைபவம் போன்றவை இல்லாமல், வீதி உலா மட்டும் நடத்தப்பட்டு வந்ததாம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் (சந்நியாசியின் உறவினர்) கும்பகோணம் சார்பு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். `ஸ்வாமியை அவர் வீட்டில் வைத்து பூஜைகள் செய்யக் கூடாது' என ஆலய நிர்வாகத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். வழக்கின் நிறைவில், `வீட்டுக்குள் ஸ்வாமியை எழுந்தருளச் செய்யா மல், வீட்டின் முன்புறம் சாலையின் ஓரத்தில் வைத்து பூஜைகளைச் செய்யுங்கள்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறார்கள்.

ஆதிகும்பேஸ்வரர்
ஆதிகும்பேஸ்வரர்

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டிய கோயில் நிர்வாகத் தரப்பு மெத்தன மாகச் செயல்படுவதாகக் கோயிலின் குருக்கள் தரப்பினரும் பக்தர்களும் குறை கூறுகிறார்கள்.

`ஸ்வாமியை வீதியில் நிறுத்தி அபிஷேக ஆராதனைகள் செய்வதா...' என்பதே அவர்களின் ஆதங்கமாக உள்ளது.

மேலும் `இந்த ஒரு நாள் விழாவை நடத்து வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் என்னவாயின என்றும் தெரியவில்லை. அதுபற்றியும் விசாரிக்க வேண்டும். அத்துடன் மண்டபத்தைப் புதுப்பித்து, அதில் கும்பேஸ்வரர் உற்சவமூர்த்தியை எழுந்தருளச்செய்து சிறப்பு பூஜைகள் செய் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கூறுகிறார்கள் பக்தர்கள்.

நாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா?

வரும் 28-ம் தேதி தொடங்குகிறது மாசி மகம் விழா. அதற்குள் இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் உள்ளது'' என்ற நாரதர், ``தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் திருத் தலம் தொடர்பான சில சர்ச்சைகளை நண்பர் பகிர்ந்துகொண்டார். விசாரித்து வருகிறேன்'' என்றபடியே விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...