Published:Updated:

நாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி!'

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

டெல்லியில் உள்ளது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம் சார்ந்த `எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ' என்ற அமைப்பு.

நாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி!'

டெல்லியில் உள்ளது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம் சார்ந்த `எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ' என்ற அமைப்பு.

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

வெகுநேரம் காத்திருப்புக்குப் பின், ஒருவழியாய் வந்து சேர்ந்தார் நாரதர். சோர்வுடன் பிரவேசித்தவர், அப்படியே இருக்கையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். அவருக்கு நீர்மோர் பருகக் கொடுத்தோம். அமைதியாய்ப் பருகி முடித்தவரிடம் கேட்டோம்.

“என்ன நாரதரே... நீண்டதூர பயணமா. சில நாள்களாகக் காண முடியவில்லையே... சோர்வாகவேறு இருக்கிறீர்களே...”

தொண்டையைச் செருமியபடி, நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆயத்தமானார் நாரதர்.

``வேறொன்றுமில்லை... மனச் சோர்வு உடல் சோர்வை உண்டாக்கிவிட்டது.''

``மனச்சோர்வு அடையும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சொல்கிறேன்... முன்னதாக நல்ல விஷயம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். தமிழகத்திலேயே முதல் முறையாக திருநெல் வேலி நெல்லையப்பர் கோயிலுக்குப் படைக் கப்படும் பிரசாதத்துக்கு `போக்’ சான்று வழங்கப்பட்டுள்ளது கவனித்தீரா...''

நாரதர் உலா
நாரதர் உலா

``ஆமாம், நல்ல விஷயம்தான். எந்த அடிப்படையில் இந்தச் சான்று வழங்கப் படுகிறதாம்?''

``டெல்லியில் உள்ளது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயம் சார்ந்த `எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ' என்ற அமைப்பு. இதன் சார்பாக, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தனியார் வசம் உள்ள கோயில்களில், சுவாமிக்குப் படைக்கும் பிரசாதம் தயாரிக்கப்படும் இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வுசெய்து `போக்’ (Blissful hygienic Offering to God) என்ற சான்று வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நெல்லையப்பர் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்ன தானத்துக்கான உணவுப் பொருள்கள் சுகாதார மாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தக் கோயில் பிரசாதத்துக்கு `போக்’ சான்று வழங்கப் பட்டுள்ளது. அதேபோல், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கும் சான்று கிடைத்துள்ளது''

``மகிழ்ச்சி. மற்ற ஆலயத்தின் ஊழியர்களுக்கும் இந்தச் செய்தி ஓர் உந்துதலை அளிக்கும்.''

நமது ஆமோதிப்பை ஏற்றுக் கொண்ட நாரதர், அவராகவே அடுத்தத் தகவலுக்குத் தாவினார்.

நாரதர் உலா
நாரதர் உலா

“கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது, ‘மத்யார்ஜுனம்’ எனப்படும் திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயில். இந்தக் கோயிலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோமதி என்கிற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 19-ம் தேதி இரவு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக வனத்துறை முகாமில் விடுவதற்காக, கோமதி யானையைக் கொண்டு செல்ல அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர்.

இதையறிந்த அப்பகுதி பக்தர்களும் கோயில் ஊழியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். அதையும் மீறி கோமதி யானை அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

ஆறு வயதுக் கன்றாக இங்கு அழைத்து வரப் பட்ட கோமதி, அறுபது வருடங்களுக்கும் மேலாக இக்கோயிலில் குழந்தையைப் போல பராமரிக் கப்பட்டு வந்ததாம். இந்த யானை இப்பகுதி மக்கள் அனைவருக்குமே செல்லப் பிள்ளை. மற்ற இடங்களில் உள்ளது போல், யானை யைக் கொண்டு பக்தர்களிடம் காணிக்கை வாங்கும் வழக்கம் எல்லாம் இங்கு இல்லை. யானைக்கு இடையூறாக இருக்கும் என்பதால், பக்தர்கள் யானை அருகில் நின்று போட்டோ எடுப்பதைக்கூட, நிர்வாகத்தினர் கனிவுடன் தடுத்துவிடுவார்களாம். அந்த அளவுக்குப் பாதுகாக்கப்பட்ட யானையைத் திடீரென அழைத்துச் சென்றது, பக்தர்களுக்கு மனக் கஷ்டத்தை அளித்திருக்கிறது. அவர்களின் பரிதவிப்பு நம்மையும் தொற்றிக் கொண்ட தால், சிறிது மனச் சோர்வு!

நாரதர் உலா
நாரதர் உலா

“நாரதரே! நீதிமன்ற உத்தரவின்பேரில் என்றீரே... என்ன வழக்கு, என்ன தீர்ப்பு?''

“யானையின் மூப்பு மற்றும் பராமரிப்பு காரணங்களைக் காட்டி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின் விளைவாக, அந்த யானையைத் தமிழக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”

“இதுபற்றி கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீரா?”

“விசாரித்தேன். `2016-ம் ஆண்டு, நாங்கள் யானையைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றும் யானை வசிப்பதற்குப் போதுமான அளவு இடவசதி இல்லையென்றும் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி நீதிமன்றத்தில் வழக்குபோட்டது பீட்டா அமைப்பு. அத்துடன், யானையைத் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் கோரியது. யானையை அவர்கள் வசம் ஒப்படைக்க விருப்பம் இல்லாத நாங்கள், அறநிலையத்துறை முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி பதில் மனு தாக்கல் செய்தோம்.

சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில், நீதிமன்றம் கோமதி யானையைத் தமிழக வனத் துறை வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த 19-ம் தேதி இரவு அதிகாரிகள், தமிழக வனத்துறை முகாமில் விடுவதற்காக யானையை ஏற்றிச்சென்றனர். கோமதி தற்போது சமயபுரம் அருகிலுள்ள வனத்துறை யானைகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளாள்' என்கிறார்கள் ஆலய நிர்வாகத் தரப்பில்.'' என்ற நாரதர் தொடர்ந்தார்.

```பாகனின் பராமரிப்பில், மனிதர்களுக்கிடையே வசித்த யானை வயதான நிலையில் வனச்சூழலில் விடப்பட்டால், பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும். உரிய வகையில் முறைப்படி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் கோமதியைக் கோயிலுக்குக் கொண்டுவர முயற்சிகள் செய்வோம்' என்று உறுதியோடு கூறுகிறார்கள் பக்தர்கள் தரப்பில்'' என்ற நாரதர், ``கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மாசிமக மண்டகப்படி விழாவில் குளறுபடி என்று நண்பரொருவர் தகவல் சொன்னார். விசாரித்து வருகிறேன்...'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...

ஞானமலை கோயிலுக்கு...

முருகனின் பாதச்சுவடுகள் அமைந்த தலம்தான் ஞானமலை முருகன் கோயில்.

சென்னை - வேலூர் சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது.

முருகன் கோயில்
முருகன் கோயில்

வள்ளியைக் கரம்பிடித்த முருகன், வள்ளி மலையிலிருந்து திருத்தணிகை நோக்கிப் புறப் பட்டார். வழியில் தங்கி இளைப்பாறிய மலைதான் இந்த ஞானமலை என்று புராணங்கள் போற்றுகின்றன. அதற்குச் சான்றாகத்தான் முருகப் பெருமானின் திருவடிச் சுவடுகள் இங்கு காட்சியளிக்கின்றன.

இங்கு ஞான குருவாகக் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசித்தால் மாயைகள் விலகி வாழ்வில் மங்கலம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ‘குறமகள் தழுவிய குமரன்’ திருக்கோலத்தை தரிசித்தால், தம்பதியருக்குள் உருவான சிக்கல்கள் அனைத்தும் விலகிவிடுமாம்.

இந்தக் கோயிலில் நித்ய பூஜை செய்ய அர்ச்சகர் தேவைப்படுகிறார். தங்குமிடம் வழங்கப்படும். தகுதி மற்றும் முன் அனுபவ அடிப்படையில் சம்பளம் அளிக்கப்படும்.

தொடர்புக்கு: 90032 32722, 89396 20662