“மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...''
பணியில் மும்முரமாக இருந்த நாம், பாட்டுச் சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தால், எதிரில் நாரதர். வணங்கி வரவேற்றோம், திரிகால ஞானியை. புன்னகையோடு வரவேற்பை ஏற்றுக் கொண்டவர், தன் பையிலிருந்து மிக பவ்யமாக இலைவிபூதியை எடுத்து நீட்டினார்.

நாமும் செந்திலாண்டவனின் பிரசாதத்தைப் பெற்று நெற்றியில் இட்டுக்கொண்டபடி கேட் டோம், “தென்மாவட்டத்தில் ஒரு பெருமாள் கோயிலில் பிரச்னை என்று கிளம்பினீரே என்ன வானது?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“உண்மைதான். அதுபற்றி இன்னும் தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது. முன்னதாக திருச் செந்தூரில் ஒரு நல்ல விஷயம் கேள்விப்பட்டோம். முருகப்பெருமானையும் தரிசித்து நாளாகிவிட்டது. ஆகவே அங்கு சென்றுவந்தோம்” என்றவர், நாம் கேட்பதற்குக் காத்திருக்காமல் அவராகவே அந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அம்ரித். இவர், பொறுப் பேற்றதுமே பக்தர்களுக்கான பிரச்னைகள், குறைபாடுகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டனவாம். தொடர்ந்து, நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் புகார்கள் குவிந்தனவாம்.

அவற்றில், `சுவாமி தரிசனத்துக்காக பக்தர் களிடம் கட்டாய வசூல் செய்கிறார்கள்' என்ற புகார்தான் அதிகமாம். அதிர்ந்துபோன, இணை ஆணையர் கோயில் பகுதியில் அவ்வப்போது திடீர் விசிட் அடிக்கத் தொடங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் அவரின் வருகையை முன்னதாகவே தெரிந்துகொண்டு உஷாராகிவிடுவார்களாம். இதையறிந்த இணை ஆணையர், சில நாள்களுக்கு முன்பு திடுமென கோயிலுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டாராம்.
அப்போது, பக்தர்களிடம் தரிசனத்தின் பொருட்டு வசூல் செய்துகொண்டிருந்த சிலர் வகையாகச் சிக்கிக்கொள்ள, அவர்களை எச்சரித்து அனுப்பினாராம். தொடர்ந்து பிராகாரத்தில் நுழைந்தபோது வேறோர் அதிர்ச்சி காத்திருந் தது அவருக்கு. நிர்வாகத்தின் அனுமதியின்றி, `நைவேத்திய பிரசாதம்' என்ற பெயரில் பொங்கல் கட்டிகளை விற்றுக்கொண்டிருந்தாராம், மடைப்பள்ளி மற்றும் சந்தன முறைதாரரான ஒருவர். அவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டாராம். அத்துடன் நில்லாமல், அடுத்த இரண்டு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் ஒருமாத காலம் கோயிலுக்குள் நுழைய தடை விதித்து நோட்டீஸும் வழங்கப்பட்டதாம். அது, மட்டுமல்லாமல் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
அத்துடன், தவறுகள் மேலும் நிகழாதபடி ஆய்வு செய்யவும் தொடர்ந்து கண்காணிக்கவும் உள்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது'' என்றார் நாரதர்.
``இதுபோல் பிரச்னைகள் இருக்கும் எல்லா கோயில்களிலும் நடவடிக்கை எடுத்தால், பக்தர்கள் மிகவும் மகிழ்வார்கள்'' என்றதுடன், ``திருச் செந்தூர் கோயில் சுற்றுப் பிராகார மண்டபம் அமைக்கும் பணி குறித்து ஏதும் விசாரித்தீரா?'' என்ற கேள்வியையும் முன்வைத்தோம் நாரதரிடம்.
``அந்தப் பணிக்கான மதிப்பீட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். விரைவில் திருப்பணி தொடங்கும் என்கிறார்கள்'' என்ற நாரதர் தொடர்ந்து வேறொரு தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
``திருச்செந்தூரில் இப்படியென்றால், திருவானைக்காவலில் அதிகாரியின் நடவடிக்கை யால் அதிருப்தியடைந்திருக்கிறார்கள் பக்தர்கள்.''
``அங்கே என்ன பிரச்னை?''
``விளக்கமாகச் சொல்கிறேன் கேளும்'' என்ற நாரதர், தொடர்ந்தார்.
``புராணங்கள் போற்றும் பஞ்சபூதத் தலங் களில் நீருக்கு உரியது திருவானைக்காவல். அகிலாண்டேஸ்வரி அம்பாளின் தாடங்கத்தால் சிறப்பு பெற்றது. திருவானைக்கா இறைவன் மேல் பாடப்பட்ட நூல் திருவானைக்கா உலா. காளமேகப் புலவரால் இயற்றப்பட்ட இந்த நூல், இதுவரை உரையுடன் பதிப்பிக்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காக அடியார்கள் சிலர் முயற்சி மேற்கொண்டு திருவானைக்கா உலாவை அச்சில் ஏற்றி புத்தகமாக்கினார்கள்.
இந்தப் புத்தகத்தைத் திருக்கோயிலுக்குள் வைத்து வெளியிட வேண்டும் என்று விரும்பிய சிவனடியார்கள், திருவானைக்கா திருக்கோயில் துணை ஆணையரிடம் அனுமதி கேட்டிருக் கிறார்கள். அதற்கு அவர் போட்ட நிபந்தனைகள் அடியார்களையும் பக்தர்களையும் பெரிதும் அதிருப்தியில் ஆழ்த்திவிட்டதாம்!''
``அப்படியென்ன நிபந்தனைகள் விதித்தாராம் அந்த அதிகாரி?''
``புத்தக வெளியீட்டுக்கு வரும் அனைவரும் தரையில்தான் உட்கார வேண்டும். நாற்காலி போடக் கூடாது. அழைப்பிதழ் அச்சடித்தால் கோயிலுக்கு பணம் கட்ட வேண்டும். இத்தனைப் பேர்தான் வர வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தாராம். நிறைவில், கோயிலுக்கு வெளியே உள்ள நான்கு கால் மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது.
`தார்மிக அடிப்படையில், திருவானைக்கா இறைவன்மீது பாடப் பட்ட அரிய நூலை வெளியிடும் விழாவில், கோயில் நிர்வாகத் தரப்பில்தான் ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், அதை எடுத்துச் செய்யும் அடியார்களையும் மனம்நோகச் செய்வது நியாயமா...' என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்.
இது குறித்து மேலும் விசாரிக்கையில், `அந்தக் கோயில் ஆணையர் முழுக்க முழுக்க இறை மறுப்பாளர் போலவே செயல்பட்டு கோயில் நிர்வாகத்தில் பல குளறுபடிகளை உண்டாக்கி வருகிறார். முறையாக ஆகம விதிப்படி நடைபெறும் பூஜைகள் சரிவர நடைபெறுகின்றனவா என்பதுகூட தெரியாமல் இருந்து வருகிறார் என்பது வருத்தமான விஷயம்' என்றும் குறைப்பட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
திருவானைக்காவலில் 15 வருடமாக திருவாசக முற்றோதல் நடந்து வருகிறது. உணவு வேளையில் பக்தர்கள் இங்கு உணவு உண்பார்கள். ஆனால், இப்போது இங்கு வைத்து உணவு சாப்பிடக் கூடாது என்று தடுத்துவிட்டார்களாம்!''
``இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீரா?''
``பக்தர்கள் தரப்பில் மேலும் பல குறை களைச் சொல்கிறார்கள். அவற்றையும் சேர்த்து கோயில் நிர்வாகத் தரப்பில் சொல்லி, அவர்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்டுப் பகிர்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார் நாரதர்.
- உலா தொடரும்...