Published:Updated:

அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!

கருடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கருடன்

நாச்சியார்கோவில், கும்பகோணம் அருகேயுள்ள திவ்யதேசம். முக்தி தரும் பன்னிரு தலங்களில் 11-வது தலம்.

சிற்பி ஒருவர் கல்லில் கருடன் சிலையை வடித்தார். பரந்துவிரிந்த சிறகுகள், கம்பீரத் திருமேனி, வலிமைமிகு கரங்கள்...

என பிரமாதமாக கருடன் சிலை தயாரானதும், சிற்பி அதற்குப் பிராணப் பிரதிஷ்டை செய்தார். உயிர் பெற்ற கருடன், ஆகாயத்தை நோக்கிச் சீறிக் கிளம்பினார்.

சிற்பி அதிர்ந்துபோனார். தன் கையிலிருந்த உளியை கருடன்மீது எறிந்தார். அதனால் நாசியில் லேசாக அடிபட்ட கல்கருடன், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இறங்கி அமர்ந்த இடம்தான், திருநறையூர் என அழைக்கப்படும் நாச்சியார்கோவில். இந்தத் தலத்துக்குச் சுகந்தவனம், சுகந்த தலம் என்றும் திருப்பெயர்கள் உண்டு.

அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாச்சியார்கோவில், கும்பகோணம் அருகேயுள்ள திவ்யதேசம். முக்தி தரும் பன்னிரு தலங்களில் 11-வது தலம். வஞ்சுளவல்லி நாச்சியாருடன் ஸ்ரீநிவாஸப் பெருமாள் அருள்பாலிக்கும் அற்புத க்ஷேத்திரம். இத்தலத்தின் விசேஷமான கல்கருடன் குறித்துதான் மேலே காணும் திருக்கதை சொல்லப்படுகிறது. அதுமட்டுமா?

சண்டன், ஹேமன் எனும் அசுரர்கள் இருவர் மக்களுக்குக் கடும் துன்பம் விளைவித்து வந்தார்களாம். அவர்களை அழிக்கும்படி இந்திரன் கருடாழ்வாரை வேண்டிக்கொண்டான். அதற்கிணங்கி, மிகுந்த வாசனை கொண்ட மேருமலையின் முடியைப் பெயர்த்து அசுரர்கள் மீது வீசியெறிந்து அவர்களைக் கொன்றாராம். வாசனை மிகுந்த மரங்களைக் கொண்ட அந்த மலைச்சிகரம் திருநறையூரில் விழுந்ததால், இத்தலத்துக்குச் சுகந்தவனம், சுகந்த தலம் என்று பெயர்கள் வந்ததாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெருமாள் கோயில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு தாயாருக்கே முன்னுரிமை. இதைக் காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார்கோவில்’ என அமைந்துள்ளது. மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் அருள்பாலிப்பது இந்தத் தலத்தின் விசேஷமாகும்.

கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோயில்கள் கட்டினான். விஷ்ணுவுக்காக அவன் எழுப்பிய ஒரே கோயில் திருநறையூரில் இருக்கும் இக்கோயில். இதை ஐந்து அடுக்கு கோபுரம் கொண்ட மாடக்கோயிலாக அமைத்துள்ளான் கோச்செங்கணான்.

அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!

சுமார் 75 அடி உயரத்துடன் திகழ்கிறது கோயில் கோபுரம். நுழை வாயிலின் இடது பக்கம், அழகுமிளிர காட்சி தருகிறார், தும்பிக்கை ஆழ்வார். அங்கிருந்தபடியே விமானத்தைத் தரிசிக்கலாம். கோயிலின் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கல்யாண சந்தோஷத்தில் இருப்பதாக ஐதிகம். ஆக, விமானத்துக்கு ஸ்ரீநிவாஸ விமானம் என்றே பெயர்.

விமான தரிசனம் செய்து, சில படிக்கட்டுகள் ஏறி, கல்யாண மண்டபத்தைக் கடந்து சென்று பெருமாள் சந்நிதியை அடையலாம். பெருமாள் இங்கே எப்படி காட்சி தருகிறார் தெரியுமா?

திருநறையூர் நம்பி, வாசுதேவன் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் பெருமாள், `மேதாவி முனிவர் சாபம் கொடுத்துவிடுவாரோ’ என்ற பயத்தில், அவசர அவசரமாக தான் எழுந்தருளிய கோலத்திலேயே காட்சி தருகிறாராம். முனிவருக்குப் பெருமாள் ஏன் பயப்படவேண்டும்?

முன்பொரு காலத்தில், இங்கு வசித்த மேதாவி மகரிஷி, தனக்குத் திருமகளே மகளாகவும், ஸ்ரீநிவாஸனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம்போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்த மகரிஷியின் கையில் சக்கரத்தாழ்வார் - நரசிம்மப் பெருமாள் ஆகியோர் இணைந்த ஸ்வாமி திருமேனி ஒன்று கிடைத்தது. அப்போது வானில் ஓர் அசரீரியும் ஒலித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘முனிவரே! இந்த விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த அசரீரி. முனிவரும், தன் எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி - நரசிம்மப் பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.

அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!

இந்த இடத்தில் வாசம் செய்ய விரும்பிய மகாலட்சுமி தாயார், மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாகத் தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு ‘வஞ்சுளவல்லி நாச்சியார்’ எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

வஞ்சுளவல்லிக்குத் திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார். அதற்குச் சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டுப் பெற்றார்.

“இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும். என் புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப்பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களைச் சரண் புகுந்து முக்தி வேண்டுவோர்க்குத் தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்” என்று வேண்டினார்.

பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு - வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார்கோவில் எனப்பெயர் பெற்றது. வஞ்சுளவல்லித் தாயார், பெருமாளின் வலப் பக்கத்தில் நின்ற கோலத்தில் - வலது திருக்கையில் வரதமுத்திரையுடனும் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையிலும் காட்சி அருள்கிறார்.

வஞ்சுலவல்லித் தாயாரைக் கல்யாணம் செய்யவேண்டி இத்தலத்துக்கு வந்த பெருமாள் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் ஆகிய ஐந்து வடிவங்கள் எடுத்து வந்தாராம். அவர்களை உபசரித்த மேதாவி மகரிஷி, கை-கால் கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். அப்போது நடுநாயகமாக இருந்த வாசுதேவன், ``ஆண்கள் தரும் தண்ணீரை நாங்கள் ஏற்பதில்லை. கன்னிப் பெண்கள் கொடுக்கும் நீரை ஏற்பது எங்கள் விரதம்’’ என்று கூறினாராம். மேதாவியும் வஞ்சுள வல்லியை அழைத்து நீர் கொண்டுவரச் சொன்னார்.

வஞ்சுளவல்லி நீர் கொடுக்க அருகில் வந்தபோடு அவளின் திருக்கரத்தைப் பற்றிவிட்டார் வாசுதேவன். அவள் பதறி அலறினாள். அதைக் கண்டு கோபம் கொண்ட மேதாவி மகரிஷி, தன் கமண்டல நீரைக் கையிலெடுத்து சாபம் கொடுக்க முயன்றாராம். அவரின் கையைத் தடுத்து சங்குசக்கரதாரியாக தன்னுடைய சுயரூபத்தைக் காட்டியருளினாராம் வாசுதேவன். மகரிஷியும் வந்திருப்பது யாரென்பதை உணர்ந்து தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்து மாமனார் பட்டத்தை ஏற்றாராம். இப்படியொரு திருக்கதை உண்டு.

இத்தலம் குறித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதால் இங்கு விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பட்சிராஜனாம் `பெரியதிருவடி’ என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகாலமும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின்போது ஓர் அதிசயம் நடக்கிறது.

அதாவது கல்கருடரைச் சந்நிதியில் இருந்து தூக்கும்போது 4 பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும்போது, 4 என்பது 8, 16, 32, 64, 128 என்றபடி, கருடாழ்வாரைச் சுமப்போரின் எண்ணிக்கை அதிகமாகும். வீதி உலா முடிந்து கோயிலுக்குள் வந்து சந்நிதியில் கொண்டுவைக்கும்போது தொடக்கத்தில் இருந்தபடி நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.

இந்த வைபவத்துக்கு ஒரு விளக்கமும் உண்டு. அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ‘அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார்’ என்று வரம் அளித்தார் அல்லவா. தாயார் அன்ன வாகனத் தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், வேகமாகச் செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதியுலா செல்லும்போது அவர் நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் வேகம் குறைந்து பின்தங்கிச் செல்வதாக ஐதிகம்.

இத்தலத்தில் கருடனைப் போலவே, சக்கரத்தாழ்வாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. கோயிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரிலுள்ள தனிச் சந்நிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்தச் சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். இந்தச் சக்கரத்தாழ்வார்தான் மணிமுத்தாற்றில் நீராடிய போது மேதாவி முனிவரின் கையில் கிடைத்தவர் என்கிறார்கள். 48 நாள்கள் இந்தத் திருமேனியை வலம் வந்து வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும்.

இந்தக் கோயிலைச் சேர்ந்த கோபிநாத் பட்டாசார்யரிடம் பேசினோம்.

“ஏழுமலைகளைக் கடந்து சென்று திருப்பதி பெருமாளைச் சேவிக்க வேண்டும். அதுபோல இத்தலத்துப் பெருமாளை ஏழுநிலை கடந்து சேவிக்க வேண்டும். இவரை ஒருமுறை தரிசனம் செய்தாலே, திருப்பதி பெருமாளைப் பதினாறு முறை தரிசனம் செய்வதற்குச் சமமாகும்.

ஏழு வியாழன் அல்லது ஏழு சனிக் கிழமைகளில் இத்தலத்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால், சகலவிதமான தோஷங்களிலிருந்து விடுபட்டு, சுபிட்சமான வாழ்வுதனைப் பெறலாம். கருடாழ்வாருக்கு ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் அமுதக் கலசம் என்ற கொழுக்கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தலத்தை தரிசித்தவர்கள் எண்ணிய காரியம் கிட்டியதையும், நன்றிகூறும் விதமாக அவர்கள் மீண்டும் தரிசிக்க வருவதையும் கண்கூடாக காண்கிறேன்” என்றார்.

மண்ணே பிரசாதம்!

முனை நதிக் கரையில் ‘நந்தகாம்’ என்ற இடத்தில் கண்ணனுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு கண்ணனின் பெயர் பிரமாண்ட விஹாரி. கண்ணன், மண்ணை உண்ட வாயைத் திறந்து, தன் அன்னைக்கு அண்ட சராசரத்தையும் காட்டிய இடம் இதுதானாம். அதனால் இன்றும் இங்கு மண்ணையே பிரசாதமாகத் தருகிறார்கள். இதற்கென பிரத்தியேக மண் வரவழைக்கப்பட்டு, பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. அங்கு பக்தர்கள், `ஹே ராதே எங்களைக் கண்ணனிடம் சேர்த்து விடு’ என்றே வேண்டுகிறார்கள்!

- ஜெயலட்சுமி, சென்னை-64.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: நாச்சியார்கோவில்

ஸ்வாமி: ஸ்ரீநிவாஸப் பெருமாள்

தாயார்: ஸ்ரீவஞ்சுளவல்லி நாச்சியார்

சிறப்புகள்: மேதாவி மகரிஷி வழிபட்டு அருள்பெற்ற தலம். கல்கருடன் இத்தலத்தின் விசேஷம். இவருக்கு ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் அமுதக் கலசம் என்ற கொழுக்கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் கைகூடும். இந்தத் தலத்துக்கு ஒருமுறை வந்து பெருமாளை தரிசித்தால் ஏழுமலையானை 16 முறை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது.

எது கடினம்?

மண மகரிஷியின் பால்ய கால நண்பர்களுள் விளாசேரி ரங்கய்யரும் ஒருவர். ரமணரின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவருக்கு இல்வாழ்க்கையில் சொல்லொணாத் துன்பங்கள். அதனால் மிகவும் மனம் வருந்தினார். ரமணரை தரிசிக்க ஆச்ரமம் வந்தார்.

ரமணரிடம் “ஸ்வாமி, வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்றார்.

அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!

உடனே ரமணர் தன் அருகில் இருந்த புத்தக அலமாரியிலிருந்து ‘பக்த விஜயம்’ என்னும் நூலை எடுத்துக் கொடுத்து, அதில் வரும் ‘விட்டோபா’ என்ற பக்தரின் கதையைப் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவர் படித்து முடித்ததும் ரமணர், “விட்டோபா, தன் குடும்பத்தை விட்டுக் காடு நோக்கிப் போனபோது, அவர் மகன் ஞானதேவ் தேடி வந்தான். ‘ஒருவன் மனம் காட்டுக்குப் போனாலும் வீட்டுக்குப் போனாலும் அது கூடவே செல்கிறது’ என்றான். ‘ஞானத்தை வீட்டிலிருந்தேயும் கூட ஒருவரால் அடைய முடியும்’ என்று அறிவுறுத்தினான். உண்மையை உணர்ந்த விட்டோபாவும் வீடு திரும்பினார். ஆகவே எங்கே இருந்தாலும் ஒன்றுதான். மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்!” என்றார்.

உடனே ரங்கய்யர், ரமணரிடம், “அப்படியானால் நீங்கள் ஏன் சந்நியாசி ஆனீர்கள்?” என்று கேட்டார். “என்ன செய்வது, அது என் பிராப்தம். குடும்பப் பாரம் சுமப்பது கடினமானதுதான். ஆனால் ஞானம் பெற துறவே ரொம்ப எளிதான வழி!” என்றார்.

ரங்கய்யரும் உண்மை உணர்ந்தார். எப்போதும் பகவானையே துதித்து வாழ்வில் நிறைவடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!

-எம்.மங்கையற்கரசி, திருச்சி - 2