Published:Updated:

நவராத்திரி தரிசனம்: புற்றிலிருந்து தோன்றி உயிர்களைக் காத்துவரும் புத்து மாரியம்மன் அதிசயங்கள்!

புத்து மாரியம்மன்

வருடந்தோறும் ஆடி மாத வெள்ளிக் கிழமையில் தொடங்கும் (10 நாள்) ஆடி செடல் திருவிழா இங்கு மிகவும் பிரபலம். பல வெளிநாட்டினர், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

நவராத்திரி தரிசனம்: புற்றிலிருந்து தோன்றி உயிர்களைக் காத்துவரும் புத்து மாரியம்மன் அதிசயங்கள்!

வருடந்தோறும் ஆடி மாத வெள்ளிக் கிழமையில் தொடங்கும் (10 நாள்) ஆடி செடல் திருவிழா இங்கு மிகவும் பிரபலம். பல வெளிநாட்டினர், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
புத்து மாரியம்மன்
மாரி எனும் மழை தருபவள் மாரியம்மன். மழை போல அருளையும் வாரி வழங்குபவளும் இவளே. உலக உயிர்களுக்குத் தாயாக நின்று அருளும் இந்த லோகமாதாவுக்கு பாம்பே தலையணை, வேப்பிலை பஞ்சு மெத்தை. வேப்பிலை எனும் மகத்தான மாமருந்து கொண்டு சகல பிணிகளையும் நீக்கும் மருத்துவத்தாய் இந்த மாரியம்மன்.

அதனால்தான் மாரியம்மனுக்கு வேப்ப மரமே தல விருட்சமாக எங்கும் உள்ளன. மாரி எங்கு குடி கொண்டு இருக்கிறாளோ அதற்கு ஏற்ப அவளின் திருநாமமும் மாறுபடும். அப்படி புற்றிலிருந்து தோன்றியதால் புற்று மாரியம்மன் என அழைக்கப்பட்டு பின் புத்துமாரியாய் மருவிய தலம் ஒன்று உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள குறிஞ்சிப்பாடி எனும் இடத்தில் புற்றிலிருந்து அவதரித்து மக்களுக்கு வேண்டும் வரங்களை அருள்பாலித்து வருகிறாள் புத்துமாரி. கடலூர் - விருத்தாசலம் சாலையில் உள்ள இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள் ஊர் மக்கள். இத்திருக்கோயிலில் மூன்று விஷயங்கள் சிறப்பாக போற்றப்படுகின்றன. முதலில் வேப்பமரம், இரண்டாவதாக ஆதியிலிருந்தே வணங்கப்பட்டு வரும் புற்றும் அதில் உள்ள சர்ப்பமும். மூன்றாவதாகக் கூறப்படுவது நிலை அம்மன். நிலை அம்மனின் இருதயத்தில் ஸ்ரீசக்கரம் பொருத்தப்பட்டிருப்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

அம்மன்
அம்மன்

"நோயற்ற வாழ்வும்

குறைவற்ற செல்வமும்

நூற்றாண்டு புகழும்

தூற்றாத மனமும்"

- என்ற பாடலுக்கு இணங்க அனைத்து வகையான வேண்டுதல்களும் இங்கு வந்து வழிபட்டால் நிறைவேறுவதாக மக்களால் கூறப்படுகிறது. குறிப்பாகக் குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கியத்திற்காகவும், தொழில், கல்வி, ஆரோக்கியம், செல்வம் பெருகவும் இங்கு பல வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. வேம்பாயி அம்மன், கோல சுவாமிகள், தண்டபாணி, விநாயகர் உள்ளிட்ட சந்நிதிகள் இங்கு உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் எழுந்தருளி இருக்கும் வேம்பாயி அம்மனால் குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கிய தடைகள் நீங்குகின்றன என்று சிலிர்த்துப் பேசுகிறார்கள் பக்தர்கள்.

வருடந்தோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் தொடங்கும் (10 நாள்) ஆடி செடல் திருவிழா இங்கு மிகவும் பிரபலம். பல வெளிநாட்டினர், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் ஆடி செடல் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பது மற்றும் பக்தர்கள் பலர் உடலில் அலகு குத்திக் கொண்டும் பல நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள். இங்கு நவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

புத்து மாரியம்மன்
புத்து மாரியம்மன்

ஐப்பசி மாதம் அம்பு உற்சவத்தில் கோலாகலமாக மற்றொரு திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. வருடத்தில் இந்த இரு பூஜைகளும் காமிகாகம முறைப்படி நடக்கின்றன. சுமார் 500 வருடங்கள் பழைமையான இக்கோயிலில் 1963-க்கு முன்பு வரை, ஒரே கருங்கற் சிலை கொண்ட புத்து மாரியம்மனை மக்கள் வழிபட்டனர். கும்பாபிஷேகத்திற்கு பின் புதிய புத்து மாரியம்மன் சிலை வைக்கப்பட்டாலும் இன்றளவும் பழைய கருங்கல் மாரி சிலை தனியாக வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வள்ளலார் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்டு சென்றதாகவும் பெரியோர்களால் கூறப்படுகிறது.

"உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில் கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே...!"

இந்த நவராத்திரி நன்னாளில் எல்லோரையும் காத்து ஏற்றமுடன் வாழ அருள வேண்டும் தாயே!