Published:Updated:

நவராத்திரி தரிசனம்: தனமும், தானியமும் பெருகச் செய்யும் திருப்பாதிரிப்புலியூர் பிடாரி அம்மன்!

திருப்பாதிரிப்புலியூர் பிடாரி அம்மன்

இத்திருத்தலத்தில் பிடாரி அம்மனை முதன்மையாக வைத்து இருபுறமும் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்தமாதாக்களும் எழுந்தருளி உள்ளனர்.

நவராத்திரி தரிசனம்: தனமும், தானியமும் பெருகச் செய்யும் திருப்பாதிரிப்புலியூர் பிடாரி அம்மன்!

இத்திருத்தலத்தில் பிடாரி அம்மனை முதன்மையாக வைத்து இருபுறமும் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்தமாதாக்களும் எழுந்தருளி உள்ளனர்.

Published:Updated:
திருப்பாதிரிப்புலியூர் பிடாரி அம்மன்
அஷ்ட காளிகளில் மூன்றாவதாகப் பிறந்தவள் முப்பிடாரி. இவளே பிடாரி என்றும் காலம் காலமாகப் போற்றப்படுகிறாள். பெருங்கோபம் கொண்டவளே இந்த பிடாரி அம்மன். கிராம காவல் தெய்வமான அவள் காளி தேவியின் அம்சமாக விளங்குபவள்.

தீமை செய்பவருக்கு உக்கிரமான தேவி என்றால், தன்னைத் தஞ்சமடையும் ஏழை எளிய நல்ல மக்களுக்கு அவளே தாயாகவும் விளங்குபவள். பிடாரன் என்றால் பாம்பை அடக்குபவன். பிடாரியும் அப்படியே நம் மனதில் ஆடும் நச்சுப்பாம்பை அடக்குபவள் என்று பொருள். பிடாகை என்றால் தனித்திருக்கும் இடம் அதாவது ஊரைவிட்டு தனித்து உக்கிரமான காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் இவள் பிடாரி எனப்படுகிறாள் என்றும் சொல்வதுண்டு.

பிடாரம் என்றால் ஆட்டிவைத்தல் என்றும் பொருள். தீமைகளை ஆட்டுவித்து ஓடச்செய்பவள் பிடாரி. பக்தர்களின் பீடையை அதாவது தரித்திரத்தை துடைப்பவள் என்பதாலும் பிடாரி எனப்படுகிறாள். பிடாகை என்றால் கூடை. கூடையில் வைத்து வழிபடப்படும் ஆதிதெய்வம் பிடாரி என்றும் இலக்கியம் சொல்லும்.

காளி அம்மன்
காளி அம்மன்

'பிடர்த்தலைப் பீடம் ஏறிய வெற்றிவேல் தடக்கை கொற்றவை' என்று சிலப்பதிகாரம் சொல்வதில் இருந்து எருமையின் தலைமீது நின்ற துர்கையே பிடாரி என்றும் அறியலாம். பிடர் என்றால் எருமை என்று பொருள். பிடாரியின் வழிபாடு பற்றி நீலகேசி காவியமும் எடுத்துச் சொல்கிறது. இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிடாரி வழிபாடு நம்மிடையே இருந்து வந்துள்ளதை அறியலாம். இங்கு திருப்பாதிரிப்புலியூர் பிடாரியைத் தரிசிப்போம்.

புலிக்கால் முனிவர் சென்று வழிபட்ட நவபுலியூர்களில் திருப்பாதிரிப்புலியூரும் ஒன்று. இத்தலத்தில் இறைவனை வேண்டி இறைவி தவம் செய்வதாக தல வரலாறு உள்ளது. இறைவனை வேண்டி இறைவி பாதிரி மரத்தின் கீழ் தவம் செய்யும்போது, அசுர சக்திகளிடமிருந்து அன்னையைக் காக்க இங்கு எழுந்தருளியவளே இந்த பிடாரி அம்மன். பிடாரி அம்மனுடன் சேர்ந்து ஏழு சப்தமாதாக்களும் இறைவியின் காவலுக்காக பஞ்ச பூதங்களுக்கு மத்தியில் இவ்விடத்தில் தோன்றினர்.

திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிடாரியம்மன் கோயிலானது பாடலீஸ்வரர் கோயிலுக்கு வடக்கு புறம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் பிடாரி அம்மனை முதன்மையாக வைத்து இருபுறமும் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்தமாதாக்களும் எழுந்தருளி உள்ளனர். இத்திருதலத்தில் உள்ள சப்தமாதர்களுக்கு 'மூலவர் சக்தி பீடங்கள்' என்ற சிறப்பு திருநாமம் உண்டு.

காளி அம்மன்
காளி அம்மன்

குழந்தை பாக்கியம், திருமணப் பேறு போன்ற பல பிராத்தனைகள் இங்கு செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழ்மையிலிருந்து விடுபட பிடாரி அம்மனை தரிசிக்க பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திருப்பாதிரிப்புலியூர் வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இங்கு நவராத்திரி விழாவும், ஆடி விழாவும், 108 திருக்குட நன்னீராட்டு விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் யாவரும் இங்கு வந்து இந்த பிடாரியை வழிபட்டே விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்களாம். இதனால் அவர்களின் நிலங்களில் பல்வேறு தானியங்கள் நன்கு விளைந்து தனமும் சேருகிறதாம்.

தனமும் தானியமும் பெருகச் செய்யும் இந்த பிடாரி அம்மனை இந்த நவராத்திரி நாளில் வணங்குவோம்!