Published:Updated:

திருவருளும் குருவருளும் வழங்கும் காரைக்காலம்மையாரின் குருபூஜை இன்று!

காரைக்காலம்மையார்
காரைக்காலம்மையார்

சிவபெருமான், ‘அம்மையே’ என்று அழைத்து வரவேற்ற பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.

"இறைவனே எவ்வுயிரும்

தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம்

செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும்

எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்"

- காரைக்காலம்மையார் (அற்புதத் திருவந்தாதி)

சிவன்
சிவன்

நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் காரைக்காலம்மையார். சிவபெருமான் வாழும் மலையான கயிலாயத்தில் தன் பாதங்கள் படக்கூடாது என்று எண்ணி, தலைகீழாகத் தன் திருக்கரங்களாலும் சிரசாலும் ஊன்று நடந்து மலையேறியவர். தலையால் நடந்து மலையேறிவரும் அன்னையின் பக்தியைக்கண்ட சிவபெருமான், ‘அம்மையே’ என்று அழைத்து வரவேற்ற பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.

தும்புரு தேவரின் மகள் சுமதி. துர்வாசரின் சாபம் ஒன்றினால் பூவுலகில் காரைவனம் எனும் காரைக்காலில் தனதத்தன் - தர்மவதி தம்பதியின் மகளாக அவதரித்தாள் அம்மைக்குப் பெற்றோர் இட்டபெயர் புனிதவதி. பிறந்துமுதல் தீவிர சிவபக்தையாக வளர்ந்த புனிதவதி, பரமதத்தன் எனும் வணிகனை மணந்து இல்வாழ்வைத் தொடங்கினாள். சிவத்தொண்டையும் விடாது தொடர்ந்தாள்.

Vikatan
சிவலிங்கம்
சிவலிங்கம்

ஒருமுறை, பரமதத்தன் கொண்டுவந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றைச் சிவனடியாருக்குப் புனிதவதி படைத்துவிட்டாள். இதை அறியாத கணவன், உணவருந்துகையில் ஒரு கனியைப் புசித்துவிட்டு மற்றொரு மாங்கனியும் கேட்க, திகைத்து நின்ற புனிதவதி, இறைவனிடம் வேண்ட, மற்றுமொரு மாங்கனியைத் தந்தருளினான் இறைவன். முதலில் புசித்த கனியைவிட இந்தக் கனி சுவை மிகுந்திருப்பதை உணர்ந்த பரமதத்தன் சந்தேகிக்கிறான். உடனே நடந்த உண்மையைக் கூறினாள் புனிதவதி.

ஆனால், புனிதவதி கூறிய அற்புதத்தை பரமதத்தன் நம்பவில்லை. உடனே கணவனின் கண்முன்பே இறைவனை வேண்டி மற்றொரு கனியைப் பெற்றுத்தந்தாள் புனிதவதி. அந்த அற்புதம் தன் கண்ணெதிரிலேயே நிகழவும் வியந்துபோன பரமதத்தன், புனிதவதி இறைவடிவம் என்றறிந்து அவளை விட்டு விலகினான்.

Vikatan

அன்னை தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்து தனக்குப் பேயுறு அருளுமாறு வேண்டிக்கொண்டாள். அதற்கிணங்க இறைவனும் அருள, இறைவனைப் பாடியபடியே பயணித்து அன்னை கயிலாயம் அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

அம்மையார் கேட்டுக்கொண்டதற்காக சிவனார் திருவாலங்காட்டில் நடம்புரிய அதைக் கண்டு மனம் குளிர்ந்து முக்தி பெற்றார், அம்மையார். இத்தகு அற்புதங்களை நடத்தியருளிய தெய்வப்பிறவியான காரைக்கால் அம்மையாரின் குருபூஜை ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. அம்மையின் குருபூஜை அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.

அவதாரத் தலமான காரைக்கால் அருள்மிகு சோமநாதர் வீற்றிருக்கிற காரைக்கால் அம்மையார் திருக்கோயில், தங்கியிருந்த தலமான நெல்லையருகிலுள்ள செப்பறை நடராஜர் திருக்கோயில், முக்திபெற்ற தலமான வண்டார்குழலி உடனுறை வடஆரண்யேஸ்வரர் அருளுகிற திருவாலங்காட்டுத் திருக்கோயில் ஆகிய தலங்களில் அம்மையாரின் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அபிஷேக ஆராதனைகள், வீதியுலா, அன்னதானம் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டும்.

சிவபெருமான்
சிவபெருமான்

ஆனால், இந்தாண்டு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் இன்றைய குருபூஜை (9.4.2020) மிக எளிமையாக நித்தியப்படி பூஜைகளோடு கோயில்களுக்குள்ளேயே சிறியளவில் நடத்தப்படுகின்றன. இந்த நன்னாளில் பக்தர்கள் தங்களில் வீட்டிலிருந்தபடியே சிவவழிபாடு செய்வதன் மூலம் சிவனருளையும் குருவருளையும் பெறலாம். அன்னை அருளிய திருவாலாங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை உள்ளிட்ட பதிகங்களைப் பாராயணம் செய்யலாம்.

`பெரியாருக்கும் கலைஞருக்கும் பதிகம் பாடியிருக்கேன்!’ - நினைவுகள் பகிரும் 88 வயது குருசாமி ஓதுவார்!

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், சிவனாரின் திருநடத்தினைக் கண்டு அம்மையார் இசையோடு பாடியது. எனவே இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்ய நோய்நொடி நீங்கிச் சுகவாழ்வு கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கும்.

"சூடும் மதியம் சடைமேல்

உடையார் சுழல்வார் திருநட்டம்

ஆடும் அரவம் அரையில்

ஆர்த்த அடிகள் அருளாலே

காடு மலிந்த கனல்வாய்

எயிற்றுக் காரைக் காற்பேய்தன்

பாடல் பத்தும் பாடி

ஆடப் பாவம் நாசமே"

அடுத்த கட்டுரைக்கு