Published:Updated:

காஷ்மீரில் சாரதாதேவி திருக்கோயில்!

ஶ்ரீசாரதாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாரதாதேவி

- ஆனந்தன் -

காஷ்மீரில் சாரதாதேவி திருக்கோயில்!

- ஆனந்தன் -

Published:Updated:
ஶ்ரீசாரதாதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாரதாதேவி

எட்டாம் நூற்றாண்டு. சனாதன தர்மம் பிற மதங்களின் ஆளுமையால் ஒளிகுன்றிய தீபம் போல மங்கியிருந்தது. அதன் வேர்களான ஷண்மத பேதங்களால் பிரிவுபட்டிருந்த மக்களைப் பிற மதத்தினர் எளிதாக ஆக்கிரமித்துக்கொண்டனர். அப்போது, நம் தர்மத்தின் மீது படர்ந்த ஆன்மிக இருளை விலக்கிப் புதிய ஒளி பாய்ச்சுவதற்காக அவதரித்த ஞான சூரியன் ஆதிசங்கரர்.

காஷ்மீரில் சாரதாதேவி திருக்கோயில்!
Shyamal Majmundar

கி.பி. 788 - ல் காலடியில் அவதரித்து 820 - ம் ஆண்டு கேதாரத்தில் ஈசனுடன் கலந்த மகான். மூன்று முறை பாரத தேசத்தினைத் தன் பாதங்களால் அளந்தவர். ‘அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சமே’ எனும் மேலான அத்வைத சித்தாந்தத்தினைப் பரப்பி மக்களை ஒன்றிணைத்தவர்; ஆம்நாய பீடங்களை நிறுவியவர். அந்த பீடங்கள் இன்றும் சேவை செய்கின்றன. பாரதம் முழுவதிலும் பயணம் செய்த ஆதிசங்கரர் ஓர் அபூர்வமான விஷயத்தைக் கேள்வியுற்றார்.

காஷ்மீர், தேசத்தின் மணி முடிபோன்று அமைந்த பிரதேசம். அங்கு சாரதாதேவிக்கு அழகான ஆலயம் அமைந்திருந்தது. அதில் சர்வக்ஞபீடம் ஒன்றும் இருந்தது. அந்த ஆலயத்தின் நான்கு திசைகளிலும் மகா துவாரங்கள் இருந்தன. யார் அங்கிருக்கும் அனைத்துப் பண்டிதர்களையும் வாதத்தில் வென்று அந்தப் பீடத்தில் அமர்வாரோ அவரே ‘அனைத்தும் அறிந்தவர்’ எனப் பொருள்தரும் ‘சர்வக்ஞர்’ என்ற கௌரவத்தை அடைவார். ஆதிசங்கரர் காலத்துக்கு முன்புவரை மூன்று திசைகளிலிருந்தும் பண்டிதர்கள் வந்து மகா துவாரத்தைத் திறக்கச் செய்து சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் தென் திசை வாயில் மட்டும் அதுவரை திறக்கப்படவில்லை. காரணம், தெற்கிலிருந்து ஞானியர்கள் எவரும் சென்று அங்கு வாதம் செய்து அன்னை சந்நிதியில் சர்வக்ஞராக அமரவில்லை.

சங்கரர் தென்திசைக்கு ஏற்பட்டிருந்த அந்தக் குறையினைக் களைய விரும்பினார். காஷ்மீரம் சென்றார். அங்கு பண்டிதர்கள் தொடுத்த வினாக்களுக்கெல்லாம் விடைகளை அளித்து, அசரீரியாக சாரதாம்பாள் கேட்ட வினாக்களுக்கும் விடையளித்தார். தெற்கு வாயில் திறந்தது. சர்வக்ஞ பீடத்தில் ஏறி அமர்ந்தருளினார் சங்கர பகவத்பாதாள்.

காஷ்மீர் சாரதாம்பிகைப் போற்றும் ஸ்லோகம் ஒன்று, `காஷ்மீரில் வசிக்கும் சாரதா தேவியான உன்னை நிதமும் வணங்குகிறேன். எமக்குக் கல்விஞானத்தை வழங்குவாயாக' என்று துதித்து வேண்டுகிறது.

அந்த ஸ்லோகம்:

`நமஸ்தே சாரதேதேவி காஷ்மீரபுரவாசினி

த்வாம் அஹம் பிராத்தயேத் நித்யம்'

ஶ்ரீஶ்ரீபாரதீதீர்த்த ஸ்வாமிகள் சங்கராசார்ய மலைக்கு விஜயம் செய்தபோது... (27.10.94 )
ஶ்ரீஶ்ரீபாரதீதீர்த்த ஸ்வாமிகள் சங்கராசார்ய மலைக்கு விஜயம் செய்தபோது... (27.10.94 )
பாகிஸ்தான் பகுதியில் சிதிலமுற்ற நிலையில் சாரதாம்பிகை ஆலயம்
பாகிஸ்தான் பகுதியில் சிதிலமுற்ற நிலையில் சாரதாம்பிகை ஆலயம்

காஷ்மீரில் சாரதாதேவிக்குப் புதிய கோயில்

வ்வளவு சிறப்புகள் மிக்க புராதனமான இந்த சாரதாதேவி ஆலயமும் சர்வகலா சாலையும் அமைந்திருந்த அந்தப் புனிதத் தலம், பிரிவினையின்போது பாகிஸ்தான் பக்கம் சென்றுவிட்டது. அங்கு இந்தியர்கள் யாரும் போக முடியாத நிலை உருவானது. காலப்போக்கில் கவனிப்பாரின்றிப் பெரிதும் சிதிலமுற்றன ஆலயமும் சர்வகலாசாலையும். தற்போது சர்வகலாசாலையின் ஒரு சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது.

தற்போதும் `சாரதா’ எனும் பெயரிலேயே திகழும் இந்த இடம், காஷ்மீர் மக்கள் சிவபெருமானின் வசிப்பிடம் என்று போற்றும் ஹர்முக் பள்ளத்தாக்கில், (கடல்மட்டத்திலிருந்து சுமார் 1981 மீட்டர் உயரத்தில்) அமைந்திருக்கிறது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவு; இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ.தொலைவில் உள்ளது.

இந்த இடத்தை, கீர் பவானி கோயில், வைஷ்ணவிதேவி ஆகிய தலங்களைப் போன்று புனிதம் மிகுந்த சக்திபீடமாகவும் மார்த்தாண்ட் சூரியனார்கோவில், அமர்நாத் குகை வரிசையில் மூன்றாவது புனித பூமியாகவும் போற்றுகின்றனர். இங்கு அருளும் தேவியைக் கல்வி தெய்வமான சாரதா, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி, சொற்களின் தெய்வமான வாக்தேவி ஆகிய முப்பெருந் தேவியரின் ஒன்றிணைந்த அம்சமாகக் கருதுகின்றனர்.

1948 வரையிலும் வருடாவருடம் `டீட்வால்’ எனும் இடத்தில் தொடங்கி சில்ஹானா எனும் கிராமத்தின் வழியாக, இந்தச் சாரதா பீடம் வரையிலும் ‘சாரி முபாரக்’ எனும் புனித யாத்திரை நடைபெற்று வந்ததாம். `சுவாமி நந்தலால் கவுல்’ எனும் புனிதரின் தலைமையில் நடைபெற்ற யாத்திரைதான் கடைசியானதாம். தற்போது யாத்திரை தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் நிகழும் அவலங்களுக்கெல்லாம் காரணம், இந்தத் தலத்தில் காலம்காலமாக நடைபெற்று வந்த சாரதாம்பாள் வழிபாடு நின்றுபோனதுதான் என்கிறார்கள், காஷ்மீர் வாழ் இந்துக்கள்.

தற்போது காஷ்மீரில் சூழல் மாறிவருகிறது. மறுமலர்ச்சி உருவாகிறது. இந்த வேளையில் அங்கே மீண்டும் அன்னை சாரதா தேவிக்குக் கோயில் எழுப்பி வழிபட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.

அன்னை சாரதையும் அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்டாள் போலும். தற்போது, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பழைய சாரதா பீடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்தியப் பகுதிக்குள் உள்ள டீட்வால் எனும் கிராமத்தில், சாரதாதேவிக்குக் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

1948 வரையிலும் இங்கு செயல்பட்டு வந்த ஒரு தர்மசாலாவுக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, அங்கே 3,500 சதுர அடி பரப்பளவில் சாரதாதேவிக்குப் புதிய கோயில் அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி 2021 டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. இந்தப் பணியை ‘சேவ் சாரதா கமிட்டி’ என்ற அமைப்பினர் ஏற்று நடத்துகின்றனர்.

புராதனமான கோயிலின் வடிவமைப்பிலேயே... ஆதிசங்கரர் நிறுவிய நான்கு ஆம்னாய பீடங்களைக் குறிக்கும் வகையில், நான்கு நுழை வாயில்கள் அமைந்திட, நடுவில் சாரதாம்பளின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

திருப்பணிக் குழுவுக்கு ஸ்வாமிகளின் ஆசி...
திருப்பணிக் குழுவுக்கு ஸ்வாமிகளின் ஆசி...
புதிய கோயிலின் வரைபடம்
புதிய கோயிலின் வரைபடம்

குருவருள் கடாட்சம்!

கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதியன்று ரவீந்திர பண்டிட் என்ற அன்பரின் தலைமையில் காஷ்மீர் சாரதா யாத்திரை சர்வக்ஞ பீடம் ஆலயக் கமிட்டி உறுப்பினர்கள் சிருங்கேரிக்கு வருகை தந்தார்கள். சிருங்கேரி சாரதாம்பிகையையும், ஜகத்குரு சங்கராசார் யாள் ஶ்ரீஶ்ரீபாரதீ தீர்த்த மஹா ஸ்வாமி களையும், ஜகத்குரு ஶ்ரீஶ்ரீ விதுசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளையும் தரிசித்து, காஷ்மீரில் அமையவிருக்கும் சாரதா ஆலய நிர்மாணத்துக்கு வழிகாட்டி அருளும்படி கேட்டுக்கொண்டனர்.

சிருங்கேரி சமஸ்தானம் சார்பில், புதிய ஆலயத்தைத் தாங்களே கட்டித் தருவதாகவும் கோயிலில் ஸ்தாபிக்க பஞ்சலோகத்தால் ஆன புதிய சாரதாதேவி விக்கிஹத்தைச் செய்து அளிப்பதாகவும் கூறி ஆசிவழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீர் சர்வக்ஞ பீடத்திலிருந்து தாங்கள் கொண்டுவந்த புனித மண்ணையும், இரண்டு கற்களையும் சிருங்கேரி சுவாமிகளிடம் சமர்ப்பித்தார். தொடர்ந்து அவர்களின் ஆசியோடு கற்களில் ஒன்றைக் கோயில் நிர்மாணப் பணிக்காகப் பெற்றுக் கொண்டார். அதேபோல், புதிய கோயிலின் வரைபடமும் சுவாமிகளிடம் சமர்ப்பிக்கப் பட்டது.

காஷ்மீர் மஹாராஜாக்களின் கடிதங்கள்

வர்களுக்குச் சிருங்கேரி மடத்தின் சார்பில் மடத்திலுள்ள சுமார் 3,000 பக்கங்களைக் கொண்ட ‘கிருத்திய ரத்னாகர’ என்ற நூலும் காஷ்மீர் மகாராஜாக்கள் அனுப்பிய கடிதங்களும் காண்பிக்கப்பட்டு, அவற்றின் பிரதிகளும் வழங்கப்பட்டன. இவற்றில், கிருத்ய ரத்னாகர நூல், காஷ்மீரின் பிரதாமசிம்ஹ மகாராஜாவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த ரணபீர் சிம்ஹ மகராஜாவால் இயற்றப்பட்டதாகும்.

சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசிபெற்ற பிறகு “சிருங்கேரிக்கும் காஷ்மீரத்துக்கும் பல வகையான தொடர்புகள் உண்டு. பிரதாப சிம்ஹ மகாராஜா, ரணபீர் சிம்ஹ மகராஜா ஆகியோர் சிருங்கேரி பீடத்தின் அன்றைய சுவாமிகளின் ஆசி வேண்டி எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள், எங்கள் கண்களைத் திறந்திருக்கின்றன” என்றார் மலர்ச்சியோடு.

1919-ம் ஆண்டு காஷ்மீர் மன்னர் சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு எழுதிய கடித நகல்
1919-ம் ஆண்டு காஷ்மீர் மன்னர் சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு எழுதிய கடித நகல்

தற்போதும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இதற்கு இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் அனுமதி அளித்துள்ளன. இதேபோல், காலம்காலமாக நடைபெற்று.

1948-ல் தடைபட்டுப்போன சாரதாபீட யாத்திரையும் மீண்டும் தொடங்கி நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று இருநாட்டு அரசுகளிடமும் `காஷ்மீர் சாரதா யாத்திரை சர்வக்ஞ பீடம் ஆலயக் கமிட்டி’ சார்பில் விண்ணப்பம் வைத்துள்ளனர்.

காஷ்மீரில் அன்னை சாரதாதேவியின் கோயில் கட்டிமுடிக்கப் படும் தருணத்திலாவது, யாத்திரைக்கு அனுமதி கிடைக்கட்டும்.

அதன் பொருட்டு நாமும் சாரதாம்பிகையின் திருவருளை வேண்டித் துதிப்போம். அன்னை யின் ஆலயம் காஷ்மீரில் விரைவில் எழும்பும் விதம் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கு வோம். ஜகதாம்பிகையாம் அன்னை சாரதாம்பாளின் திருருளால் நம் பிள்ளைகளின் கல்வி சிறக்கும்; எதிர்காலம் செழிக்கும்!

வங்கிக் கணக்கு விவரம்:

SAVE SHARDA COMMITTEE
BANK: UCO BANK
A/C NO: 1877 - 0110 - 070048
IFSC Code: UCBA 0001877

சிருங்கேரியும் காஷ்மீரமும்!

காஷ்மீருக்கும் சிருங்கேரிக்கும் புராண காலத்திலிருந்தே ஆன்மிகத் தொடர்பு உண்டு. கஷ்யப மஹரிஷி தவம் இயற்றிய இடம் என்பதால் அந்தப் பிரதேசத்துக்குக் காஷ்மீர் என்று பெயர். அவரின் மகன் விபாண்டக மகரிஷியும், பேரன் ரிஷ்யசிருங்கரும் சிருங்கேரியில் தவமியற்றினார்கள்.

புராணப்படி காஷ்மீர் தோன்றக் காரணமானவர் ஆதிவராஹர். ஆகவே காஷ்மீரை வராஹாமூலா என்பார்கள். இன்றும் காஷ்மீரில் பாராமூலா எனும் நகரம் உண்டு. இதேபோல் சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தோன்றும் இடம் வராஹபர்வதம் எனப்படுகிறது. ஆதிவராஹரின் கோரைப் பற்களிலிருந்து துங்க பத்திரா உருவானது என்கிறது ஸ்காந்த புராணம்.

காஷ்மீர் - சங்கராசார்ய மலைக்கு ஶ்ரீஶ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தபோது (1967 ஜூன்)
காஷ்மீர் - சங்கராசார்ய மலைக்கு ஶ்ரீஶ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தபோது (1967 ஜூன்)

ஆதிசங்கரர் இயற்றியுள்ள ‘மடாம்நாய ஸ்தோத்திரம்’ எனும் நூல், மடங்களின் வழிகாட்டி. அதில் ஒரு ஸ்லோகம் இப்படிக் குறிப்பிடுகிறது: விபாண்டக மஹரிஷி பூஜித்த மலஹானிகரேஸ்வரர் சிவலிங்கம் எங்குள்ளதோ, அது ரிஷ்யசிருங்கரின் ஆசிரமமாக இருந்தது. அந்த இடத்தின் தெய்வம் வராஹர். சிருங்கேரி சாரதாபீடத்தின் க்ஷேத்திரம் ராமேஸ்வரம்; தீர்த்தம் துங்கபத்ரா; சக்தி சாரதாம்பாள்.’

சிருங்கேரி மகாஸ்வாமிகளுக்கும் காஷ்மீர அரசர்களுக்கும் தொன்றுதொட்டு குரு-சிஷ்ய சம்பந்தம் உண்டு. 1919-ல் காஷ்மீரின் பிரதாபசிம்ஹ மஹாராஜா சிருங்கேரி சாரதாபீடத்தின் 34-வது அதிபதியான ஜகத்குரு ஶ்ரீஶ்ரீசந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகளுக்கு எழுதிய கடிதங்களுள் ஒன்று, இந்தத் தொடர்பைப் பறைசாற்றுகிறது. கடிதத்தில் மஹாராஜா, ஜகத்குருவிடமிருந்து வியாஸாக்ஷதை பிரசாதம் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிருங்கேரி சாரதாபீடத்தின் 35-வது பீடாதிபதியான ஜகத்குரு ஶ்ரீஶ்ரீஅபினவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள், தமது அகில பாரத தர்ம விஜய யாத்திரை யின் அங்கமாக (1967 - ஜூன்) காஷ்மீருக்கும் விஜயம் செய்தார். அங்கு சந்திரமெளலீஸ்வர பூஜை, அருளுரைகளை நிகழ்த்தியதுடன், சங்கராசார்ய மலைக்கு விஜயம் செய்து ‘ஜ்யேச்டேச்வர ஸ்வாமி’க்குப் பூஜைகள் செய்தார்.

அப்போது, ராமேஸ்வரத்திலிருந்து சேதுராமநாத் அபயங்கர் என்ற மராட்டிய அர்ச்சகர் ஜகத்குருவிடன் சிவ தீக்ஷை மற்றும் மந்திரோபதேசம் பெற வந்தார். அவருக்கு 12.6.1967 அன்று சிவதீக்ஷை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, ஜகத்குரு ஆதிசங்கரர் ஏற்படுத்திய தேசிய ஒருமைப்பாடு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்வதற்கும், சிருங்கேரி - காஷ்மீர் - ராமேஸ்வரம் - மராட்டியப் பகுதிகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது.

ஜகத்குரு ஆதிசங்கரர் ஏற்படுத்திய முறைப்படி, ராமேஸ்வரம் ஆலயத்தில் - சிருங்கேரி மஹாஸ்வாமிகளும், அவரிடம் சிவ தீக்ஷை பெற்ற மஹாராஷ்டிர மாநில அர்ச்சகர்கள் மட்டுமே ராமநாத ஸ்வாமியின் கர்ப்பக்கிரகத்தில் பூஜை செய்ய உரிமை உள்ளவர்கள் என்பது தொன்றுதொட்டு வரும் சம்பிரதாயம்.

அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உபநயனம் நிகழ்ச்சியில், காஷ்மீர சாரதா பீடம் அமைந்துள்ள வடக்கு திசை நோக்கி, பிரம்மசாரி 8 அடிகள் எடுத்துவைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.

சிருங்கேரி சாரதாபீடத்தின் தற்போதைய பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளும் தமது அகில பாரத தர்ம விஜய யாத்திரையின் அங்கமாக, காஷ்மீருக்கு விஜயம் செய்தார். 27.10.1994 அன்று சங்கராசார்ய மலைக்குச் சென்று உலகமக்களின் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்தார். இவ்வாறு காஷ்மீரத்துடன் பல்லாண்டுக் காலம் தொடர்புடன் திகழும் சிருங்கேரி சாரதா பீடமே, காஷ்மீர் சாரதாபீட ஆலயத்தை மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் கைங்கர்யத்தை மேற்கொள்வது மிகவும் பொருத்தமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism