திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 27 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா ஆகியன வெகுசிறப்பாக நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் விழாக்கள் என்பதால் பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பழநி முருகன் கோயில் மலை மீதுள்ள நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கிய சித்தர் போகரின் ஜயந்தி விழா நேற்று (18.5.23) விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்தர் போகரின் ஜீவசமாதி பழநி மலைக்கோயில் வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. பழநி முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சித்தர் போகரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். போகர் ஜீவசமாதி அவரின் சீடர் சித்தர் புலிப்பாணியின் வாரிசுகள் இன்றுவரையில் பராமரித்து வருகின்றனர். சித்தர் போகரின் ஜயந்தி விழா ஆண்டுதோறும் மலை மீது உள்ள போகரின் ஜீவசமாதியில் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சித்தர் போகர் மற்றும் புலிப்பாணியால் வணங்கப்பட்டு வந்த பழைமையான பச்சை மரகத லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனுக்குப் பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழ வகைகள் உட்பட 14 வகையான பொருட்களால் பழநி ஆதினம் ஸ்ரீமத் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் தலைமையில் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் மரகதலிங்கம் கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு போகர் வழிப்பட்ட மற்ற சிலைகள், சக்கரங்களுடன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு ருத்ராட்சம், சுவாமி படங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தமிழகம் மட்டுமில்லாது ஜப்பான் நாட்டில் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட ஜப்பானிய முருக பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.