ராமநாதபுரத்துக்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. இங்கு பிரசித்திபெற்ற ஆதி ஜெகந்நாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் இது 44-வது திவ்ய தேசம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணம் மற்றும் சரித்திரச் சிறப்புகள் கொண்டும் திகழ்கிறது இந்தத் தலம்.
பங்குனி மாதத்தில் ஆதி ஜெகந்நாதர் பிரம்மோற்சவம், சித்திரையில் பட்டாபிராமன் பிரம்மோற்சவம், ஆடியில் சூடிக்கொடுத்த நாச்சியார் உற்சவம், ஆவணியில் திருப்பு வித்திரோத்சவம், மார்கழியில் பகல் பத்து - ராப்பத்து உற்சவங்கள், புரட்டாசியில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமி என விழாக்களால் களைகட்டும் அற்புத க்ஷேத்திரம் இது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 26- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 9-ம் நாள் நிகிழ்ச்சியாக நேற்று திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் எழுந்தருளினார் பட்டாபிஷேக ராமன். கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. 'ஜெய் ஸ்ரீராம்' என்ற ராம நாம முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவின் 10-வது நாள் நிகழ்ச்சியாக இன்று பட்டாபிஷேக ராமர் மற்றும் பெருமாள், `சேதுக்கரை' கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் சிறப்புற நடைபெற்றது.