உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது துங்கநாத் சிவன் கோயில். துங்கநாத் பஞ்ச கேதாரத் தலங்களில் ஒன்று.
கேதாரம் என்றால் உடல். சிவபெருமானின் பிரமாண்ட சரீரத்தின் சில பாகங்கள் காட்சிகொடுத்த ஐந்து தலங்களுமே பஞ்ச கேதாரத் தலங்கள் என்று போற்றுகிறோம். அவற்றில் துங்கநாத், சிவபெருமானின் கைகள் தரிசனம் கொடுத்த தலம். இமயமலைச் சாரலில் இருக்கும் பஞ்சபூதத் தலங்களில் துங்கநாத் ஆகாயத் தலமாகத் திகழ்கிறது. இந்தத் தலத்தின் சிறப்புகளில் ஒன்று, இதுவே உலகின் உயரமான இடத்தில் இருக்கும் சிவாலயம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலிக் மலையில் 3,680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த துங்கநாத் திருக்கோயில். துங்கநாத் என்பதற்கு 'கொடுமுடிகளின் நாதர்' என்பது பொருள். பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்ட தலம் இது என்பது சிறப்பு.

இந்த ஆலயத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக மத்திய அரசாங்கம் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையின் சிலவற்றைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். பழைமையான துங்கநாத் கோயிலின் கட்டுமானம் சில இடங்களில் 5 முதல் 10 டிகிரிவரை சாய்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள துங்கநாத் கோயில் 8 - ம் நூற்றாண்டில் கட்யூரி ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. பழைமை காரணமாக கோயிலின் அடித்தளத்தில் ஏதேனும் ஒரு கல் நகர்ந்திருக்கலாம் அல்லது சிதைந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வுக்குப் பின் நிபுணர்களின் வழிகாட்டுதல்களின்படி பாதிப்புகுள்ளான பகுதி சீர்செய்யப்படும். இந்தச் சாய்வு கோயிலின் கட்டுமானத்துக்கு மேலும் ஏதேனும் சேதாரத்தை உண்டாக்குமா என்பதையும் மேற்கொண்டு ஆய்வு செய்துதான் சொல்லமுடியும்.

பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்தால் அதற்கேற்பப் பராமரிப்பு செய்யப்பட்டுக் கோயிலின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்தனர் தொல்லியல் துறையினர்.துங்கநாத் திருக்கோயில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் திருத்தலம். எனவே அதை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதுவே பக்தர்களின் கோரிக்கை.