Published:Updated:

நிறம் மாறும் அதிசய விநாயகர்

அதிசய விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
அதிசய விநாயகர்

ஆறு மாதம் வெள்ளை ஆறு மாதம் கறுப்பு

நிறம் மாறும் அதிசய விநாயகர்

ஆறு மாதம் வெள்ளை ஆறு மாதம் கறுப்பு

Published:Updated:
அதிசய விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
அதிசய விநாயகர்

ம்கார வடிவினர் பிள்ளையார். வேழ முகமும் பேழை வயிறுமாக அருளும் பிள்ளையாரின் திருக்கோலமே அற்புதம்தான். கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், பஞ்சமுக விநாயகர், கடல்நுரைப் பிள்ளையார், சங்குப் பிள்ளையார் என அருளும் அவரின் விசேஷ திருவடிவங்களால் சிறப்புப் பெற்ற தலங்கள் பல உண்டு.

அவ்வகையில், கணபதி பெருமானின் திருமேனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறும் அற்புதம் நிகழ்கிறது ஓர் ஊரில். அவரை தரிசித்து வழிபடும் அன்பர்களின் வாழ்விலும் பல அதிசயங்களை நிகழ்த்தி அருள்கிறாராம் அந்தப் பிள்ளையார்!

அரவிந்தாக்‌ஷன்
அரவிந்தாக்‌ஷன்
மேல்சாந்தி மகேஷ் போற்றி
மேல்சாந்தி மகேஷ் போற்றி
அதிசய விநாயகர் திருக்கோயில்
அதிசய விநாயகர் திருக்கோயில்


நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 .மீ தொலைவிலும் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும் உள்ளது கேரளபுரம் என்ற ஊர். இங்கு அழகுற அமைந்துள்ளது அருள்மிகு மஹாதேவர் அதிசய விநாயகர் திருக்கோயில்.

ஓடுகளால் வேயப்பட்ட கூரையுடன் கூடிய கலைநயம் மிக்க நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. பழைமையான மதில்கள், பக்கவாட்டு நுழைவாயில்கள் எனத் திகழ்கிறது ஆலயம். உள்ளே நுழைந்ததும் வாயிலுக்கு நேராக அருள்மிகு மகாதேவர் சந்நிதி கொண்டிருக்கிறார். இடது புறத்தில் அரசமரத்தடியில் கூரை இல்லாமல்... வெண்பட்டு உடுத்தி அருகம்புல் மாலையுடன் அழகுக்கோலத்தில் தரிசனம் தருகிறார் அதிசய விநாயகர். பக்தர்கள் நின்று வணங்க வசதியாக, ஓட்டுக் கூரையுடன் கூடிய சிறிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் முதலில் இவரை தரிசித்துவிட்டே ஆலய வழிபாட்டைத் தொடர்கிறார்கள்.

இப்பகுதி மக்களுக்கு இந்தப் பிள்ளையார் கண்கண்ட தெய்வம். ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர் அரவிந்தாக்‌ஷனிடம் பேசினோம். ``காரியம் கைகூட வேண்டி அதிசய விநாயகரை வழிபட வந்தோம்’’ என்றவர், இந்தப் பிள்ளையாரின் பெருமையைப் பகிர்ந்துகொண்டார்: “இந்தக் கோயில் ஆயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது என்கிறார்கள். சிவ க்ஷேத்திரமாக இருந்தாலும் கணபதிக்கு இங்கு கூடுதல் விசேஷம். இவர் ஆறு மாதம் வெள்ளையாகவும் ஆறு மாதம் கறுப்பாகவும் காட்சி தருவது, கலி யுகத்தின் அதிசயம்தான். உத்திராயன காலத்தில் கறுப்பாகவும் தட்சிணாயன காலத்தில் வெள்ளையாகவும் மாறிவிடுவார் இந்தப் பிள்ளையார்!

இதோ ஆடி மாதம் - தட்சிணாயன காலம் ஆரம்பித்துவிட்டது. பிள்ளையாரின் மேனி மெள்ள வெளுக்க ஆரம்பித்துவிட்டதைப் பார்த்தாலே தெரியும். அதேபோல் உத்தராயனம் - தை மாதத் தொடக்கத்தில் இந்தப் பிள்ளையார் விக்கிரகத்தில் பாதப் பகுதியில் முதலில் கறுப்புப் புள்ளிகள் தோன்றும். பின்னர் படிப்படியாக முழு உருவமும் கறுப்பாக மாறிவிடும். தோற்றத்தில் மட்டுமல்ல வரம் அருள்வதிலும் இவர் அற்புதர்!’’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் அரவிந்தாக்‌ஷன்.

அதிசய விநாயகர் சந்நிதி
அதிசய விநாயகர் சந்நிதி
விநாயகர் சந்நிதி
விநாயகர் சந்நிதி
அதிசய பிள்ளையார் கோயில்
அதிசய பிள்ளையார் கோயில்
கோயில் திருக்குளம்
கோயில் திருக்குளம்

இந்த அதிசய பிள்ளையார் இங்கு சந்நிதி கொண்டது எப்படி?

திருவிதாங்கூர் மன்னராக இருந்த கேரள வர்மா தம்பிரான் ராமேஸ்வரத்துக்கு கடலாடச் சென்றார். சமுத்திரத்தில் அவர் நீராடியபோது காலில் ஏதோ கல் இடறியிருக்கிறது. எடுத்துப் பார்த்தால் தோற்றத்தில் விநாயகரின் உருவுடன் திகழ்ந்ததாம் அந்தக் கல்.

பயபக்தியுடன் அதை எடுத்துவந்த மன்னர், திருவனந்தபுரம் செல்லும் வழியில் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தாராம். ஆரம்பத்தில் ஆறு அங்குல உயரம் இருந்த பிள்ளையார், இப்போது சுமார் ஒன்றரை உயரம் வளர்ந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

கோயிலின் வளாகத்தில் நாகராஜா, சப்த கன்னிகள் ஆகியோரின் சந்நிதிகளும் மஹாதேவர் கோயிலுக்குள் சண்டேஸ்வரர், நடராஜர் - சிவகாமியம்மை சந்நிதிகளும் உள்ளன. அதிசய விநாயகர் கோயிலின் மேல்சாந்தி மகேஷ் போற்றியிடம் பேசினோம்.

``தடைகள் உடைபடவும் நற்காரியங்கள் கைகூடவும் வழிபடவேண்டிய பரிகாரத் தலம் இது. கணபதிக்கு மோதகம், அப்பம், அவல், கொழுக்கட்டை ஆகியவற்றைப் படைத்து வழிபடுகிறார்கள். அதேபோல், 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டும் பிள்ளையாரை வேண்டிச் செல்கிறார்கள். இப்படி வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் நினைத்தபடி கைகூடும்; விநாயகர் நம் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்துவார்.

இன்னொரு சிறப்பும் உண்டு. கேரளபுரம் அதிசய விநாயகர், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார், பிள்ளையார்பட்டி விநாயகர் ஆகிய மூவரையும் ஒரே நாளில் தரிசித்துத் தொழுதால், எவ்வித தோஷமாக இருந்தாலும் அது விலகிவிடும்; ஜன்மம் எடுத்த பலனை அடையலாம் என்பது ஐதிகம்.

சென்னை, ஈரோடு, கோவையிலிருந்து நிறைய பேர் இந்தக் கோயிலுக்கு அதிகாலையில் வருவார்கள். இங்கு தரிசனம் முடித்ததும் திருச்சி அடுத்து பிள்ளையார்பட்டி என்று பயணப்படுவார்கள்.

இங்கு வளர்பிறை சதுர்த்தி தினத்தில், விடியற்காலை 4:30 முதல் 6:30 மணி வரை மஹா கணபதி ஹோமம் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மாலையில் அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கும். இந்தப் பிள்ளையாருக்கு ஆடி வெள்ளிக் கிழமைகள் மிகவும் உகந்தவை. ஆடி வெள்ளிக்கிழமைகளிள் இவரை தரிசித்து வழிபடுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும். ஆவணியில் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக நடைபெறும்.

மாசித் திருவிழாவும் இங்கே விசேஷம். இக்கோயிலின் மகாதேவர் ரெளத்திர பாவம் உள்ளவர். அவரை சுடலை ஈஸ்வரர் என்றும் சொல்வார்கள். இங்குள்ள ஈசனுக்குச் சிவப்புப் பட்டாடை சமர்ப்பித்து வழிபடுவதால் சகல துக்கங் களும் விலகும்; சுபிட்சங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இங்கு நடைபெறும் மகா மிருத்யுஞ்ஜய ஹோமமும் மிகவும் விசேஷம்’’ என்றார்.

அடுத்தமுறை குமரி தீரத்துக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் கேரளபுரத்துக்கும் சென்று இந்த அதிசயப் பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்விலும் பல அதிசயங்களை நடத்துவார் இந்த அதிசய விநாயகர். இந்தத் திருக்கோயில் தினமும் அதிகாலை 5 முதல் 10 மணி வரையும்; மாலையில் 5 முதல் 7 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

கோயில் கிணறு
கோயில் கிணறு

இந்திர காந்தக் கல்!

இங்கு இந்த விநாயகர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுவதற்கு, அவரின் திருவிக்கிரகம் இந்திரகாந்தக் கல்லால் அமைக்கப் பட்டிருப்பதே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்ததாகக் கூறுகிறார்கள்.

வெள்ளையாக மாறும்போது விநாயகரின் சிரத்திலிருந்து வெண்மை நிறம் ஏற்படுகிறது. கறுப்பு நிறமாக மாறும்போது, பாதத்தில் இருந்து கறுப்புப் புள்ளிகள் தொடங்கி விநாயகரின் திருமேனி முழுவதும் கறுப்பாக மாறிவிடுமாம்.

பிள்ளையாரின் திருமேனி மட்டுமல்ல கோயில் கிணற்றுத் தண்ணீரும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை நிறம் மாறுமாம். தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் கிணற்று நீர் தெளியத்தொடங்கும். கொஞ்சநாள்களிலேயே தரை தெரியும் அளவுக்கு தெளிந்துவிடும். அதேபோல், உத்தராயனம் தொடங்கும் தை மாதத்தில் கிணற்றில் எட்டிப் பார்த்தால் தண்ணீர் தெளிவில்லாமல் கறுத்திருக்கும்; தரையைக் காணமுடியாது. இரைத்து வெளியே எடுத்தால் மட்டுமே தெளிவான தண்ணீரைக் காண இயலும்.

அரச மரமும் அப்படித்தான்... பிள்ளையார் வெள்ளையாக இருக்கும் போது பசுமையாய்க் காட்சி தரும். அவர் கறுப்பாக மாறும்போது, இலைகள் உதிர்ந்து காட்சி தரும் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism