Published:Updated:

`திருப்பதியில் 20,000 ரூபாய்க்கு வி.ஐ.பி தரிசன டிக்கெட்டா?!' -தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு #Tirupati

எஸ்.கதிரேசன்

திருமலைக்கு வரும் வி.ஐ.பி-க்கள் எல்-1, எல்-2, எல்-3 என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பதி
திருப்பதி

திருமலை திருப்பதி வேங்கடசப்பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட்டுடன்கூடிய சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் தரிசனம், வி.ஐ.பி-க்கள் தரிசனம் எனப் பல்வேறுவிதமான தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

திருப்பதி
திருப்பதி

திருமலைக்கு வரும் வி.ஐ.பி-க்கள் எல்-1, எல்-2, எல்-3 என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தரிசன நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை என 3 மணிநேரம் நடைபெற்று வந்தது.

சமீபத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வலியுறுத்தலின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி முதல் வி.ஐ.பி தரிசன நேரத்தை ஒன்றரை மணி நேரமாகக் குறைத்தது.

திருமலா
திருமலா

இதனால் வழக்கத்தைவிட 5,000 பக்தர்கள் கூடுதலாகத் தரிசனம் செய்ய முடிகிறது.

இந்தநிலையில், வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் 20,000 ரூபாய் கட்டணத்தில் தேவஸ்தானம் சார்பில் விற்கப்பட உள்ளதாகவும் இதை எவரும் உரிய கட்டணம் செலுத்தி இந்த வகையான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற செய்தியொன்று சமூக வலைதளங்களில் பரவியது.

திருமலை
திருமலை

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதில் கட்டண மாறுதல்கள் எதுவும் தற்போது இல்லை. எப்போதுமுள்ள நடைமுறையே பின்பற்றப்பட்டுவருகிறது. பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். எவரிடமும் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளது.