அருள்மிகு மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் ஆலயம், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழமையானது. இக்கோயில் பல அதிசயங்களையும் புராணப் பின்னணியும் கொண்டது.

ஒரு முறை பிரம்மதேவரின் கோபத்திற்கு ஆளாகி, பூமியில் பிறந்த சூரிய பகவான். நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, வன்னி மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவபெருமானை வழிப்பட்டார், சூரிய பகவான். பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவபெருமான், சாபவிமோசனம் அளித்து, அருளினார். இதன் காரணமாக இக்கோவில் மூலவரான சிவபெருமான் 'ஸ்ரீரவீஸ்வரர்' (ரவி என்றால் சூரியன்) என வழங்கப்படுகிறார். சிவபெருமான் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு எதிரே உள்ள சுவரில் சிவலிங்க வடிவிலான துளை உள்ளது. சூரியக் கதிர்கள் சிவலிங்கத் துவாரத்தின் கோயிலின் முன் மண்டபத்தில் வழியே மூலவர் ரவீஸ்வரர் மீது அன்றாடம் அதிகாலை விழுவது ஈசனுக்கு செய்யப்படும் முதல் பூஜை என நம்பப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இக்கோயிலில் சிவன் சந்நிதி மட்டுமே இருந்ததாகவும், பின்னர் இப்பகுதியின் அரசன் குழந்தை இல்லாததால், தனக்கு குழந்தை பாக்கியம் தருமாறு இறைவனிடம் வேண்டியதாகவும், இதனால் சிவபெருமான் பார்வதி தேவியை அரசனின் மகளாகப் பிறக்கும்படி அறிவுறுத்தினார்.பிறகு, பார்வதி தேவி அரசருக்கு மகளாகப் பிறந்தார். அவளுக்கு மரகதாம்பிகை என்று பெயரிட்டு அவளை வளர்த்தார் அரசர். அவள் திருமண வயதை அடைந்தபோது, சிவபெருமான் மரகதாம்பிகையை மணந்தார் எனவும் இவ்வாறே அன்னை சந்நிதி பின்னர் வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் மகாபாரதம் எழுதிய வேதவியாசர் இக்கோயில் சிவபெருமானை வழிபட்டு, பாடல் பாடியதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே வேதவியாசருக்கு இக்கோயிலில் மட்டுமே தனி சந்நிதி உள்ளது. இதன் காரணமாகவே இப்பகுதிக்கு "வியாசர்பாடி" என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கூற்றுப்படி பார்த்தால், வேதவியாசர் இந்த இடத்தில் தரிசனம் செய்திருந்தால், இந்த கோயிலின் மற்றும் இறைவனின் பழைமை அளவிட முடியாதது.
வன்னி மரம் - கோயிலின் ஸ்தல விருட்ஷம். சூரிய பகவானால் உருவாக்கப்பட்ட கோயிலுக்கு எதிரே ‘சூரிய புஷ்கரிணி’ என்ற குளமும் உள்ளது.
சுந்தர விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர், பைரவர், ஐயப்பன், ஸ்ரீஆஞ்சநேயர், நாயன்மார்கள் மற்றும் நால்வர் சந்நிதியும் உள்ளன. மூலவர் சந்நிதிக்கு எதிரே சூரிய பகவான் மற்றும் சந்திரன் விக்கிரகங்கள் உள்ளன. சிவன் சந்நிதிக்கு மேலே உள்ள இந்திரவிமானம் கூடு வடிவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் வாரந்தோறும் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பௌர்ணமி, கிருத்திகை, பிரதோஷ நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மகாசிவராத்திரி, பங்குனி உத்திர திருநாள் மற்றும் அன்னை மரகதாம்பாளுக்காக நிகழும் நவராத்திரி தசரா இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

இக்கோயிலில் அறியாமல் பாவம் செய்த பக்தர்களுக்கும் முன் ஜென்ம பாவத்திலிருந்தும் விமோசனம் வழங்குகிறார் ரவீஸ்வரர். திருமணம் ஆகாத பக்தர்கள் மற்றும் குழந்தைச் செல்வம் பெற வேண்டுபவர்கள் அன்னை மரகதாம்பாளை வணங்கினால் எண்ணியது ஈடேறும். கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பிள்ளைகள் வேதவியாசரை வணங்கிறார்கள். சர்ப்ப கிரகதோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்குள்ள மரத்தடியில் உள்ள நாகருக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் வியாசர்பாடி ரவீஸ்வரரை ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சென்று தரிசித்து பலன் பெற்று வர வேண்டுகிறோம்.